10/29/2011

10/23/2011

புனித லூயி நகர மிசிசிப்பி ஆற்றங்கரைக் காட்சிகள்

ஓ மிசிசிப்பி
ஓ மிசிசிப்பி
என்னில் என்னை மறந்தேனே மிசிசிப்பி
உன்னில் என்னைக் கொடுத்தேனே மிசிசிப்பி
ஓ மிசிசிப்பி
ஓ மிசிசிப்பி


Walking along, whistling a song,
Half foot and fancy free,
A big riverboat, passing us by, she’s headed for New Orleans
There she goes, disappearing around the bend.
Roll on Mississippi; you make me feel like a child again.

A cool river breeze, like peppermint leaves,
The taste of it takes me back,
Chew’n on a straw, torn overalls,
I can’t hold an old straw ???? and muddy river.
Just like a long lost friend.
Roll on Mississippi; you make me feel like a child again

Roll on Mississippi, big river roll.
You’re the childhood dream that I grew up on.
Roll on Mississippi, carry me home.
Now I can see I’ve been away too long.
Roll on, Mississippi, roll on.

Now, when the world's spinning round, too fast for me,
And I need a place to dream.
So I come to your banks, I sit in your shade
Relive the memories
Tom Sawyer and Huckleberry Finn
Roll on Mississippi; you make me feel like a child again

Roll on Mississippi, Big river roll
You’re the childhood dream that I grew up on.
Roll on Mississippi, carry me home.
Now I can see I’ve been away too long.
Roll on, Mississippi, Roll on, Mississippi,
Roll on, Mississippi, Roll on
Roll on, Mississippi, Roll on
Roll on, Mississippi, Roll on

மிசிசிப்பி ஆற்றினூடே!!

நாம் மிசிசிப்பி ஆற்றங்கரையோரமாக கடந்த நான்கு நாட்களாக இருந்து வருவது தெரிந்ததே! பயணத்தினூடாகக் கட்டுரை எழுதுவதுதான் நமது எண்ணமாக இருந்தது. இருப்பினும், இடையறாத காட்சிப் பொழுதுகள் மற்றும் தமிழ் உறவுகளுடனான சந்திப்பு என, நம் எண்ணம் ஈடேறவில்லை.

எனினும், கட்டுரைகள் தாமதமாக வெளியாகும் என்பதை ”எழிலாய்ப் பழமை பேச” சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.

நான்காம் நாளான நேற்று, மிசிசிப்பி ஆற்றின் துணையாறுகளில் ஒன்றான ‘மெராமெக்” ஆற்றங்கரையோரம் இயற்கையின் எழில் பருகிப் பயனடைந்தோம். இதோ, அதன் போழ்து எடுக்கப்பட்ட சில படங்கள்!



















கெழுவளம்மிகு நண்பர் விஜய் மணிவேல் அவர்களுடன்



அமெரிக்கப் பெரியாற்றுடன் ஐந்து நாட்கள் - 1

மிசிசிப்பி(பெரியாறு)

10/21/2011

உள்ளூர் நிலவரம்

மேப்பில் மரத்தில்
தார்ச்சிட்டுக் குருவிகள்
சிலுசிலு ஓசைதனைச் சீராய்
சிந்திக் கொண்டிருந்தன!

எழுந்து வெளியே வந்தேன்
கீழ்வானத்தில் வெள்ளை
பூசப்பட்டுக் கொண்டிருந்தது

அட விடிஞ்சிடுச்சு இங்க!
ஊரில் விடிந்துவிட்டதா?
கேட்டுத்தான் பார்ப்போமே?!

ஆட்டம் போட்ட குண்டர்கள்
அனைவரும் தோற்றிருந்தனர்
மகிழ்ச்சி கொண்டது மனம்!

அப்ப இனி?
வென்றதெல்லாம் யாரு??
தெளிவாய் சொன்னார்கள்,
உறங்கி இருந்த வேறு சில குண்டர்கள்!

அட,
அங்க இன்னும் விடியல போலிருக்கு!!

10/20/2011

அமெரிக்கப் பெரியாற்றுடன் ஐந்து நாட்கள் - 1

அமெரிக்கப் பெரியாற்றைக் கண்ட நாள் முதற் கணமே எம்மைப் பற்றிக் கொண்டது என்றுந்தீராத காதல். அதன் சுவை மிகுந்த வரலாறு, எத்தகையவரையும் கட்டிப் போட்டு சிந்திக்க வைக்கும். அதன் உச்சிதொட்டு அடி வரை சென்று காட்சியுற்று வாழ்வுதனை சிறப்பாக்கிக் கொள்ள வேண்டுமென்கிற தணியாத ஆசை எனக்கு உண்டு.

அமெரிக்கப் பெரியாறு(மிசிசிப்பி) மெம்பிசு நகரில் எம்மை ஈர்த்து அரவணைத்தது. அவ்வரவணைப்பின் நீட்சியாகத்தான் குடும்பத்தோடு செயின் லூயிசு மாநகருக்கு எம்மை இவ்வாரம் வரவைத்தாள் அவள். எம் ஒட்டு மொத்த குடும்பமே மிசிசிப்பியுடன் ஒன்றிப் போயிருக்கிறார்கள் எனச் சொன்னால் அது மிகையாகாது.

நேற்று மதிய நண்பகல் உணவுக் கிரிகைகளை முடித்துக் கொண்டு, காளியர்வில் நகரை விட்டுக் கிளம்பினோம். முதல் நிறுத்தமாக, மெம்பிசி நகர முற்றத்தில் நிறுத்தி மிசிசிப்யின் ஓட்டத்தைக் கண்டுகளித்தோம். எங்களைப் பார்த்து வெகுவாய்ச் சிரித்து வைத்தாள் அவள்.

“அப்பா, நம்ம ஆத்துக்குள்ள படகுலயே செயின்ட் லூயிசு போனா என்னப்பா?” என்றாள் மூத்தமகள். “இல்லடா கண்ணூ, படகுல எதிரோட்டமா போறதுக்கு நெம்ப நேரமாகும் இல்லையா?” எனச் சொன்னாள் தாய்க்காரி.

டென்னசி மாகாணத்தின் மாநகரான மெம்பிசு, அமெரிக்காவின் தென்பகுதியில் ஆற்றின் கிழப்புறம் இருக்கிறது. மிசெளரி மாகாணத்தின் செயின்ட் லூயிசு மாநகரம் என்பது, அமெரிக்காவின் வடபகுதியில் ஆற்றின் மறுகரையில் அமைந்திருக்கிறது.

ஆற்றை மறுகரைக்கு எங்கு வைத்துக் கடப்பது என ஆய்ந்த போது, மெம்பிசு நகரில் வைத்தே மறுகரையைக் கடப்பது என்றும், அங்கிருந்து ஆற்றை ஒட்டியே மேல் நோக்கிச் செல்வது என்றும் முடிவாகியது. ஆங்காங்கே நிறுத்தி, பெரியாற்றைக் கண்டு கொண்டே செல்ல ஏதுவாக இருக்கும் என்பதே காரணமாகும்.

I-40 தேசியப் பெருஞ்சாலையினூடாக ஆற்றைக் கடந்து, ஆர்கன்சாசு மாகாணத்தில் இருக்கும் மறுகரையை அடைந்தோம். சில மைல்தூரம் சென்றவுடன், ஆற்றின் ஓரமாகவே அமெரிக்காவின் வடபகுதிக்குச் செல்லும் I-55 பெருஞ்சாலையும், I-40 ஆகியவற்றின் சந்திப்பை அடைந்தோம்.

சந்திப்பில் வடக்கு திசை நோக்கிப் பயணித்ததை அவதானித்த மகள், வினவத் துவங்கினாள். “அப்பா, இரட்டை இலக்க பெருஞ்சாலைக்கும், ஒற்றைப்பட இலக்க பெருஞ்சாலைக்கும் என்ன வேறுபாடு??” என்றாள். “ஒற்றை இலக்க எண்ணுள்ள பெருஞ்சாலைகள், அமெரிக்காவில் தென்வடலாக இருப்பவை. இரட்டை இலக்க எண்ணுள்ள பெருஞ்சாலைகள், அமெரிக்காவில் கிழமேற்காக அமைந்திருப்பவை. மூன்று இலக்க எண்ணுள்ள பெருஞ்சாலைகள், ஒரு நகரைச் சுற்றிலும் வட்ட வடிவத்தில் அமைந்திருப்பவை”, என விளக்கமளித்தாள் தாய்க்காரி.

அடுத்து எங்கே வைத்து பெரியாற்றுக் கரையில் இறங்குவது என யோசித்த போது, மறுகரையில் எங்கு கெண்டகி மாகாண எல்லை துவங்குகிறதோ, அந்த இடத்தில் வைத்து இறங்குவது என முடிவாகியது. அதன்படி, ஃகோவார்டுவில் எனும் சிறுநகரத்தில் இருக்கும் ’புது மேட்ரிட்” பாலத்தின் வழியாக ஆற்றின் நடுவே இருக்கும் ”வேண்டோவர்” ஆற்றுவீயரங்கம் சென்றடைந்தோம்.

பச்சைப் பசேல் எனக் கண்களுக்கு விருந்தாக இருந்தது நிலப்பரப்பு. “வேண்டோவர்” இடைக்குறையின் இருபுறமும் சென்று மிசிசிப்பியானவள் எப்படி ஓடிக் கொண்டிருக்கிறாள் என்பதைக் கண்டோம். நிதானத்தோடும், பொறுப்போடும் ஓடிக்கொண்டிருந்தாள் அவள்.

அங்கே நாங்கள் பேச்சுக் கொடுத்த, செவ்விந்தியரான மேக்சிம் கேம்பல் என்பார் ஆற்றுவியரங்கம், அதன்மீதான தன்னுடைய அவதானம் முதலானவற்றை எங்களுக்கு உணர்ச்சி பொங்க விவரித்தார். தனக்குத் தெரிந்து மிகச்சிறிய வணடல் திட்டுதான் இங்கே இருந்தது. வண்டற்ப் பெருக்கம் அதிகரிக்க, அதிகரிக்க ஆற்றிடைக்குறுக்கின் பரப்பும் உயரமும் பெருத்துக் கொண்டே போவதாகவும் கூறினார்.

”ஆற்றுவீயரங்கம் என்றால் என்ன? அது எப்படி ஏற்படுகிறது??”, என்றெல்லாம் மூத்தம்கள் இடையறாது கேள்விக்கணைகளை தொடுத்துக் கொண்டே இருந்தாள். அதற்கெல்லாம் விடையளித்துக் கொண்டிருந்த தாய்க்காரி, ஓய்ந்து போய் கைவிரித்துவிடவே அவள் எம்மை நாடியவளானாள்.

ஆற்றுவீயரங்கம் அல்லது ஆற்றிடைக்குறுக்கம் என்பது, ஆற்றில் வரும் பெருந்தொகையான வண்டல் நிலைத்து நிற்பதனால் ஏற்படுவது என்று சொல்லி ஆற்றுப்படுத்தினோம். ‘மெசபடோமியா” குறித்தும் சொல்லிப் புரியவைத்தோம்.

தொடர்ந்து, அடுத்து எங்கே நிறுத்தி மிசிசிப்பியை அவதானிப்பது எனவும் கேட்டறிந்து கொண்டாள் மகள். மிசிசிப்பியும், ஒஃகாயோ ஆறும் புணர்ந்து கொள்ளும் இடமான இல்லினாய் மாகாணத்தில் இருக்கும் ”கெய்ரோ” எனும் இடத்தைத் தெரிவு செய்தோம். அமெரிக்காவின் வடகிழக்கு மாகாணங்களது பரப்பில் வடியும் நீரைப் பெருமளவில் கொண்டு வருபவள்தான் ஒகாயோ ஆறு. மொத்த நீரின் கொள்ளளவில், மிசிசிப்பியை விடவும் ஒகாயோதான் அதிக அளவில் நீரைக் கோண்டு வருபவளாவாள்.

இலினோய் மாகாணத்தின் கெய்ரோ நகரில் ஒஃகாயோவும், மிசிசிப்பியும் ஒருமித்துக் கொள்ளும் அழகே அழகுதான். ஆனால் நாங்கள் அங்கு வெகுநேரம் நிலைத்திருக்கவில்லை. அங்கே இருந்து புறப்படும் தருணத்தில், ’ஆறு’ என்பதற்கும், ‘நதி’ என்பதற்கும் உண்டான மாறுபாட்டை வினவினாள் இல்லாள்.

”ஆறு” என்பது ஓடோடி மற்றொரு ஆற்றோடோ அல்லது கடலோடோ கலப்பவள். ”நதி” என்பது, தானாக உயிர்த்தோ அல்லது, இயற்கையாகவே ஆற்றிலிருந்து கிளைத்து நிலத்தில் ஓடிச் செல்பவள். ஆனால் அறுதியிட்டுச் சொல்ல முடியாது என்றும் கூறி வைத்தோம்.

பிறகு புறப்பட்டு, ஒரு சில மணி நேரத்திற்குள்ளாக செயின்ட் லூயிசு நகரத்தில் இருக்கும் மேரியாட் விடுதியை வந்தடைந்தோம். மிசெளரி தமிழ்ச்சங்கத் தலைவரும், ‘அருவி’ இதழின் துணை ஆசிரியருமான திரு.ராஜ் மற்றும் திரு.பழனி அவர்களும் விடுதிக்கே வந்திருந்து வரவேற்பு நல்கி, பின்னர் திரு.பழனி அவர்களது இல்லத்தில் உண்டி புசித்துத் திரும்பினோம்.

குடும்பத்து ஆட்கள், ஒரு சிறு அறையில், ஒற்றைப் படுக்கையில் உறங்கியது இப்போதுதான். குடும்பத்திற்குள் என்றுமில்லாத ஒரு அணுக்கம் இருந்ததை உணர்ந்தோம். இரண்டு வயது கொண்ட மகளின் மழலையும் குறுஞ்செயல்களும் எங்களை மகிழ்ச்சியில் திளைக்க வைத்தது. பெரிய வீடுகளில் தனித்திருப்பதன் கொடுமை, கூட்டுக்குடும்பங்கள் அருகிப் போனது என எளிமையின் அருமை, பெருமைகளை நினைவு கூர்ந்து கொண்டோம். கூட்டுக்குடும்பத்தில் நான் வாழ்ந்த நாடிகளின் நினைவினூடே உறக்கமும் எம்மை ஆரத்தழுவிக் கொண்டது.

--மிசிசிப்பியின் அரவணைப்பு தொடரும்

10/18/2011

தமிழ்மணம், என்ன செய்யலாம்??

தமிழ்மணம், என்ன செய்யலாம்? நிறைய நேரம் பிடிக்கவில்லை. சிந்தனை உயிர்த்த சிறிது நேரத்துக்குள்ளாகவே, அறிவுப்புல்த்துல அகப்பட்டுடிச்சி. வேற என்ன? சிக்கின சிக்குமானங்களைத் படிக்கலாம் வாங்க!

தமிழ்மணம்

அனைவரும் நினைப்பது என்ன? தமிழ்மணம் என்றால் தமிழ் கமழ்வது, அல்லது தமிழ் மணப்பது என்றுதான். ஆனால், அது அப்படி அல்ல.

மணம் என்றால் கூடுதல். இரு மனங்கள் ஒன்றாகக் கூடி இணையும் மங்கள நிகழ்ச்சியானது, திருமணம். அது போலத்தான், தமிழர்கள் ஒன்றாகக் கூடும் இடம் தமிழ்மணம்.

இன்னும் ஐயப்பாடு நீங்கவில்லையா? மணலி என்று சொல்கிறோம்? அது என்ன மணக்கும் இடமா?? அல்ல! மக்கள் கூடும் இடம் மணலி! மணத்தக்காளி? கொத்து கொத்தாகக் கூடியபடி இருக்கும் பழங்கள் மணத்தக்காளி! ஆக, நிச்சயமாக தமிழ்மணம் என்பது தமிழர்கள் தமிழால் கூடிக் குலாவும் இடம்தான்.

அது அப்படியே இருந்துவிட்டுப் போகட்டுமே? ஆற்றங் கரையோரத்து உராஞ்சிக்கல், ஒற்றையடிப் பாதையில் இருக்கும் சுமைதாங்கிக் கல், ஊருக்குள் ஆங்காங்கே கிடக்கும் மாசிக்கல் போல தமிழனுக்கான கட்டமைப்புக்கல்லாக அதுவும் இருந்துவிட்டுப் போகட்டுமே?!

உராய்ஞ்சு தள்ளுவதை எல்லாம் பொறுத்துக் கொள்ளும் உராஞ்சிக்கல்லுக்கு உயிர் என ஒன்றிருந்தால் அதற்கு நோகாதா?

சுமைதாங்குகிற கல்லுக்குத்தான் உயிர் இருந்தால் நோகாதா?

அங்குமிங்குமாகப் போய் வரும் பாதசாரிகள், கால்களின் மாசை அப்புறப்படுத்தும் பொருட்டுத் தம் கால்க்ளால் போட்டுத் தேய்க்கும் போது, மாசிக்கற்களுக்கு உயிர் என ஒன்றிருந்தால் வலிக்காமல் போகுமா??

வரலாற்றுச் சின்னங்களாய் இருக்கும் அவற்றுக்கு என்றேனும் ஒரு பொழுதை காணிக்கை ஆக்கிக்கொள்வோமே?! ஆண்டாண்டு காலமாய் வலி தாங்கும் அவற்றுக்கு, என்றேனும் ஒரு பொழுதில் நாமும் ஏதேனும் ஒரு வலியைப் பொறுத்துக் கொள்வோமே??

10/17/2011

ஓடுகாலி

இளமாலை நேரம்
பறந்து செல்வதும்
கூட்டத்தில்
சங்கமித்து இருப்பதும்
வாசலடியில் வந்திறங்கி
தனிக்காதல் கொள்வதுமாய்
ஒன்றோடொன்று
மூக்குரசி மூக்குரசி
முத்தம் சிந்திக்
கொண்டிருந்தன
சிட்டுக்குருவிகள்!

இருள் பூசும்
கிழக்குப்புறக் கண்மாய்
வேண்டாமென
மேற்கு வானம் நோக்கி
மஞ்ச வெயிலில்
முகங் கழுவிக் கொண்டே
சென்றேன் நான்!

நினைவுக்கெட்டின
நாள்தொட்டு
நான் உறவாடிய
பூவரசப் பெரியம்மா
காற்றுப் பாட்டியுடன்
சேர்ந்து கொண்டு
கலகலவெனச் சிரித்தாள்!

பெரியம்மாவின்
காலைக் கட்டிக்கொண்டு
வாஞ்சையுடன் நின்றேன்;
மீண்டும் கலகலவென
சிரித்து வாழ்த்தியதில்
முதிர்மஞ்சள் பழுப்பிலைகள்
தலையில் விழுந்து தெறித்தன!!

அங்கிருந்த பாறையில்
பெரியம்மாவின் கீழேயே
அமர்ந்து கொண்டேன்!
அருகில் இருந்த
நெருஞ்சி மலரிடம்
வண்ணத்துப்பூச்சி
சத்தமின்றிக் கிசுகிசுத்தது
யாரோ ஒருவன்
அபலை போலத் தெரிகிறானே?!

அக்கணத்தில்
கிழக்குப்புறத்தில்
இருந்து வந்த நாயொன்று
எதிரில் வந்து நின்று
விட்டேத்தியாய்ப் பார்த்தது;
சிரித்து வைத்தேன்!
மேலும் கீழும் பார்த்துவிட்டு
’பட’க்கென வந்த திசையில்
ஓடிச் சென்றது!!

எட்ட இருந்த
எருக்கஞ் செடியில்
ஓணான் ஒன்று
தலையை அசைத்து
நையாண்டி காட்டியது
சிரித்துத் திரும்புகையில்
சென்ற நாய்
மற்றொரு நாயுடன்
வந்து நின்றது;
அவை இரண்டும்
ஒற்றைப் பார்வையாலே
ஏற இறங்கப் பார்த்திருந்தன!
பதிலுக்கு நானும் பார்த்தேன்!!

மேற்குப்புறந்தில்
இருந்து வந்த
மற்றொரு நாயும்
உடன் சேர்ந்து கொண்டது
ஒரு கணம்
ஒருசேரப் பார்த்தன
பிறகு மூன்றுமாக
ஏளனம் உமிழ்ந்து
மறுபக்கத்தில்
ஓடிப் போயின!

இவனொரு
ஓடுகாலியென
ஏளனம் உமிழ்ந்து
மறுபக்கத்தில்
ஓடிப் போயின!!
பூவரசப் பெரியம்மா
சொன்னாள்
“அழாதறா கண்ணூ!”

10/14/2011

ரொறன்ரோ

நான் இப்பத்தான் வேலையால இருந்து வந்த நான். வந்ததும், நம்ம தமிழ்நாட்டுப் பொடியன்கள் என்ன விசர்க்கதை கதைக்குறாங்களென்டு, கொம்ப்யூட்ர்ல இருந்து பார்க்க வெளிக்கிட்ட நான்?

எனக்கு இந்த கூகுள்காரண்ட பஸ், நல்ல தமிழ்ல சொல்ல வெளிக்கிட்டால் இமிழ்தி! அந்த இமிழ்தியில போயிப் பார்த்தால்டப்பா, ஊர்க்கதைகளும், பகடிக்கதைகளும், கூத்தாடிகள்ன்ட சினிமாக் கதைகளும், பெட்டைகள்ட்ட பிடிபட்டு அடி உதை வாங்கி வாற கோதாரிக்கதைகள் என்டும் கணக்கக் கதைக்கினும் நம்ம தமிழ்ச் சனம்.

எனக்கு எங்கட ஊர்ச் சந்தைதான் ஞாவகத்துக்கு வருமென்ன? சங்கானைச் சந்தையில கிடைக்காதது எதுவுமுண்டே? சந்தைக்கு வாற சனமெல்லாம் இருந்து, நாலாபொறத்துக் கதைகளும் கதைப்பாங்களென்ன? அது போலத்தான்... இவிங்களண்ட கதைகளும்.

சில நேரங்கள்ல விசர்க்கதைகளும் கதைச்சிக் கொழுவிக் கொள்றாங்கள் பொடியங்கள். அதுல பெட்டைக நல்ல சூட்டிப்போட இருக்கினம். சொல்ல வெளிக்கிடுற விசியத்தைடாப்பா, வாழப் பழத்துல ஊசியேத்துறாப் போலச் சொல்லிட்டு அந்தக் கெடையுட்டுப் போயிருவாங்களென்ன பெட்டைகள்? நான் இதைப்பத்திக் கண நாளா யோசிச்சன். எங்கியும் போயி வாய் குடுக்குறதை நிப்பாட்டினன். ஊரு வம்பு நமக்கெதுக்கு, என்ன சொல்றீயள்?

அதுலயும் பாருங்கோவன். சில பொடியங்களுக்கு அது வடிவா விளங்கல . . . அவைக்கு இமிழ்தியில மற்றவங்கள் என்ன கதைக்கிறாங்கள் எண்டு விடுப்பு பார்க்கத்தான் தெரியும்.

அந்தக் கதைகளுக்கு நடுப்புலயும் ஒரு பொடியன் நல்ல கேள்வி ஒன்டு கேட்டு வெச்சவன். ஏன், நம்ம தமிழ்ச்சனம் ‘ரொறன்ரோ’, ”றோட்டில”, “கூல் றிங்க்” என்டெல்லாம் எழுதுறாங்கள் என்டு கேட்டு வெச்சவன்.

நாம அதைப்பத்திக் கதைக்குறதுக்கு முன்னாடி, எழுதுறவர் எழுத, வாசிக்கிறவர் எப்படிச் சரியா விளங்கிக் கொள்றார் என்டதை எல்லாரும் கருத்துல கொள்ள வேணும். அப்பத்தான் அதுல இருக்குற ஒரு ஒழுங்கு புடிபடுமென்ன? நம்மட ஆட்கள்டாப்பா, சும்மா போற போக்குல எதையோ எழுதலையென்ன?!

சரி, இனி விசியத்துக்கு வருவம். தமிழ் எழுத்துக்கான ஒலிப்பு, அந்த எழுத்துல இருந்து எப்ப மாறுபட்டு நிக்கிது எண்டு பாப்பம். தமிழ் எழுத்துகளால, தமிழ்ச் சொற்களை எழுதைக்க எந்த மாறுபாடும் நாம கொள்றது இல்லை. உலகம் முழுமைக்கும் ஒன்டு போலத்தான் எழுதுறம். அதே போலத்தான் வாசிக்கிறம்.

உதாரணத்துக்கு, ஆற்றல், கடல், கடலோரம், வளர்ச்சி, இப்படி எந்த தூய தமிழ்ச் சொல் என்டாலும் ஒரே ஒலிப்புத்தான்.

பிறகு எங்க குழப்படி? ஆங்கிலச் சொற்களை எழுத வெளிக்கிடும் போதுதான் தமிழ்நாட்டுச் சனங்களுக்கு குழப்பம் வருதென்டு சொல்றாங்கள். ஆக, வடிவா விளங்கிக் கொள்ளுங்க படிக்கிற சனமெல்லாம்! ஆங்கிலச் சொல் எழுதைக்குத்தான் குழப்பம்.

ஏனப்படி? இப்ப நாம விளங்கப் பண்ணுறது ஆங்கிலச் சொற்களுக்கு மட்டுமே. அதை நல்லா கவனத்துல கொள்ள வேணுஞ் சரியே?!

Canada - கனடா
da - இந்த ஒலிப்பை ‘டா’ என்டு நம்ம சனம் எழுதுவினம். அதுனாலத்தான், அது கனடா.
darling - டார்லிங்

TaTa - ராரா
ta - ரா.

இதுல தமிழ்நாட்டுச் சனம் குழம்புது என்ன? நாங்க ஒலிக்கைக்க, ta என்டு ஆங்கில ஒலிப்புத்தான் ஒலிக்கிறோம். ‘ரா’ன்டு இருக்குற தமிழ் வரிவடிவத்தோட ஒலிப்பு நாங்க ஒலிக்கல்லே!! சரி! ஏனிப்படி?? ஏனென்டால், சரியான ஆங்கில ஒலிப்பைத் தமிழ் வரிவடிவத்துல கொண்டு வரத்தான். நாங்கள், தமிழ்நாட்டு ஆட்கள் ‘டொரோன்டோ’ என்டு எழுதைக்க, Dotondo' என்டு வாசிச்சுச் சிரிக்கிறமென்ன??

இப்ப, பாருங்க. tire என்ட ஆங்கிலச் சொல்லை, தமிழ்ல ’ரயர்’ என்டு தமிழ் எழுத்துல வாசிக்கக்குள்ளையும் அதே ஒலிப்புல வாசிக்கிறம் நாங்களென்ன??

உடனே ஒரு கேள்வி எழுமென்ன? ‘ரா’ங்குற தமிழ் எழுத்தை. ‘ta'ங்ற ஆங்கில ஒலிப்புக்குக் கடன் குடுத்தாச்சு. ஆங்கிலத்துல வாற ‘ra'ங்ற ஒலிப்புக்கு என்ன செய்வீங்கள்ன்ட கேள்வி வரும். ஆங்கிலத்துல ‘ர’, ‘ற’ ஒலிப்புகள் பெரும்பாலும் ஒன்டு போலத்தான் வரும். அதுனால, ‘ra'க்கு ‘ற’வைப் பாவிக்கறம்.

Robert - றோபற்
Toronto - 'To'(ரொ)ro(ற)n(ன்)to(ரோ), ரொறன்ரோ

அடுத்து, உன்னொன்டு என்னண்டால், அது Cool Drink??

இந்தச் சொல்லுல 'D'ங்ற ஆங்கில எழுத்து ஏறி வாறது கிடையாது. அதுனாலத்தான், ‘கூ(coo)ல்(l) றி(dr)ங்(n)க்(k)’. அமைதி காத்து வாற எழுத்தைக் ஒலியில கணக்குக் கிடையாதுதானே? அது மாத்திரமே அல்ல. தமிழ் வரிவடிவத்துல, மெய்யெழுத்துக் கொண்டு சொல் வரக்கூடாதென் டும் நாங்கள் ‘கூல் ட்றிங்க்’ என்டு எழுதமாட்டம். அதே, cool dirink என்டு ஆங்கிலத்துல சொல் இருந்தால், அது ‘கூல் டிறிங்க்’ ஆகி இருக்குமென்ன??

முடிவாச் சொல்றது என்னென்டால், எங்கட தமிழ் ஒழுங்குல ஆங்கில எழுத்துகளுக்கான தமிழ் வரிவடிவம் இதுதான்.

da - ட
ta - ர
ti - ரி
ra - ற
ri - றி
r - ர்
rt - ற்

கூடுதலா சில ஆங்கிலச் சொற்களைப் பார்த்து விளங்கப் பண்ணிக்கலாம் வாங்க.

Robert Stanley Weir றோபேற் ஸ்ரான்லி வியர்
Sir Adolphe Basile Routhier சர் அடொல்ப் பேஸில் ரூத்தீயே
Star Trek ஸ்டார் இட்ரெக்
Scarborough Civic Centre ஸ்காபுரோ சிவிக் சென்ரர்
Srilanka சிறீலங்கா
Rin றின்
Tin ரின்
Din டின்
TV ரிவி
DV டிவி

சரிங்க உறவுகளே, பிழையேதும் சொல்லி இருந்தால் பொறுத்து மன்னிக்க வேணும் நீங்கள். நான் முசுப்பாத்தியாத்தான் கதைக்க வெளிக்கிட்டன். மனசுல போட்டுக்காதிங்கோவன். நான் வாறேன். பேந்து பாப்பமென்ன?!

10/13/2011

வாடா மலர்

தளையத் தளைய பட்டுப்புடவையில் பெண்டிர். தமிழ்நாட்டில் கூட இல்லாத இளம்பச்சைத் தாவணிகளும், இளஞ்சிவப்புத் தாவணிகளும். அவற்றிற்கேற்றாற் போல தங்கக்கம்பி நிற இழைகள் தரித்த ஓரப்பட்டைகள் கூடிய மஞ்சள் மற்றும் கத்தரிப்பூ நிற பாவாடைகளும்! மங்களகரமாய்க் காட்சியளித்தது கூடம்!!

பல்கலைக் கழக வளாகம் என்பதால், இளமீசைகளுடன் கூடிய பதின்ம வயது கடந்த இளங்காளைகளும் உலாப் போய்க் கொண்டிருந்தன.

“வாவ்... வாட் எ ப்யூட்டி மேன் அவர் லேடீசு ஆர்?”, மனம் பொங்கிக் குதூகலித்தது அவ்விளங் காளைகளில் ஒன்று.

குடும்ப சகிதம் சென்று கொண்டிருந்தவனுக்குச் சிறிதான சலனம். அம்முகம் போலத்தான் தெரிகிறது. ஆனாலும் அது அல்ல! அதுவே ஆனாலும் எப்படிப் பார்க்க முடியும்? மறுபடியும் பார்க்கலாம் என முளைத்த எண்ணம் முளையிலேயே கருகிப் போனது.

பார்வையை வேறு கோணத்தில் செலுத்திப் பிள்ளைகளுடன் விழா அரங்கம் நோக்கி முன்னேறினான்.

“ப்பா, என்கு அந்தப் பட்ப் பாவாடை வாணும்.. ப்பா... என்கு...”, குழந்தையின் சில்லுக் குழைவினூடாகவும், புறச்சூழலின் இதத்தினூடாகவும் ’அகக்கிள்ளு’தனை மறந்து இன்புறலானான்.

நுழைவுக் கிரியைகளை முடித்து, பணம் இருபது வெள்ளிகளைக் கொடையாகக் கொடுத்து நிமிர்ந்தான். அதே முகம். கண்களும் கண்களும் பார்த்துக் கொண்டன. அறியாத கண்கள் போலக் கண்டு கொள்ளாது தலை திருப்பிக் கூடத்திற்குள் சென்று மறைந்து கொண்டான்.

எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான் அவன். ஊரின் பிரதான வீதியான, வெண்ணைக்காரர் வீதியில்தான் இவனது வீடு. பள்ளிக்கூடம் விட்டு வந்ததும், திருடன் போலீசு விளையாட்டோ அல்லது மாகாளியம்ம்ன் கோவில் திடலில் மொசப்பந்தடித்து ஆடும் விளையாட்டோ விளையாடுவது வழக்கம். இன்றைக்கும் அப்படித்தான், பள்ளியில் இருந்து வந்ததும் சீருடையைக் களைந்து மடித்து வைத்து விட்டு, மாற்றுடுப்பு அணிந்து கொண்டான். அம்மா கொடுத்த பொரி, கடலை, காபியைக் குடித்து விட்டு மாகாளியம்மன் கோவில் திடலுக்குச் செல்ல வெளியில் வந்தான்.

“எங்கடா போற? அம்மா, வடை சுடலாம்னு இருக்கேன். போடா, பர்வதக்கா ஊட்ல போயி, அம்மா கறுகாப்பெலை ரெண்டு இணுக்கு வாங்கியாறச் சொன்னாங்கன்னு சொல்லி வாங்கியா போ”, என்றாள்.

“ஏம்மா, அது நீ போயி வாங்கிக்க மாட்டியாக்கூ?? நான் வெளையாடப் போகோணும்!”.

“அதாண்டா... மூணும் தறுதலையாப் பெத்துப் போட்ட்டு நான் படாதபாடு படுறேன். இதே, பொட்டைப் புள்ளை ஒன்னப் பெத்திருந்தா, எனக்கு இந்த செரமம் இருக்குமா? என்ற தும்பம் சாகுற வரைக்கும் தீராது. ஆனமலை மாசாணியாத்தா, என்க்கு இப்படி ஒரு கொறையக் குடுத்து வாதிக்கிறயே? நான் ஆருகிட்டச் சொல்லு அழுவேன்? ஆருகிட்டச் சொல்லி அழுவேன்??”.

“செரீம்மா... நானே போறேன். கத்தி ஊரைக் கூட்டாத!”

பர்வதக்காவும் அம்மாவும் நண்பர்கள். வேலூர் சந்தைக்குச் செல்வதானாலும், நெகமத்திற்குச் சேலை வாங்கச் செல்வதானாலும், உடல்நலமின்றி உடுமலைப் பேட்டை மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டிருக்கும் உள்ளூர்க்காரரைக் காணச் செல்வதானாலும் ஒரு சேரத்தான் போவார்கள், வருவார்கள்.

அடிக்கடி சர்க்கரை குறியாப்பு வாங்குவது, எண்ணெய் குறியாப்பு வாங்குவது என இரு வீட்டாரும் புழங்கிக் கொள்வார்கள். வேறு வேறு சாதியினர் என்றாலும், அவர்களுக்குள் அது ஒரு பொருட்டாக இருந்திருக்கவில்லை.

பர்வதக்கா வீடு, மொக்கு வீட்டுக்கும் ரொட்டிக்கடை மருதாசலண்ணன் வீட்டிற்கும் இடைப்பட்டு இருக்கிறது. தெருமுனைக்குச் சென்று, வலதுபுறம் செல்லும் ஊர்க்கிணற்றுத் தெருவில் இருக்கும் முதல்வீடுதான் மொக்கு வீடு. மொக்கு வீட்டுத் திண்ணைக்கென்று ஒரு சிறப்பு இருக்கிறது.

ஊர்த் தலைவாசலில் இருந்து வருவோர் போவோர் எல்லோரையும் மொக்கு வீட்டுத் திண்ணையில் அமர்ந்து கொண்டால் அவதானிக்கலாம். திண்ணையின் ஒரு முனையில் வயதில் மூத்தவர்கள் அமர்ந்து ஊர்நாயம் பேசிக் கொண்டு இருப்பார்கள். மறுமுனையில், விடலைகள் அமர்ந்து நாளிதழ் வாசிப்பது போன்ற தோரணையில் பட்சி பார்த்துக் கொண்டு இருப்பார்கள்.

அப்படியான மொக்கூட்டுத் திண்ணையைக் கடந்துதான் சென்று கொண்டிருந்தான் இவன்.

“என்றா சுந்தரு? எங்க்டா போற??”, அவன் எங்கு போகப் போகிறான் என்பதைத் தெரிந்து கொண்டே வம்புக்கிழுத்தார் கதிர்வேலண்ணன்.

“எங்கம்மா கறுகாப்பெலை பொறிச்சாரச் சொல்லுச்சுங். அதான் பர்வதக்கா ஊட்டுக்குப் போய்ட்டிருக்கணுங்”.

“இம்ம்...ம்ம்ம்... கொடுத்து வெச்சவன்”

கதிர்வேலண்ணன் சொல்வதைக் காதில் வாங்காது சென்று கொண்டிருந்தான். கதிர்வேலண்ணன் அப்படிப் பொருமுவதற்கும் ஒரு காரணமிருந்தது.

பர்வதக்காவிற்கு ஒரு மகனும், ஒரு மகளும். மகன் விஜயகுமார், கொங்குரார் காகித ஆலையில் மேற்பார்வையாளர் வேலை. மகள் உமாதேவி, உடுமலைப் பேட்டை விசாலாட்சி மேல்நிலைப் பள்ளியில் மேல்நிலை இரண்டாமாண்டு. பள்ளி விடுதியில் தங்கி இருந்து படிக்கிறாள். நல்ல கோதுமை நிறமும், முகப்பொலிவும் கொண்டவள். ஒரு சில நாட்களில், வீட்டில் இருந்து கொண்டே நான்காம் இலக்கப் பேருந்தில் உடுமலையில் இருக்கும் பள்ளிக்குச் சென்று வருவாள்.

“அக்கா, பர்வதக்கா... எங்கம்மா கறுகாப்பெலை கொஞ்சம் பொறிச்சிட்டு வரச் சொல்லுச்சுங்க்கா. அக்கா, அக்கா!”, அழைத்துப் பார்த்தான். கதவைத் தட்டியும் பார்த்தான். யாரும் பதில் அளிக்கவில்லை. வீட்டில் எவரும் இல்லையென நினைத்தவன், புறக்கொல்லையை நோக்கிச் சென்றான்.

வீட்டின் பின்புறம் மூன்று தென்னை மரங்கள். தென்னை மரங்களுக்கு இடையில் கனகாம்பரச் செடிகள் வளர்ந்து இருந்தன. ஒரு மூலையில் புதராய் மல்லிகைச்செடிகள் மண்டி இருந்த இடத்தில் இருந்து மல்லிகைப்பூ நறுமணம். அந்த மூலையில் இருக்கும் தகரக் கதவு இட்ட அறையைக் கடந்து சென்றால், அதை ஒட்டிய மறுபக்கத்தில் இருக்கும் கறிவேப்பிலைச் செடிகள்.

அறையைக் கடக்க முற்படவும், அறைக்கதவு திறக்கப்படவும் நேரம் பொருந்தி இருந்தது. திடுக்கிட்டவன், செய்வதறியாது நின்றான். தலை, ஈரிழைத் துண்டினால் சுற்றப்பட்டு இருந்தது. மேனி தாவணியால் சூழப்பட்டு இருந்தது. வினாடி நேரம் கூட ஆகியிருக்காது.

“அடச் சீ! நீயுமா? எங்கிட்ட அப்படி என்னதாண்டா இருக்கு??”

அவனுக்கு அழுகை, அழுகையா வந்தது. அச்சமும், ஏமாற்றமும் கலந்து, குற்றமிழைத்து விட்டேனோ எனும் பாங்கில் கதி கலங்கிப் போனான். அப்படியே திரும்பி வேக வேகமாக நடந்து வீட்டினை அடைந்தான்.

“அம்மா, அங்க ஆருமில்லை’, என்று சொன்னவன் எந்த மறுமொழியையும் கேட்க மனமில்லாது வீட்டிற்குள் சென்று, வெற்றுத்தரையில் படுத்துக் கொண்டான்.

இறைவனை இறைஞ்சத் துவங்கினான். “மாசாணியாத்தா, என்னைக் காப்பாத்து! நான் ஒனக்கு அடுத்த அமாவாசை அன்னைக்கு ஒன்னேகால் ருபாய் காணிக்கை செலுத்துறேன். என்னைக் காப்பாத்து!”

திரும்பிப் படுத்தான். ”நான் ஒன்னுமே செய்யிலியே. அந்தக்கா எங்க, அம்மாகிட்டச் சொல்லிறுவாளோ? ச்சே, பின்னாடி போனதும் ஒருக்கா கூப்புட்டுத் தொலைச்சிருக்கலாம். கூப்புடாமப் போனதுதான் தப்பாப் போச்சு. வெளில தெரிஞ்சா, அவ்வளவுதான்!”, குலை நடுக்கம் கண்டது.

“ஆத்தா, மாகாளியாத்தா, அடுத்த வாரச் சந்தையன்னிக்கு அம்மா குடுக்குற காசுல கண்ணடக்கம் வாங்கிச் சாத்துறேன். நீதாங் காப்பாத்தோணும்”, கண்ணீர் மல்க முணுமுணுத்தான்.

உறங்கிப் போனான். அம்மா வந்து எழுப்பினாள், “என்றா இங்க வந்து படுத்துக் கெடக்குறே. ஒரு வேலை ஒழுக்கமாச் செய்யத் துப்பில்லை. செரி வந்து, வடை ரெண்டு தின்னு பாரு வா!”, மறுபிறவி எடுத்தது போல உணர்ந்தான்.

“அம்மா எதும் சொல்லுலை. அப்பிடின்னா, அந்தக்கா என்னைக் காமிச்சிக் குடுக்கலையாட்ட இருக்குது!”, சிறிதாக ஆசுவாசமடைந்தாலும் அடுத்தடுத்த இரு நாட்களும் பதற்றம் கொண்டவனாகவே இருந்தான்.

முழு ஆண்டுத் தேர்வு, அதற்குப் பிறகான விடுப்பில் அமுச்சி ஊருக்குச் செல்லுதல், விடுமுறைக்குப் பின் அவனும் விடுதிக்குச் சென்று பள்ளிப் படிப்பைத் தொடர்தல் என ஆண்டுகள் கழிந்தன.

அண்டி இருக்கும் சூழல் ஓரிருமுறை வாய்த்திருந்தும், ஒருவருக்கொருவர் நேரில் பார்த்துக் கொள்வதைத் தவிர்த்தனர். காலங்கள் கழிந்தன. ஆண்டுகள் பல உருண்டோடி, பருவங்கள் பல கண்டு, கண்டங்கள் கடந்து வந்திருக்கின்றனர்.

விழா நிறைவெய்தி, உண்டிக்கான வேளையது. குடும்பம் குடும்பமாய் ஒழுங்கு செய்யப்பட்ட இடத்தில் அளவளாவிக் கொண்டிருந்தனர்.

“ஏனுங் நீங் உடலப்பேட்டைங்ளா?”

அகம் கலக்கம் கொண்டது. மனைவி, குழந்தைகள் எல்லாம் வேறு சூழ இருக்கிறார்கள். இறுக்கம் மனதைக் கப்பியது. இல்லை எனப் பொய் சொன்னாலும், மீண்டும் தவறுக்கு அச்சாரம் இடுவது போலவே ஆகும்.

மெய்யுரைப்பதா, பொய்யுரைப்பதா?? கடைசல்க் கயிற்றில் சிக்கிய மத்துப் போல மனம் கிடந்து அல்லாடியது.

“ஏனுங்... உங்களைத்தானுங்?!”

மீண்டும் வினவியதில், அவனையும் மீறி உண்மை பிரசவித்தது.

“ஆமாங்”

“எம்பேரு விசுவநாதனுங்க. பல்லடமுங்க நானு”

அறிமுகப்படலம் நடந்தேறுவதைக் கண்டு அவனது மனையாள் அவர்களை நெருங்கினாள். பல்லடத்தார் மனையாளும் நெருங்கி வருவது கண்டு குலை நடுக்கம் கண்டது அவனுக்கு. அதே முகம். விடாது கறுப்பு போல இருக்கே என அஞ்சி, கூடத்தில் தொலைந்து போன மூஞ்சூரு போலத் தவித்தது அவனது மனம்.

“உமா, ஐ திங்க்... நீ நெனச்சது சரிதான் போலிருக்கு!”, மனையாளிடம் சொல்லிக் கொண்டே அவனது மனையாளுக்கு வணக்கம் தெரிவித்துக் கொண்டார் பல்லடத்தார்.

இரு குடும்பத்துக் குழந்தைகளும் கூடி விளையாடினர். பல்லடத்தாரின் மூத்த மகள் அவனது குழந்தைகளைக் கொஞ்சி மகிழ்ந்தாள். பெண்கள் இருவரும் வாய் நிறையப் பேசிக் கொண்டனர். பல்லடத்தார் அவனிடம் பழமைகள் பல பேசினார். அங்கிருந்த பரப்புக்காலியில் ஒரு குழுவாய் அமர்ந்து உண்டி புசித்தனர். வெகு நேரம் அளவளாவினர்.

சிறிது சிறிதாக அவனுள் இருந்த இறுக்கம் தளர்ந்து கொண்டிருந்தது. முழுதும் தளர்ந்து அகலும் முன்னமே, விடை பெறும் தருணம் வந்து நின்றது. அவனுக்கு ’அப்பாட’ என்றிருந்தது.

அவனது குழந்தையை அவனிடமே திரும்ப ஒப்படைக்கும் பாங்கில், குழந்தையை வாரி அணைத்து முத்தமிட்டுக் கொண்டபடியே த்ன் தோளால் அவனது தோளை இடித்துச் சொன்னது குரல், “சாரிடா சுந்தர். It's been ages due, I apologize...". கண்கள் சிமிட்டிச் சென்றன.

உமையாள் குரல் மட்டுமன்று, வையகத்து இளவேனிற் காற்றும் அவனைத் தழுவிச் சென்றது. “விடுதலை, விடுதலை”, மனம் ஆனந்தப் பள்ளு பாடியது!

10/02/2011

சிலந்தி வலை

வேம்பின் நிழலும், மேற்குப் புறமாக இருக்கும் பேரூர் வாளையார் பக்கத்தில் இருந்து மெலிதாய்த் தவழ்ந்து வரும் நீலமலைக் காற்றும், கயிற்றுக் கட்டிலில் படுத்திருக்கும் அங்கண கவுண்டரை ஆற்றுப்படுத்திக் கொண்டிருந்தது. வாஞ்சையுடன் மேல் நோக்கிப் பார்த்தார். வேம்பு நகைத்ததில் பழுத்த பழமொன்று வாயில் விழுந்தது. சுவைத்துக் கொட்டையைத் துப்புவதற்கு இடப்புறமாய்த் தலையைச் சாய்த்தார்.

வெண்சாம்பல் நிறத்தில் இருப்பவள். வாழ்க்கைப்பட்டவள் சின்னியம் பாளையத்து விபத்தில் சிக்குண்டு மாண்டு போன இந்த ஆறு ஆண்டுகளாக, மனைவியின் வெற்றிடத்தை நிரப்பி வருபவளும் இவளே. பெயர் பொன்னி. கட்டிலுக்கு இடப்புறமாகத் தரையில் ஆழ்ந்த நித்திரையில் இருந்தாளவள். துப்பவிருந்த கொட்டையை துப்பாமற்க் கையில் வைத்துக் கொண்டு, பொன்னி தூங்கும் அழகை இரசிக்கத் துவங்கினார் அங்கண கவுண்டர்.

அங்கண கவுண்டருக்கு இன்றைக்கெலாம் ஒரு அறுபது வயதிருக்கலாம். தான் நட்டு, வளர்ந்து, இன்று தனக்கே நிழல் கொடுத்துத் தன்னுள் ஒருவனாக இந்த வேம்பு மரம் ஆகிப் போனது பற்றி உற்றார் உறவினரிடம் உவகையுடன் சொல்லி இன்புறுவார் கவுண்டர். தன்னருகே படுத்துறங்கும் பொன்னியின் அழகில் சொக்குண்டு போனவர், அதிலிருந்து விடுபட்டுப் பேசலானார்.

“சின்னம்மணீ... இந்தா, இந்த பொட்டைப் பொன்னிக்குச் சித்த எதனாப் போடு பாக்குலாம். செனையா இருக்குற நாய்க்குச் சோறு போடாத பொல்லாப்பு நமக்கெதுக்கு?”

“இதென்னங்ப்பா... இதாப் போடுறனுங்.....”, தேன்குழைத்த தேனமுதாய்ப் பதிலளித்தாள் அவள். சின்னம்மணி என அக்கம்பக்கம், உற்றார், உறவினர் என எல்லோராலும் அழைக்கப்படும் பரிமளம்.

பரிமளம், இருபத்து நான்கு வயதாகிறது. அம்மா போன பிறகு, அப்பாவைத் தானே கவனித்துக் கொள்கிறாள். அப்பாவையும் கவனித்துக் கொண்டு, பீளமேட்டில் இருக்கும் ஒரு கல்லூரியில் முதுகலைப் பட்டம் படித்து முடிக்கப் போகிறாள்.

அங்கண கவுண்டருக்கு ஒரே ஒரு கவலைதான். நல்ல இடமாகப் பார்த்து, சின்னம்மணிக்கும் வருகிற வைகாசியில் திருமணம் செய்து வைத்து விட வேண்டும் என்கிறதுதான். மூத்தவள் சகுந்தலா, சர்க்கார் சாமக்குளத்திற்கு கட்டிக் கொடுத்து, இப்போது சிங்கப்பூரில் மாப்பிள்ளையுடன் வசித்து வருகிறாள். அவளிடமும், நல்ல மாப்பிள்ளை இருந்தால் சொல்லச் சொல்லி இருக்கிறார் அங்கண கவுண்டர்.

காலையில் செய்து, அவர்களிருவரும் உண்டது போக மிஞ்சிப்போன இரவைக் கிளறலைத் தட்டில் போட்டுக் கூவினாள், “ஏ பொன்னீ... வந்து, இந்த இரவையத் தின்னு போட்டுப் போய்ப் படு, வா”

“என்னம்மணீ... நல்லா, சோத்தை அந்த மோர்ல கரைச்சி ஊத்து அம்மணீ”, அங்கண கவுணடர் இரங்கிச் சொன்னார்.

“ஊத்துறனுங்ப்பா...”, சொல்லி முடிக்கவும் மதிர்ச்சுவர் தாண்டி குப்பைகள் விழவும் சரியாக இருந்தது. படுத்துக் கொண்டிருந்த அங்கண கவுண்டரும் அதை ஏறெடுத்துப் பார்க்கலானார்.

“ஏனுங்ப்பா... இவுனுக அலும்பு நாளுக்கு நாள் எச்சாப் போய்ட்டு இருக்குதுங்ப்பா.. நீலம்பூர் மாமங்கிட்டயாவது சொல்லிக் கேக்கச் சொல்லுங்ப்பா”

கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பெல்லாம் ஊரில் நிலபுலன்களை வாங்குவாரே கிடையாது. இன்றைக்கோ நிலைமை தலைகீழ். ஒரு அடி நிலம் உபரியாகக் கிடந்தாலும் கூட, அதன் மேல் ஆயிரமாயிரம் கண்கள். கோயமுத்தூர் ஏரோப்ளேன் காட்டுக்குக் கிழபுறம் எல்லாமே வானம் பார்த்த பூமி. நிலங்களுக்கு அவ்வளவாக விலை இராது. ஆயிரத்து தொளாயிரத்து எழுபதுகளில் சின்னச்சின்னதாக விசைத்தறிகள் ஊருக்குள் வந்தன. பிறகு ஆயிரத்துத் தொளாயிரத்து எண்பதுகளில் இலட்சுமி மில்க்காரர்களின் தொழிற்சாலைகள் அரசூருக்கும் கணியூருக்கும் வரலாயின.

அன்றிலிருந்து துவங்கிய நிலங்களின் விலையேற்றம், என்றுமில்லாதபடிக்கு விண்ணை முட்டிக் கொண்டு இருக்கிறது இன்று. விற்பனைக்கான நிலங்களோ அல்லது வீட்டு மனைகளோ சந்தையில் இல்லவே இல்லை எனும் நிலைதான் எங்கும்.

அருகம்பாளையத்துத் தலைவாசலில் முப்பது சென்ட்டு நிலத்துடன் கூடிய பதினாறு அங்கணத்து வீடு, அங்கண கவுண்டருடையது. கிழக்குப்பார்த்த வீடு. ஓட்டு வீடென்றாலும் பார்ப்பதற்கு மிக வடிவாய் அமையப் பெற்றிருக்கும். முப்பது சென்ட் நிலப்பரப்பில், இடது புறமாக வீடு. வீட்டைச் சுற்றியும் ஐந்தரை அடி உயர மதில்ச்சுவர். பின்புறம் மதில்ச்சுவருக்கும் வீட்டிற்கும் இடையே பிறவடையும் உண்டு. முன்புறம் விசாலமான இடத்தில் வேம்பு மரம், பந்தலில் அவரைக் கொடி, முன்புற வாயிலை ஒட்டியே அத்திக்கடவுக் குடிநீர்த் திட்டக் குழாய். அங்கண கவுண்டரின் பராமரிப்பில் அம்சமாய்க் காட்சியளிக்கும் வீடு அது.

வீட்டிற்கு வலதுபுறத்து வீடு, அங்கண கவுண்டரின் கூட்டமான காடன் கூட்டத்தைச் சார்ந்தவ்ரும், ஒன்றுவிட்ட பங்காளியுமான சண்முகவேலுவின் வீடு. அங்கண கவுண்டரும், சண்முகவேல்க் கவுண்டரும் இராணிலட்சுமி நூற்பாலையில்தான் ஒன்றாக வேலை பார்த்து வந்தார்கள். தங்களுக்கான வேலை இல்லை என்றான பிறகு, அங்கண கவுண்டர் விசைத்தறி வேலை பார்த்து வந்தார். சண்முகவேலு சுகவாசியாக இருக்கத் துவங்கினார். விளைவு, தன் மூதாதையர் விட்டுச் சென்ற வீட்டை விற்கத் துணிந்தார்.

அருகம்பாளையத்தில் காகிதப் பொருட்கள் உற்பத்தி செய்யும் ஆலையைத் துவங்கிய சுந்தரப்பாண்டியனுக்கு அவ்வீடு விற்கப்பட்டது. அவ்வீட்டை அடிமாட்டு விலைக்கு விற்றுவிட்டார் சண்முகவேலு என ஊரே பேசியது. என்றாலும் அங்கண கவுணடர் அதைக் கண்டு கொள்ளவில்லை. சண்முகவேலு, வீட்டை விற்றுவிட்டு கருமத்தம்பட்டியில் வாழ்ந்து வருகிறார். நாளடைவில் ஊரும் அவரை மறந்து விட்டது.

“யாரது? முருகேசனா??”, கதவைத் திறந்து உள்ளே வரும் உள்ளூர்ப் பிரமுகர் முருகேசனைப் பார்த்து வரவேற்றார் அங்கண கவுண்டர்.

“ஆமாங் மாமா. ஊட்ல நீங்க மட்டுந்தானா?? சின்னம்மணி மேக்க போயிட்டுதுங்ளாக்கூ?”

“ஆமா, முருகேசா. அஞ்சு மணித் தங்கத்துக்கு வந்துருவா.”

”இவன் எதற்கு சின்னம்மணியைக் கேட்கிறான். திருமணத்திற்கேற்ற இடம் ஏதாவது கொண்டு வந்திருப்பானோ?”, யோசனையில் ஆழ்ந்தார் அங்கணக் கவுண்டர்.

“இல்லீங்க மாமா. பக்கத்துல பேப்பர்க் கம்பெனி சுந்தரப்பாண்டி அண்ணன் வந்திருந்திச்சி. நீங்களும் சின்னம்மணி கண்ணாலத்துக்கோசரம் ஊடுகீடு வித்துக் காசு தேத்துவீங்களோன்னு கேட்ட்டு வரச்சொல்லுச்சு. அதான் வந்தேன். சொல்லுங்க, நல்ல வெலையாப் பார்த்து முடிச்சிறலாம்”.

முருகேசன் சொல்லியது கேட்டுச் சிறிது அதிர்ந்தாலும், சமாளித்துக் கொண்டார் அங்கண கவுண்டர்.

“அப்படி எல்லாம் ஒரு நெனப்பும் இல்ல முருகேசா. அப்படியே கொஞ்சநஞ்சம் பத்துலைன்னாலும், பெரியம்மணியுமு மருமகப் பிள்ளையுமு சிங்கப்பூருல இருக்குறது சகாயமாப் போச்சு பாரு”

“செரீங் மாமா. நீங்க சொல்றதுமு வாசுதவந்தானுங். இருந்தாலும் பக்கத்து ஊட்டுக்காரன் எசைஞ்சி வரும் போது வெலை பண்றது சுலுவு பாருங்”, முருகேசன் இலாகவமாகக் கொக்கியைப் போட்டான்.

“செரிதான் முருகேசா. அப்படி எதனா இருந்தா, தேவைப்பட்டாச் சொல்லி அனுப்புறன் முருகேசா!”, இயல்பாகவே பேசி வழியனுப்பி வைத்தார் அங்கண கவுண்டர்.

முருகேசன் வந்து சென்ற இரு வாரங்களுக்குப் பின் துவங்கியது கொசுக்கடி. பக்கத்துப் பிறவடையில் இருக்கும் சுந்தரப்பாண்டியனின் காகிதக்கிடங்கில் வேலை செய்யும் ஆட்கள், கிடங்குக் கழிவுகளை அங்கண கவுணடரின் இடத்தில் அவ்வப்போது கொட்டத் துவங்கினார்கள். அங்கணக் கவுணடரும் நேரில் சென்று அவருடைய இடத்தில் போட வேண்டாமென்று கேட்டுக் கொண்டார். முருகேசனிடமும் சொல்லிப் பார்த்தார். அத்துமீறல் இன்னும் நின்றபாடில்லை. கிட்டத்தட்ட இப்படியாகவே ஆறு மாதங்கள் கழிந்தன.

திடீரென ஒரு நாள், பொறுமை இழந்தவராய், ”செரிம்மா, நான் நீலம்பூர் மாமங்கிட்டவே சொல்லிப் பார்க்குறேன்”.

“ஆமாங்பா. மாமன் வந்து ஒருக்கா இவிங்களுக்கு வேட்டு வெச்சாத்தான் செரி வரும்!”.

தன் மனைவி இறந்து போனாலுங்கூட, தன் மைத்துனன் இராசகோபாலுடன் நல்ல நட்புப் பேணி வருபவர் அங்கண கவுண்டர். இராசகோபால் சிறிது முன்கோபி. எதற்கும், “அடிடா, புடிடா, வெட்டுடா” எனக் குதியாட்டம் போடுபவர். அவனிடம் சொல்லி, வம்பை விதைக்க வேண்டாமே எனக் காத்திருந்தவர்தாம் அங்கண கவுண்டர்.

“சின்னம்மணீ... அந்த போனைக் கொண்டாம்மா தங்கம்!”

“இந்தாங்பா!”

அலைபேசியை முடுக்கலானார் அங்கணக் கவுண்டர்.

“ஆரூ, இராசா?”

“மச்சே சொல்லுங் மச்சே!”

“தென்றா. இந்த பக்கத்து ஊட்டுக்காரங்கோட ஒரே ஓரியாட்டமா இருக்கு. செத்தைகளை நம்மூட்டுப் பக்கமாவே போட்டுக் கொடைச்சல் தாறாங்க இராசு!”

“கேள்விப்பட்டுனுங் மச்சே. நேத்து சின்னம்மணி சொன்னதா அவளோட அத்தை சொன்னா. நானுமு வெசாரிச்சுப் பார்த்தனுங். அவன், இந்த மந்திரி திங்களூர் திருமலைசாமிக்கு வேண்டியவனுங்ளாமுங் மச்சே!”

“ஓகோ. என்னதாஞ் செய்யுறது இதுக்கு? சூலூர்ப் போலிசுடேசன்ல பிராது கீதூ?”

“அப்பிடிக்கிப்பிடி செஞ்சு போடாதீங்? நம்முளே, நம்முளுக்கு செய்வெனை செஞ்ச மாதர ஆயிரும். கொஞ்ச நாளைக்கு பொறுத்திருங் மச்சே!”

நாட்களும் கடந்தது. எதற்கும் விபரத்தைச் சம்மந்தி வீட்டாரிடம் சொல்லி வைப்போம் என்று சர்க்கார் சாமக்குளம் சென்றார் அங்கண கவுண்டர். ”விபரத்தைச் சொல்லியது போலவும் ஆகும், சின்னம்மணிக்கு ஏற்ற வரன் இருந்தால் தேடிப்பார்க்கச் சொல்லவும் ஒரு வாய்ப்பாக அமையும்” என்ற எண்ணத்தில் சென்றார் அங்கண கவுண்டர்.

“வாங் சம்மந்தி வாங்”

“வாறனுங். சிங்கப்பூர்ல இருக்குற பேரங்கூட தின்மொருவாட்டிப் பேசாட்டி எனக்குத் தூக்கமே வராதுங்”

“இங்கியுமு அப்படித்தானுங்”

“சின்னம்மணி படிப்பு முடிஞ்சிதீமு, கண்ணாலத்தை இந்த வைகாசிலயே செய்யுலாமுன்னு பார்த்தனுங். ஒன்னும் தோதா எசைஞ்சி வர்லீங். இந்தப்பக்கம் எதனா இருந்தாப் பார்த்துச் சொன்னீங்கன்னா....”

“அதுக்கென்னங்... நேத்துகூட அன்னூர்ல நம்ம பங்காளிகிட்டச் சொல்லிப் போட்டுத்தான் வந்தமுங்”

“அப்பொறம் உன்னொரு தாக்கலுங்... பக்கத்து ஊட்டுக்காரன் கொடைச்சல் குடுத்துட்டே இருக்குறானுங்..:

“ஆமாங்... சின்னம்மணி சொல்லுச்சுன்னு எங்கூட்டு மருமக சொன்னா. நானுமு யோசனை செஞ்சி பார்த்தனுங்க. உங்களுக்கு அமைஞ்சதோ ரெண்டு பொட்டைப் புள்ளைக. பேசாம வெலைபேசிக் காசைப் பாத்து, அதை ஆளுக்குப் பாதின்னு குடுத்துட்டு சிவனேன்னு குக்கீட்டுச் சோறு உங்லாம் பாருங்”

அங்கண கவுண்டருக்கு குலை நடுங்கிக் கண்கள் சொருகியது போல இருந்தது. “அண்ணா, அவரு சொல்றாருன்னு நீங்க ரோசனை பண்ணாதீங்”, சொம்புத் தண்ணியுடன் கைநீட்டினார் சம்பந்தியம்மா தெய்வாத்தாள்.

மிகுந்த கவலை கொண்டார் அங்கணக் கவுண்டர். காலை பதினொரு மணிக்குச் சென்றவர், மதிய உணவெதுவும் சம்பந்தி வீட்டில் உண்ணாமலேயே கிளம்பினார். எங்கும் செல்லப் பிடிக்கவில்லை அவருக்கு.

காந்திபுரம் வந்தவர், வீட்டில் சின்னம்மணி என்ன செய்து கொண்டிருக்கிறாளோ என் எண்ணியவர், அலைபேசியில் அழைத்தார்.

“அப்பா, அவிங்க ஊட்டுக்கு வந்த லாரி நம்ம மதில்ச்சுவத்தைப் பூரா இடிச்சித் தள்ளீர்ச்சுப்பா!”, கேவிக் கேவி அழுதாள் சின்னம்மணி.

“அழாதம்மணி. இதா நான் இப்ப காந்தீவரத்துல்தான் இருக்கேன். நேரா ஊட்டுக்குதான் வாறேன்”

மூதாதையர் வாழ்ந்த வீடு. இரு பெண்களையும் நல்லபடியாகத் திருமணம் செய்து கொடுத்துவிட்டு, அம்மண்ணிலேயே வாழ்ந்து சாக வேண்டும் என நினைப்பது என் தவறா? அங்கண கவுண்டரின் மனத்தைச் செல்லரித்துக் கொண்டிருந்தது.

ஆட்சிதான் மாறி விட்டதே. இம்முறை மைத்துனன் இராசுவை அழைத்துக் கொண்டு, காவல் நிலையத்தை நாடிச் சென்று முறையிடுவதைத் தவிர வேறு வழியில்லை என நினைத்தவர், பாதியிலேயே சூலூரில் இறங்கி விட்டார்.

பேருந்து நிலையத்தில் காத்திருந்த மைத்துனன் இராசுவுடன் நேராக ஆளுங்கட்சித் தலைவர் வீராசாமி அலுவலகத்திற்குச் சென்றார் அங்கணன்.

“இராசு, நீங்க சொல்றது நல்லாப் புரியுது. அவிங்க வேணுமின்னே இடிச்சித் தள்ளி இருப்பாங்கன்னு நாங்க நினைக்கல. அப்படியே இருந்தாலும், அந்த டைவரைப் புடிச்சி உள்ள வெச்சிதுல உங்க பிரச்சினை தீந்திருமா??”

“அண்ணே, அப்ப நீங்களே ஒரு வழி சொல்லுங்க இதுக்கு?!”

“நான் நம்ம ஆட்கள்ல யாராவது ஒருத்தரை அனுப்பி வைக்குறேன். நல்ல வெலையா நம்ம ஆளுககிட்டத் தள்ளி உட்றுங்க. அவனை நாங்க பாத்துகுறோம்!”

இது கேட்ட மைத்துனன் இராசுவுக்கு மகிழ்ச்சி. அங்கண கவுண்டருக்கு, இருளோ என்று கண் கலங்கிச் சித்தமும் கலங்கியது.

“வண்டிய ஊருக்கே உடுறா!”, மைத்துனன் இராசுவும், மாமா அங்கண கவுண்டரும் அருகம் பாளையத்துக்கு நேராக வந்தனர்.

வாசலில் வந்திறங்கிய மாமாவைப் பார்த்ததும், சின்னம்மணி ’ஓ’வென்று ஓலமிட்டாள்.

”மாமா, எங்கம்மா என்னைய எப்பிடியெல்லாம் வெச்சி சீராட்டித் தாலாட்டி அழகு பார்த்தா? எங்கம்மா இருந்திருந்தா இந்த நெலமை எனக்கு வந்திருக்குமா?” தலையில் அடித்துக் கொண்டு அலறினாள்.

“அழாதறா செல்லம். மாமன் வந்துட்டன் அல்ல? உனியெல்லாம் நாம் பாத்துகுறேன். அழுகாதறா!”

“எங்கப்பன், டீக் கடைக்காரம்பொண்டாட்டி கூட சாகுவாசமுங்றாங் மாமா. செவுத்த இடிச்சிவங்ககோட நாயம் பேசுனப்ப முருகேசண்ணன் சொல்லித் திட்டுனாருங் மாமா. நேத்து கூட, அவ கூட இவரு இருந்தாருமுங்...”

இராசுவுக்குச் சுர்ரென்று சினம் தலைக்கேறிக் கொலை வெறியோடு மாமனைப் பார்த்தார். “யோவ், சின்னம்மணி சொல்றது உம்மையா? நேத்து அவளோட இருந்தியா?”, சொற்கள் தடித்தன.

நெஞ்சு கலங்கிய கவுண்டர், “டே இராசூ... நான் தெனமும் அவ கடைக்குப் பேப்பர்....”

“நிறுத்துயா... பேப்பர் படிக்கப் போனா பேப்பர் மட்டும் பட்ச்சிட்டு வர வேண்டியதுதான? மணிக்கணக்கா அவகூட என்னய்யா பேச்சு ஒனக்கு?”

அவசர கதியில் கிளம்ப்பிப் போனார் அங்கண கவுண்டர். இங்கே வாசலில் பெருங்கூட்டம் கூடி இருந்தது. வீட்டிற்குள் சின்னம்மணியைச் சமாதானப்படுத்திக் கொண்டிருந்தனர் உறவினர்கள். இராசுவோ, டீக்கடையைச் சூறையாடுவதற்கு தன் படை பலத்தைக் கூட்டுவதில் முனைப்பாய் இருந்தான். சுந்தரப் பாண்டியனின் காகிதக் கிடங்கில் பணிகள் மும்முரமாய் நடந்து கொண்டிருந்தன.

திடீரென ஒரு கும்பல் வீட்டை நோக்கி முன்னேறி வந்தது.

”ஏ, என்னப்பா மசமசன்னு நின்னுட்டு இருக்கீங்க? இடிசல்ல சிக்கி இருக்குற அந்த நாயைத் தூக்கி தூரத்துல போட்ட்டு வாங்கப்பா!”. விசைத்தறியில் நூலெடுக்கும் சிறுவர்களில் இருவர், செத்துப் போன பொன்னியைத் தூக்கிச் சென்றனர்.

”அடுத்து, அந்த வேப்ப மரத்துக்குக் கீழ இருக்குற கவுத்துக்கட்டல் அப்படியே இருக்கட்டும். அதுலே படுக்க வெச்சி, அப்படியே எடுத்துட்டுப் போய் எரிச்சிறலாம்!”

வீட்டின் முன் கூட்டம் பெருகிக் கொண்டே இருந்தது. உரையாடல்கள் காற்றில் கரைந்தன. கரையும் ஒலிகளுள் ஒரு ஒலியானது விகாரமாய் ஒலித்துக் கரைந்தது.

“பேசாம சுந்தரப்பாண்டியனுக்கு வித்திருந்தாக் கூட, நில அபகரிப்புல உள்ள போட்டுக் காசு கொஞ்சம் எச்சா வாங்கி இருக்குலாம். எங்க பெரியப்பன் எதையுஞ் செய்யாம இப்பிடி இரயில்ல உழுந்து வீணாப் போயிருக்க வேண்டாம்! தூத்தேறி!!”

மற்றொரு குரல், “ஏ, பால் ஊத்திப் பதினாறு செய்யுற வரைக்குமு வந்த சனம் இருக்குறதுக்கு எடங்காணாது. அந்த வேப்ப மரத்தை வெட்டிப் போட்டு, பந்தலை ஏகத்துக்கும் போட்டுடோணும்”

பொன்னி எறியப்பட்டு விட்டது. இதோ வேம்பும் சாய்கிறது. மற்றுமொரு ஒரு சிலந்தி வலை எங்கோ ஒரு இடத்தில், வெகு நேர்த்தியாய் பின்னப்பட்டுக் கொண்டே இருக்கிறது!