2/12/2018

நெட்டாற்றின் உலகப் பேரணை (The largest dam in the world)



நெட்டாற்றின் உலகப் பேரணை (The largest dam in the world)
இமயமலைக்கு வடக்கே பரந்து விரிந்திருப்பதும் புவியின் உயர்மேட்டு நிலமானதுமான உலகின் கூரையென வழங்கப்படும் திபெத் பீடபூமியின் பனிமலைகளும் பனிப்பாறைகளும் சிந்து, பிரம்மபுத்திரா, மீகாங், மஞ்சளாறு உள்ளிட்ட பல ஆறுகளுக்குப் பிறப்பிடம். இதேபீடபூமியின் மறுபக்கத்தில், கடல் மட்டத்திலிருந்து ஐந்தரை கிலோமீட்டர்கள் உயரத்தில் சேங் சியாங் (நெடிய ஆறு, நெட்டாறு) ஆறும் இங்கிருந்துதான் உருக்கொண்டு, சீனாவின் யுன்னான் மாநிலத்திற்குள் நுழையும் போது, 16 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து பல்வேறு அருவிகளின் வாயிலாக வீழ்ந்து ஆயிரம் அடிக்குக் கீழிறங்கி விடுகிறது. சீனாவின் 40% விழுக்காட்டு நிலத்திற்கும் வடிகாலாக இருப்பது இந்த நெட்டாறுதான். பல்வேறு துணையாறுகள் மேட்டுநிலங்கள், மலைப்பள்ளத்தாக்குகள் வழியாக வந்து நெட்டாற்றில் தம்மை இணைத்துக் கொள்கின்றன. படிப்படியாகக் கீழிறங்கி மலைகளின் கடைசிக் கட்டமாக இருக்கும் சாங்கிங் மலைப்பகுதிக்கு வந்து சேரும் வண்டல்மேட்டு வண்ணத்தை தன் உருவாக்கிக் கொள்ள, நெட்டாறு எனும் பெயரிலிருந்து, செம்மண்ணாறு (யாங்சி) எனத் தன் பெயரை மாற்றிக் கொள்கிறது ஆசியக்கண்டத்தின் மீகநீண்டதும் 6380 கிமீ நெடிய பயணத்தைக் கொண்டதுமான இந்த ஆறு. அடுத்தடுத்து நாஞ்சிங், நாந்தோங், கழிமுகநகரும் வணிகத் தலைநகருமான சாங்காய் முதலான பெருநகரங்களினூடே பாய்ந்து கிழக்குச்சீனக் கடலில் அமைதி கொள்கிறது இந்த நெட்டாறு. சீனாவின் 40 கோடிமக்களின் வாழ்வாதாரமாக வேளாண்மையின் முதுகெலும்பாக, கடலினின்று உள்ளே 1000 கிலோமீட்டர் வந்து போகக் கூடிய போக்குவரத்துக் களமாக, சீனாவின் நான்காயிரமாண்டுகால வரலாறு, நாகரிகம், பண்பாட்டைப் படம் பிடித்துக் காட்டக்கூடிய பல தொன்மையான அடையாளங்களைத் தன்னகத்தே கொண்டிருக்கும் இந்த நெட்டாற்றினைச் ’சீனாவின் துயரம்’ என்று குறிப்பிடுகிறார் ஆய்வாளர் ஒலிவியா நிக்கோலசு. மலைகள் சூழ பள்ளத்தாக்குகளின் வழியே பாய்ந்து வரும் யாங்சி, சமவெளியை அடையும் போது அவ்வப்போது கரைகளை உடைத்துக் கொண்டு உழவுநிலம், ஊருக்குள்ளெனப் புகுந்து விடும். கரையோரங்களில் தடுப்புச்சுவர்களைக் கட்டிக் காப்பாற்றுவது விவசாயிகளுக்குப் பெரும் சவாலாகவே இருந்து வருகிறது. முறையே 1870, 1931, 1954, 1998, 2010 ஆகிய ஆண்டுகளின் போது இடம் பெற்ற வெள்ளப்பெருக்கில் பெருத்த சேதத்தை உண்டாக்கியது யாங்சி. கடந்த 75 ஆண்டுகளில் கிட்டத்தட்ட நான்கு இலட்சம் பேருக்கும் மேலாக யாங்சியின் வெள்ளப்பெருக்கால் உயிரிழந்திருக்கின்றனர். இலட்சோப இலட்சம் மக்கள் உடைமைகளை இழந்தனர். 1931ஆம் ஆண்டு நிகழ்ந்த யாங்சி வெள்ளப்பெருக்கு சீனாவின் பேரழிவு என வர்ணிக்கப்பட்டது. சீனாவின் புரட்சித்தலைவன் மாவோ, யாங்சியின் குறுக்கே அணைகட்டி, வெள்ளப்பெருக்கினைக் கட்டுக்குள் கொண்டுவருவேனெனச் சூளுரைத்தார். ஆனாலும் அவர் காலத்தில் இதற்கான பணிகள் துவங்கப்படவில்லை. அணை கட்டினால் இயற்கைச்சூழல் வெகுவாகப் பாதிக்கப்படுமெனவும், விளைவுகள் பின்னடைவையே கொடுக்குமென்றும் இயற்கை ஆர்வலர்களும் பொறியாளர்களும் எதிர்ப்புத் தெரிவித்தனர். அவர்கள் யாவரும் தண்டனைக்காட்பட்டனர். 1992ஆம் ஆண்டு நடந்த, சீனப் பாராளுமன்றத்தில் 2633 ஓட்டுகளில் 1767 ஓட்டுகள் அணை கட்டுவதற்கு ஆதரவாகப் பதிந்தன. இதனைத் தொடர்ந்து டிசம்பர் 14, 1994ஆம் நாள் அணைக்கட்டுப் பணிகள் துவங்கி கடந்த 2012ஆம் ஆண்டு நிறைவடைந்தன. மலைகளுக்கிடையே மூன்று இடுக்குப் பள்ளத்தாக்குகள், குயுடாங், வு சியா, சிலிங் ஆகியன அமைந்திருக்கும் இடத்தையொட்டி இந்த அணை கட்டப்பட்டிருப்பதால், இவ்வணைக்கு முவ்விடுக்கு அணை (three gorges dam) எனப் பெயரிடப்பட்டு, நாட்டின் தொழில்நுட்பத்தின் குறியீடாகப் பணத்தில் அச்சடிக்கப்படும் அளவுக்கு முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருக்கும் அணைச்சுவரின் நீளம் 2.3கிலோமீட்டர், 607 அடிகள் உயரம் கொண்டு, 574 அடி உயரத்துக்குத் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டிருக்கக் கூடிய அளவில், உலகிலேயே பெரிய அணையாக இது விளங்குகிறது. பென்னிகுவிக் என்பாரால் தமிழ்நாட்டில் கட்டப்பட்டிருக்கும் பெரியாறு அணையின் உயரம் 155 அடியாகவும் தண்ணீர் தேக்கி வைக்கப்படுவது 130அடியாகவும் இருந்து வருகிறது. ஒப்பீட்டு அளவில் இந்த முவ்விடுக்கு அணை எவ்வளவு பெரியது என்பதை நாம் நினைத்துப் பார்த்துக் கொள்ளலாம். இவ்வணையில் உற்பத்தி செய்யப்படும் மின்சக்தி சீனாவின் தேவையில் 10 விழுக்காட்டினை ஈடு செய்கிறது. மேலும், கிழக்குச் சீனக்கடலில் இருந்து சீனாவின் மையப் பகுதியை நோக்கி 1000 கிலோ மீட்டர்கள் வரை சரக்குக்கப்பல்கள் வந்து செல்ல இந்த அணை உதவிபுரிவதால், சீனப் பொருளாதார வளர்ச்சிக்கு மிகப் பெரிய காரணியாக இது அமைந்திருக்கிறது என்பதில் இருவேறு கருத்துகள் இருக்க முடியாது. இத்திட்டத்திற்குச் செலவிடப்பட்ட 24 பில்லியன் டாலர்களை பத்தே ஆண்டுகளில் ஈடுகட்ட முடியுமென அறிவித்தது சீன அரசு. சீனாவின் அதிசயமாய் அறியப்பட்ட பெருஞ்சுவருக்கு இணையாக இந்த முவ்விடுக்கு அணையும் சிறப்பிடத்தைப் பெற்று, சீனாவின் அணைகட்டும் திறனும் வர்த்த ரீதியில் மற்ற நாடுகளுக்கு வணிகம் செய்யப்படுகிறது. சிறப்புமிக்க சாதனையாகப் போற்றப்படும் இந்த அணைக்கட்டின் மறுபக்கத்தையும் ஆய்ந்து பார்க்க வேண்டியது மனிதகுலத்தின் தேவையெனக் கொந்தளிக்கின்றனர் சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர்களும் மனிதவுரிமை ஆர்வலர்களும். ஆற்றினை மறித்து அணைகட்டியதில் நீரில் அமிழ்ந்து போனவையும் அப்புறப்படுத்தப்பட்டதுமாக 13 நகரங்கள், 140 பேரூர்கள், 1350 சிற்றூர்கள், மொத்தமாக இடம் பெயர்ந்தோர் 14 இலட்சம் பேர் என்கிறது அரசுத் தரப்பு. ஆனால் இதைவிட அதிகமாக இருக்குமென்கின்றனர் மனித உரிமை ஆர்வலர்கள். ஏராளமானோர்க்கு உரிய இழப்பீடோ, நிவாரணமோ வழங்கப்படாமல் பெருமளவில் ஊழல் நடந்து, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. நகரமயமாக்கல் திட்டத்தில் அவர்கள் சேர்க்கப்பட்டதால், அக்குற்றச்சாட்டினை மறுக்கிறோமென அறிவித்தன உள்ளூராட்சி நிர்வாகங்கள். அணை கட்டப்பட்டிருக்கும் இடத்திற்கு முன்பான அந்த பள்ளத்தாக்கு இடுக்குகளின் மலையுச்சியில், யாருமே அணுகமுடியாத பாறையிடுக்குகளில் மூன்று அல்லது நான்கு மனித உடல்கள் ஒரு சேர வைக்கப்பட்டிருக்கும் மரக்கலத்தாலான கல்லறைப் பெட்டிகள் சீனாவின் நான்காயிரமாண்டுப் பழமையான தொன்மைக்குச் சான்றாக விளங்கிக் கொண்டிருந்தன. இப்படியான சிறிதும் பெரிதுமான 12000 தொல்லியலாய்வு இடங்கள் முற்றாகக் கைவிடப்பட்டு நீருக்குள் அமிழ்ந்து போயின என்கிறார், யாங்சி ஆற்றில் 50 ஆண்டுகாலம் கப்பல் மாலுமியாக இருந்த டான் யுங். நான்காயிரம் ஆண்டு வரலாற்றுத் தடத்தோடு, தான் பிறந்து வாழ்ந்த தன் வீடும் இதோ இந்த இடத்தில்தான் இருந்ததென அணையிலிருந்து சில மைல்கள் தொலைவிலிருக்கும் ஆற்றுநீர்ப்பரப்பைக் காண்பிக்கிறார் அவர். பணிகள் எல்லாம் முடிந்தபின், 2003ஆம் ஆண்டு, ஜூன் ஆறாம் நாள், 580 மீட்டர்கள் நீளம் கொண்டதும் 140 மீட்டர்கள் உயரமானதுமான ஆற்றுக்குக் குறுக்கே கட்டப்பட்டிருந்த தற்காலிகச் சுவரை இடிப்பதற்கு, 2540 வெடிக்குச்சிகளும் 192 டன் எடையுள்ள வெடிமருந்தும் பாவித்து 12 விநாடிகளில் அச்சுவர் தகர்த்தெறியப்பட்டது. அப்படியென்றால், ஆற்றின் வழிப்பாதையிலிருந்து விலகி மறுபக்கமாக மலைப்பாறைகளை வெடித்துத் தகர்ப்பதற்கு எத்தனை மடங்கு வெடிமருந்து பாவிக்கப்பட்டது, பத்தாண்டு காலம் இடம் பெற்ற பணியில் உயிரிழந்தோர் எண்ணிக்கை எவ்வளவு போன்ற விபரங்களை அறிவிக்கத் தயாராவென கேட்கின்றனர் இயற்கை ஆர்வலர்கள். நூற்றுக்கணக்கான மாண்டு போனதாக அறியப்படுகிறது. மலைகளுக்கிடையே பெருமளவு தண்ணீரைத் தேக்கி வைத்திருப்பதனால் தொடர்ந்து ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. சிறிதும் பெரிதுமாக 3000 முறை நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கின்றதெனச் சொல்லி, அணை கட்டுவதற்கு முன், கட்டியதற்குப் பின் எனப் புள்ளிவிபரங்களைக் காண்பித்து விமர்சனங்களை முன்வைக்கின்றனர் நிலப்பண்பு ஆய்வாளர்கள். 2008ஆம் ஆண்டு இடம் பெற்ற நிலநடுக்கம் மட்டுமே 87 ஆயிரம் உயிர்களைப் பலி கொண்டுவிட்டது. இவற்றுக்கும் அணைக்கும் தொடர்பில்லையென மறுக்கிறது அரசுத்தரப்பு. பனிப்பாறையில் பிறந்து, வண்டல்மண்ப் பூமியில் வளர்ந்து வந்த யாங்சியை அணைக்கட்டு மறித்து, மேற்புறத்துத் தண்ணீரைப் பாவித்து மின்சக்தியை எடுத்த பின்னர் கீழ்ப்பகுதிக்கு அனுப்புவதால், ஆற்றோடு வரும் வண்டல் யாவும் அணையிலேயே தேங்கி, அணையின் கொள்ளளவு வெகுவேகமாகக் குறைந்து வருவதாகவும் கவலை தெரிவிக்கின்றனர் ஆய்வாளர்கள். இதனைச் சரி செய்வதற்காக, ஆற்றின் தலைப்பகுதியில் மேலும் பல அணைகளைக் கட்டத் திட்டமிட்டுப் பணிகள் நடந்து வருகின்றன. அவை கட்டப்பட்டாலும், நேரப் போகும் துயரத்திலிருந்து தப்பவே முடியாது என்கின்றனர் இயற்கை ஆர்வலர்கள். ஆங்காங்கே வண்டல்மண் தடுக்கப்பட்டு விடுவதால், இந்த பேரணைக்குக் கீழே இருக்கிற ஆற்றின் கரைகள் கரைந்து போகும். மழைக்காலத்தில் வெள்ளச்சேதம் மேலும் வலுவடையுமெனச் சொல்லி, அண்மையில் நிகழ்ந்த மழைக்கால இடர்களைச் சுட்டிக் காண்பிக்கின்றனர். அது மட்டுமல்லாது, அமெரிக்காவின் நியூயார்க்கைப் போல, இந்தியாவின் மும்பையைப் போல, வணிகத்தலைநகராக விளங்கும் சாங்காய் நகரம் கழிமுகத்தின் கரையில் இருப்பதைச் சுட்டிக் காட்டி, வண்டல்க்குறைபாட்டால் கழிமுகக்கரைகள் வலுவீனம் கொண்டு, கடலுக்குள் நகரம் புதையுண்டு போகவோ, அல்லது கடல்மட்டம் உயரும் போது நகருக்குள் வெள்ளம் புகும் ஆபத்தோ வருங்காலத்தில் ஏற்பட்டு விடுமென அஞ்சுகின்றனர் இயற்கை அறிஞர்கள். இயற்கைச்சூழல் மாசுபடுதலுக்கு அணையும் ஒரு காரணமென்கின்றனர். சீனாவின் நாற்பது விழுக்காட்டு நிலப்பரப்பின் வடிகாலாக இருக்கும் இந்த ஆற்றில் கொட்டப்படும் கழிவுகள் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. யாங்சியில் கொட்டப்படும் கழிவுகளின் அளவு 2001ஆம் ஆண்டு 21 பில்லியன் டன்களாகவும், 2003ஆம் ஆண்டு 33+ பில்லியன் டன்களாகவும் இருந்தன. அரசாங்கமும் ஆற்றினைத் தூய்மைப்படுத்த நாளொன்றுக்கு சில மில்லியன் டாலர்களைச் செய்து வருகிறது. கொட்டப்பட்ட கழிவுகளைத் தூயமைப்படுத்துவதற்கு மாறாக ஏன் கொட்டப்படுவதைத் தவிர்க்க நடவடிக்கைகள் மேற்கொள்ளக் கூடாதெனக் கேட்டுப் போராடுபவர்களும் உண்டு. அரசுத் தரப்பில் இடம் பெறும் ஊழல்தான் டன் கணக்கில் கழிவுகளை ஆற்றில் கொட்டும் நிறுவனங்களைக் காப்பாற்றுகிறதென்பது பொதுமக்களின் குற்றச்சாட்டு. தொழில்நுட்பம், உற்பத்தி முதலானவற்றில் மேன்மை கொள்ளும் மனித இனம், இயற்கை பேணலில் பின்னடைவு கொள்வது எந்நேரத்திலும் இடருக்கும் நம்மை ஆட்படுத்தக் கூடும். நாம் இயற்கையைக் கைவிட்டு விட்டால், பொறுத்துப் பார்க்கும் இயற்கையும் நம்மைக் கைவிட்டு விடக்கூடும். தகவலறிந்து நாம் நம்மைச் செம்மைப்படுத்திக் கொள்தலன்றி நம்மிடம் வேறெதுவுமில்லை. பழமைபேசி. https://news.nationalgeographic.com/news/2006/06/060609-gorges-dam_2.html https://youtu.be/cCJ5bU9UbYs

No comments: