9/23/2011

தீர விசாரிப்பதே மெய்!


”கண்ணால் காண்பதுவும் பொய்! செவியால் மடுத்தலும் பொய்!! தீர விசாரிப்பதே மெய்!!!” என்பது முதுமொழி!

9/15/2011

கம்பங்காடு

கஞ்சி வேற, கூழ் வேறன்னா கேட்டுக்கணும். ஊட்டுக்காரி பெப்பப்பேங்றாங்க... கஞ்சின்னா வடிச்செடுக்கிறது. கூழ்ன்னா, சோற்றைக் குழம்பு போல குழையவிட்டு நீர்மம் ஆக்கினது; கூழ்த்துளாவின்னா, சோறும் கூழும் கலந்த கலவை;

புக்கைன்னா, பருப்பைச் சேர்த்து வேகவெச்சி சோறோட குழைய விடுறது; கம்பங்களியை உப்புத் தண்ணியில ஊற வெச்ச தண்ணி, கம்பந்தண்ணி! கம்பை வேகவெச்சி, மெலிசா இருக்குற துணி அல்லது, தட்டை வெச்சி வடிச்செடுக்குறது கமபங்கஞ்சி; கம்பை நல்லா வேகவிட்டு, குழையவிட்டு
நீர்மம் ஆக்கி உப்புப் போட்டுக் குடிக்கிறது கம்பங்கூழ்!!

அதே கம்பை அரைச்சி மாவாக்கி, அந்த மாவை வேகுற தண்ணியில போட்டு எடுத்தா அது ஊதுமாக்கூழ்; கூழ்ல காய்கறி, விதைக்கொட்டைகளைத் தொடப்பம் போட்டுத் துளாவி விட்டா அது கம்பங்கூழ்த் துளாவி ஆய்டும்.

கம்பையும் பாசிப்பயறையும் ஒன்னா வேகவெச்சி கொஞ்சூண்டு நல்லெண்ணைய ஊத்தி உருசிபடத் தின்னா அது புக்கை. கம்பை ஆட்டாங்கல்லுல அரைச்சி கல்லுல ஊத்துனா கம்பந்தோசை. பனியாரக் கல்லுல ஊத்தினா குழித்தோசை அல்லது பனியாரம் ஆய்டும். அரைச்ச மாவை அவிய விட்டா, கம்பங் கொழுக்கட்டை ஆய்டும். நொதிக்க வெச்சி வேகவெச்சா, அது கம்பு இட்லி ஆய்டும்.

கோயமுத்தூர் காளிங்கராயன் வீதியில இருக்குற ஒரு கடையில இதெல்லாம் ஒரு காலத்துல சமைச்சிக் குடுத்துட்டு இருந்தாங்க. இன்னும் அந்தக் கடை இருக்கா? இல்லன்னா, ஆந்திர எல்லையில இருக்குற சிறீகாகுளம் போனாக் கிடைக்கும்.

அம்மணிகிட்ட இருந்து அடுத்த கேள்வி... சோறு, களி, கூழுக்குண்டான வேறுபாடு என்ன? தானியத்தை அரிச்ச பின்னாடி பானையில போட்டு பருக்கை பருக்கையா வேக வெச்சா அது சோறு! உராஞ்சிக் கல்லுல போட்டு மாவாக்கினதை கொதிதண்ணியில போட்டு களிம்பு நிலைக்கு கொண்டு வர்றது களி; அதையே நீர்ம நிலைக்கு கொண்டாந்தா கூழ்!!

9/13/2011

ஆவுள்ளம்

அலுவலுக்குச் செல்லும் வேளையிது. எனினும் இதனால் ஏற்பட்ட பாதிப்பு அளப்பரியது. கொங்குநாட்டில், அன்பின் மிகுதியாலும் வாய் நீளுவது உண்டு. ”ஆவுளக் கண்டாரோளி என்னை வுட்டுட்டுப் போய்ட்டாளே” என நெகிழ்ந்து நெக்குருகித் துயரத்தை வெளிப்படுத்துவார்கள்.

'ஆவுள' என்றால் என்ன என்பதைப் பற்றி நாங்களெல்லாம் அறிந்து கொள்ளத் தலைப்பட்ட போது, சர்க்கார் பாளையம் (ஜக்கார் பாளையம்) கோவிந்தராசு அய்யா அவர்கள், ஆவுள்ளம் என்றால் என்ன என்பதைப் பற்றியும் நாடோடிச் சொலவடைகளைப் பற்றியும் தெளிவாக எடுத்துரைத்தார். இன்று அவர் எம்மோடு இல்லை. என்றாலும் அவரை நன்றியோடும் உருகிய உள்ளத்தோடும் நினைத்துப் பார்க்கிறேன்.

’ஆ’ என்றால் பசு. எங்கள் ஊருக்கு அண்மையில், ஆவுகளுக்கான கோயில் ஒன்றும் உண்டு. மால கோயில் என்பார்கள். ஆல் கொண்ட மால் கோயில் என்பது திரிந்து, மால கோயில் ஆயிற்று.

ஆவின் உள்ளம் தாய் உள்ளத்தைக் காட்டிலும் சிறந்ததாம். ஆகவேதான், ஆவுளச் சிறுக்கி, ஆவுளக் கண்டாரோளி என்றெல்லாம் ஒப்பாரிகளில் எடுத்தியம்புகிறார்கள்.

இதோ, அச்சொல்லாட்சிக்குக் கட்டியம் கூறும் படங்கள்!

அம்முகத்தைப் பாருங்கள். வாஞ்சை வழிந்தோடுகிறது!!

ஆவின் கண்ணைப் பாருங்கள். கனிவு கசியும் கண்கள்!!

9/12/2011

அமெரிக்கப் பெரியாறு (மிசிசிபி)






மிசிசிப்பி(பெரியாறு)

அமெரிக்காவை இரண்டாகப் பிளந்து வடக்கிலிருந்து தெற்கு நோக்கிப் பாய்கிறாள் மிசிசிபி. எண்ணற்ற பல கதைகளைத் தன்னகத்தே கொண்டிருக்கிறாள் அவள். அமெரிக்காவுக்கு, அல்ல, இந்த உலகுக்கே தொண்டாற்றுபவளாய்த் திகழ்ந்து வருபவள் அவள். நாளெல்லாம் அடக்கமே உருவாய் இருந்தாலும், அவ்வப்போது சீறிப் பாய்வதும் உண்டு. அவளது சீற்றத்துக்கு முன்னால் எவரும் நிற்க இயலாதபடிக்கு வீரியத்தை உமிழக் கூடியவள் மிசிசிபி.

மெம்பிசு மாநகரம். டென்னசி மாகாணத்தின் ஓரத்தில், மிசிசிபி மற்றும் ஆர்கன்சாசு மாகாணங்களின் எல்லைகளைத் தொட்டாற்போல் இருக்கும் மாநகரம். மாநகர முற்றத்தின் விளிம்பைத் தொட்டு நளினமாய்ப் பாய்ந்தோடுகிறாள் மிசிசிபி.

மாநகர முற்றத்திற்கும் மிசிசிபிக்கும் இடையே மட் தீவு(mud island). தண்டவாட இலகு ஊர்தியில் ஏறித் தீவுக்குச் செல்லலாம். தீவில், மிசிசிபி ஆற்றை விவரிக்குமுகமாக மாதிரி ஆறு ஓடிக் கொண்டிருக்கிறது. அது, ஆற்றின் பிறப்பிடம் மற்றும் வழித்தடம் முதலானவற்றை விளக்கும் பொருட்டு அமையப் பெற்றிருக்கிறது.

ஆற்றங்கரையில் அமர்ந்திருக்க, மிசிசிபியைத் தழுவிய காற்று நம்மீதும் படர்ந்து வருட, மெய் சிலிர்த்துப் போகிறது. அமைதியைத் தன்னகத்தே கொண்டவள் அவள். காண்போர் கண்களுக்கு மட்டுமல்ல, அண்டி வாழும் இலட்சோப இலட்சம் மக்களின் வாழ்க்கையிலும் பரவசத்தை ஊட்டுகிறாள் அவள்.

அமெரிக்காவின் வட கோடியில், மின்னசோட்டா மாகாணத்தின் மேற்கில் தன் பயணத்தைத் துவங்குகிறாள் மிசிசிபி. இவள் அங்கே ஓடி வந்ததாலேயே, மினியாபோலிசு - செயின்ட் பால் இரட்டை நகரங்கள் உயிர்த்து ஓங்கி வளர்ந்து வருகிறது. இரண்டும் இரு கரைகளில் அமைந்திருக்கின்றன.

அவ்விரு நகரங்களைக் கடந்து, விசுகான்சின் மாகாண எல்லையை இடித்துச் சரசமாடிக் கொண்டே வந்தவள், அயோவா மற்றும் இல்லினாய் மாகாணங்களின் எல்லையாய்ப் பரிணமிக்கிறாள். அயோவாவைக் கடந்து வந்து, மிசெளரி மாகாணத்தின் செயின்ட் லூயிசு மாநகரத்திற்குப் பொலிவூட்டுகிறாள் மிசிசிபி. கடக்கும் தூரமெங்கும் பல அருமை பெருமைகளைத் தன்னகத்தே உள்வாங்கிக் கொண்டுதான் வருகிறாள்.

அப்படியாக செயின்ட் லூயிசு மாநகரத்தில் இருந்து கீழே தெற்குப்புறமாக வந்தவளை, ஆர்கன்சாசு - டென்னசி மாகாண எல்லையிலே மெம்பிசு மாநகர முற்றத்திலே கண்டு மகிழ்கிறோம். அவளுள் ஆயிரமாயிரம் கதைகள்.

கடல் மட்டத்தினின்று 1475 அடிகள் உயரத்தில் பிறந்த அவள், மின்னசோட்டா மாகாணத்திலேயே 675 அடிகள் தாழ்வாகப் பாயத் துவங்குகிறாள். பிறகு படிப்படியாகக் குறைந்து 430 அடிகளுக்குத் தாழப் பாய்கிறாள் மெம்பிசு மாநகரில். இப்படிப் படிப்படியாகத் தாழ்ந்து, நியூ மெக்சிகோ கடலில் கலக்கும் போது அமைதியுறுகிறாள்.

மணிக்கு மூன்று மைல் வேகத்தில் பாயும் அவள், தான் உயிர்க்கும் இடாசுகா குளத்தில் பெய்யும் மழை நீரைத் தொன்னூறாவது நாளில்த் தான் சங்கமிக்கும் நியூ மெக்சிகோ கடலுக்குக் கொண்டு சேர்க்கிறாள் மிசிசிபி.

உயிர்க்கும் இடத்தில் முப்பது அடி அகலத்தைக் கொண்டவள், மெம்பிசு மாநகரில் முக்கால் மைல் தூர அகலத்தைக் கொண்டிருக்கிறாள். சீற்றத்தின் போது மூன்று முதல் ஆறு மைல்களாகவும் உருவெடுப்பாளாம் மிசிசிபி.

அமெரிக்காவுக்கு இவள் ஆற்றும் தொண்டு அளப்பரியது. கிட்டத்தட்ட 41 விழுக்காட்டு வட அமெரிக்கக் கண்டத்தின் பரப்பளவு கொண்ட, 31 அமெரிக்க மாகாணங்கள் மற்றும் கனடாவின் இரு மாநிலங்களின் நிலப்பரப்பான ஒரு இலட்சத்து என்பதினாயிரம் சதுர மைல்களில் வடியும் நீரை கடலுக்குக் கொண்டு சேர்ப்பவளும் இவளே.

மின்னியாபோலிசு நகரில் விநாடிக்கு 12000 கன அடி நீரைச் சுமந்து வரும் இவள், நியூ ஆர்லியன்சு நகரிலோ ஆறு இலட்சம் கன அடி நீரைக் கொண்டு வருகிறாள். இது போக, இடையில் நிறைய நீர்த் தேக்கங்களையும் நிரப்பிவிட்டுச் செல்கிறாள் மிசிசிபி.

260 வகையான நீர்வாழ் மீன்கள், எண்ணற்ற இதர நீர்வாழ்ப் பிராணிகள், வட அமெரிக்காவில் வாழும் பறவைகளில் 60% பறவைகள் என நிறைய உயிரினங்களுக்கு ஆதாரமாக இருப்பவளும் இவளே.

படகுகள், கப்பல்கள், கட்டுமரங்கள் எனப் பலவிதமான ஓடங்களையும் தன்னகத்தே ஓடவைத்துக் கொண்டிருக்கிறாள் மிசிசிபி.


வட அமெரிக்காவின் மிக நீண்ட, உலகில் நான்காவது நீண்ட ஆறாக இருக்கும் மிசிசிபியின் நீளம் தோராயமாக 3730 கிலோ மீட்டர்களாகும்.

விநோதமானது என்ன தெரியுமா? இவள் நீரை மட்டும் கடலுக்குக் கொண்டு வந்து சேர்க்கவில்லை. நாளொன்றுக்கு 436 டன் எடையுள்ள வண்டலையும் கொண்டு செல்கிறாள். ஆண்டு ஒன்றுக்கு 159 மில்லியன் டன் எடை கொண்ட வண்டலைக் கொண்டு போய்க் கடலில் விடுகிறாள். இதனால் சுற்றுப்புறச் சூழலுக்கு ஊறு நேர்வதாயும், கடல் மட்டம் உயர்ந்து வருவதாயும் தெரிவிக்கிறார்கள் சுற்றுப்புறச் சூழல் ஆய்வாளர்கள்.

மிசிசிபியைப் பேணுவது நம் கடமை எனப் பலர் களம் இறங்கி உள்ளனர். இயற்கை ஆர்வலர்களான நாமனைவருமே, நம் ஆறுகளைப் பேணுவது நம் கடமையாகக் கருத வேண்டும்.

மிசிசிபி என்றால். பிரெஞ்சு மொழியில் ’பெரிய ஆறு’ என்பதாம். மெம்பிசு நகருக்கு வியாபார நிமித்தம் பலரைக் கொண்டு வந்து சேர்த்ததில் மிசிசிபி பெரும் பங்கு வகித்தாளாம். அவளுக்கான பெருமைகள் அது மட்டுந்தானா? எம்மைக் குளித்துக் குளிர வைத்த பெருமையும்தான்!!

9/06/2011

மாணாக்கரின் பக்குவாபக்குவ நிலைகள்

உயர்தர மாணாக்கன் - அன்னப் பறவையும் பசுமாடும் போன்றவன்.

உயர்தர மாணாக்கனின் அறிவானது, அன்னப் பறவையின் ஆற்றல் கொண்டதாய், நீர் கலந்த பாலில் நீரைப் பிரித்துப் பாலை மட்டுமே உட்கொள்ளும் அன்னப் பறவை போல், நல்லனவற்றை மட்டும் எடுத்துக் கொண்டு மற்றனவற்றைப் புறந்தள்ளுவதாய் அமைந்திருக்கும்.

வயிறாறப் புசித்த உணவைத் தனிமையில் படுத்து அசை போட்டு செறிமானம் செய்து கொள்வதோடு, அற்பமான புல்லைத் தின்று அருமையான பாலைத் தரும் பசுவைப் போல், ஆசிரியனிடம் கற்றதை மனதால் ஆய்ந்து பயின்று, பயின்றது பிறருக்கும் உதவும் வகையில் கற்றுக் கொடுக்கும் வல்லமை கொண்டவனே உயர்தர மாணவர் ஆவார்.

நடுத்தர மாணாக்கன் - மண்ணும் கிளியும் போன்றவன்

உழவன் இட்ட உரத்திற்குத் தக்கபடி பயனளிக்கும் நிலம் போலவும், சொல்லிக் கொடுத்ததைத் திருப்பிச் சொல்லும் கிளி போலவும் ஆசிரியன் கற்பித்த அளவில் தன்னறிவை விளக்கிக் கொள்பவன் நடுத்தர மாணாக்கன்.

அடித்தர மாணாக்கன் - ஓட்டைக் குடமும் வெள்ளாடும் போன்றவன்

நீரால் நிரப்பப்பட்ட ஓட்டைக் குடமானது ஒரு வினாடியில் நீர் யாவையும் ஒழுகவிட்டு வெற்றுக் குடமாவது போலவும், ஓரிடத்தில் நின்று மேயத் தெரியாமால் பற்பல செடிகளிலுக்கும் சென்று வாய் வைத்துத் திரியும் வெள்ளாடு போலவும், ஆசிரியனிடம் இருந்து கற்றதை எல்லாம் உடனுக்குடன் மறந்து விட்டு, ஆசிரியனைக் குறை கூறி விட்டுப் பல ஆசிரியர்களிடம் சென்று பலதையும் கேட்டு விதண்டாவாதம் செய்து காலத்தை வீண் செய்யும் பழக்கமுள்ள மாணவனே அடித்தர மாணவன் ஆவான்.

கீழ்த்தர மாணாக்கன் - எருமையும் பன்னாடையும் போன்றவன்

தெளிநீர் நிறைந்த குளத்தில் நீராடச் சென்ற எருமையானது, நீரைக் கலக்கிச் சேற்றினைப் பூசிக் கொள்வதோடு நில்லாமல் அந்நீரை மற்றவ்ருக்கும் பயன்பட விடாது செய்தல் போலவும், தான் உயிர்த்த இடத்தில் உற்பத்தியாகும் சுவையுறு மதுவைத் தேக்காது, அதிற்கிடக்கும் செத்தை குப்பைகளையே தன்னிடத்தில் இருத்திக் கொள்ளும் ப்ன்னாடை போலவும், ஆசிரியனின் அறிவையும் குழப்பி, சூழ்நிலைக் காரணங்களால் அவர் கூறியதில் இருந்த அல்லாதனவற்றை மட்டும் மனதில் ஏற்றிக் கொள்பவனே கீழ்த்தர மாணவன் ஆவான்.

மூலம்: http://pollachinasan.com/ebook3/3300/pdf/TM3276.pdf

கோயமுத்தூர்க்காரன்....

யார்கிட்ட? கோயமுத்தூர்காரங்கிட்டயேவா?? நாங்க நோட்டே அடிச்சு வித்தவங்க... இஃகிஃகி... குறும்படம்னா, இது படம்!!



ஆருகிட்ட உங்ககிட்ட வேலையக் காமிக்கிறீங்க?!