6/30/2010

இதாங்க எங்க தமிழ்ப் பேரவை!!!


முனைவர் அரசு செல்லையா அவர்கள்!!


மக்கா, வாங்க பழகலாம்....எல்லாரும் வந்திடுங்க இராசா.... கூடுவோம்...குதூகலமா இருப்போம்.... நல்லது கெட்டதைப் பேசித் தீர்த்துக்கலாம்... இஃகிஃகி!!

வார ஈறுல, கனெக்டிக்கெட் திருவிழாவுக்கான நுழைவுச் சீட்டை இணையத்துலயே வாங்கிடுங்க... நேர்ல வாங்கினா, வெள்ளி கொஞ்சம் சேர்த்துத் தர வேண்டி இருக்கும்....

தமிழ்ச் சேவகன் சின்னப்பையன் சத்யா

ஆற்றுவார் ஆற்றல் பணிதல், அதுசான்றோர் மாற்றாரை மாற்றும் படை! இக்குறளுக்கு இலக்கணமானவர்; இளகிய மனதுக்குச் சொந்தக்காரர்; அதீத நகைச்சுவை உணர்வும் கொண்டவர்; பணிவாகப் பேசி அடுத்தவர் மனதைக் கொள்ளை கொள்ளும் அதிசய மனிதர் இவர்.

ஒன்பது மாதங்களுக்கு முன்னர், ஒரு மாலை நேரத்தில் எம்மை அழைத்து அளவளாவிக் கொண்டு இருந்தார். அதனூடாக, வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை மற்றும் பேரவையின் திருவிழாவைப் பற்றியும் நினைவு கூர்ந்துவிட்டு, ”தன்னார்வத் தொண்டராக வேலை செய்ய ஆயத்தமாக இருக்கிறேன். யாரை அணுக வேண்டும்?” என்று வினவினார். அன்றைய நாள் தொட்டு இன்று வரையிலும், தமிழர்களுக்காகவும் தமிழ்ச்சங்கப் பேரவைக்காகவும், அல்லென்றும் எல்லென்றும் பாராமல் உழைத்து வருபவர்தான்
சின்னப்பையன் என்கிற சத்யா அவர்கள்.

கனெக்டிக்கெட் மாகாணம், வாட்டர்பெரியில் நடக்க இருக்கும் தமிழ்த் திருவிழா ஏற்பாடுகளில் மூழ்கி இருந்த அவரிடம், நாம் கண்ட செவ்வியின் சாராம்சம்தான் இது.

வணக்கம் சத்யா! விழா ஏற்பாடுகளில் வெகுமும்முரமாய் இருக்கிறீர்கள். தங்கள் மனநிலை இப்போது எப்படி இருக்கிறது??

(வழமையான நகையுனூடே தொடர்கிறார்) வணக்கம், வணக்கம் பழமைபேசி! ஆமாம், இந்த ஏழு எட்டு மாத உழைப்பின் பலனை அறுவடை செய்யும் தருணத்தில் இருக்கிறோம். மகிழ்வாய் இருக்கிறேன். கடந்த எட்டு மாத கால அனுபவங்களை ஒரு நூலாகவே எழுதலாம். அந்த அளவிற்கு, முற்றிலும் மாறுபட்ட, மேலான அனுபவத்தை அடைந்த உணர்வுதான் மேலிடுகிறது.

மகிழ்ச்சி சத்யா! திருவிழாவுக்கான உங்களது கடுமையான உழைப்பு நன்றாகவே தெரிகிறது. என்றாலும், குழப்பங்கள், ஏமாற்றங்கள், அயர்ச்சி, சலிப்பு, விரக்தி முதலான உணர்வுகளும் உங்களை நிச்சயம் ஆட்கொண்டிருக்கும். அத்தருணத்தில், “இது எல்லாம் ஒரு பொழப்பா” என நினைத்த்து உண்டா??

இல்லவே இல்லை. நான் சார்ந்த சமூகத்திற்குப் பணி செய்வதை என் கடமையாகக் கருதினேன். கூடவே, இவ்வாய்ப்பு எனக்குக் கிடைத்தமையை எண்ணிப் பெருமையடையவும் செய்தேன். என் ஈடுபாட்டை அறிந்த அமெரிக்க நண்பர்கள், என்னைப் பாராட்டும் போது பெருமிதம் கொண்டேன் என்பதும் குறிப்பிட்த்தக்கது.

அமெரிக்க நண்பர்களைப் பற்றிக் குறிப்பிட்டீர்கள். அவர்களைப் போல, சில தமிழ் நண்பர்களும் கடுமையான விமர்சனத்தை வைத்திருப்பார்களே??

ஆமாம். சொன்னாலும் புரிந்து கொள்ளும் மனநிலையில் அவர்கள் இல்லை. தமிழர்களுக்கென்று ஒரு அமைப்பு; அதற்குப் பங்களிப்புச் செய்வது நம் கடமை. பங்களிப்புச் செய்து கொண்டு விமர்சனம் செய்யலாம். எதுவுமே செய்யாமல், புறம் பேசுவது சரியானது அல்ல என்பதே என் கருத்து.

சத்யா, பேரவைக்கும் தமிழ்ச் சங்கத்திற்கும் முன் அறிமுகம் இல்லாதவர் நீங்கள். அப்படியான சூழலில், தமிழ்ச் சங்கம் மற்றும் பேரவையின் முன்னோடிகள் உங்களை நட்த்திய விதம் பற்றிக் கூற முடியுமா??

அஃகஃகா! எட்டு, ஒன்பது மாதம் தொடர்ந்து வேலை செய்வதில் இருந்தே தெரிந்து கொள்ள முடியவில்லையா? மிகவும் நல்லபடியாக, சகோதர சகோதரிகள் போலவே நட்த்தினார்கள். ஏற்றத் தாழ்வு என்பது எல்லாம் அறவே இல்லை. இனியும் சொல்லப் போனால், எனக்கென்று ஒரு தனியிடம் கொடுக்கப்பட்டு இருப்பது போலவே உணர்கிறேன்.

அப்படியானால், மற்றவர்களுக்கு??

என்ன கேள்வி இது?? தனியிடம் என்றால், எனக்கான இடம் அது. அது போலவே மற்றவர்களுக்கும் கிடைத்து இருக்காமலா போயிருக்கும்?? இன்னுஞ் சொல்லப் போனால், என்னைவிட மிக அதிகமாக உழைப்பவர்கள் நிறைய இங்கு இருக்கிறார்கள்.

பேரவையின் சிறப்பு என்னவென நீங்கள் கருதுகிறீர்கள்?

புலம் பெயர்ந்த நாட்டிலே, வட அமெரிக்காவிலே இருக்கிற தமிழர்களை எல்லாம் ஒரு குடையின் கீழ்க் கொண்டு வரும் ஒரு கட்டமைப்பு. தமிழர்களாகிய நாம் எல்லோருமே அதை வலுப் பெறச் செய்ய வேண்டும் என்பதே எம் ஆவல்.

அதிகார மையம் போன்று யாராவது செயல்படுகிறார்களா? ஆமெனில், அதைப் பற்றி விரிவாக்க் கூற இயலுமா??

என்ன இது? நல்ல கேள்வியே உமக்குக் கேட்கத் தெரியாதா?? அப்படி எல்லாம் ஒன்றுமே கிடையாது. நீங்கள் தொடர்பு ஏற்படுத்திக் கொடுத்த நாளில் இருந்தே, நான் விழா ஒருங்கிணைப்பாளருடைய வழிகாட்டுதலில்தான் வேலை செய்து வருகிறேன். எங்கள் ஊரைச் சார்ந்த
முனைவர் பழனி சுந்தரம் அவர்கள்தான், அடுத்த இரு ஆண்டுகளுக்குத் தலைவர். ஆகவே, அவருடன் சேர்ந்து அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அவர் பின்னாலேயே நானும் பயணிப்பேன்.

பேரவைப் பணிகளில் உங்களை நீங்கள் ஈடுபடுத்திக் கொள்ளு முன்னரே, பேரவையைப் பற்றித் தெரிந்து வைத்திருந்தீர்களா??

இல்லை. சென்ற ஆண்டு விழாவின் போது, உங்களுடைய வலைப்பூவை அவதானித்திருந்தேன். அதுதான் எனக்குக் கிடைத்த அறிமுகம்.

அப்படியானால், பேரவையின் மீது வைக்கும் விமர்சனங்கள் சரியானதாக இருந்து, உமக்கு அவை பற்றிய விபரங்கள் தெரியாமலும் இருக்கலாம் இல்லையா??

விமர்சனங்கள் சரியானதாக இல்லாமலும் இருக்கலாம் இல்லையா? இந்த எட்டுமாத காலமாக அருகில் இருந்து பார்க்கிறேன். அப்படியெல்லாம் எதுவும் என் கண்களுக்குப் புலப்படவில்லை. அதற்கும் மேலாக, தெரிந்து கொள்வதில் எனக்கு நாட்டமும் இல்லை. தமிழர்கள் ஒன்று கூடி, விழாவைக் கொண்டாட வேண்டும். கல்வி மற்றும் சமூகப் பணிகளைத் தொடர்ந்து செய்ய வேண்டும். அவ்வளவுதான் என் மனதில் தோன்றுவது.

இப்படி தினமும் நள்ளிரவு வரை உழைக்கிறீர்களே? குடும்பத்தாரின் அணுகுமுறை எப்படி இருக்கிறது எனச் சொல்ல முடியுமா??

துவக்கத்தில் விரக்தியாகத்தான் பேசினார்கள். பெரும் குழுவாகப் பலரும் கூடி வேலை செய்யத் துவங்கியதைக் கண்டதும், விரக்தியானது மறைந்து ஒரு புரிந்துணர்வு வந்து விட்டதாக உணர்கிறேன் நான்.

சத்யா, உங்களைப் பேரவைக்கும் மற்றவர்களுக்கும் அறிமுகப்படுத்தி வைத்த்தில் எனக்குப் பெருமை; தமிழர்களுக்குப் பெருமை; குறிப்பாக, பதிவுலகுக்குப் பெருமை! உங்கள் வாழ்வு சிறக்க வாழ்த்துகள்!! என்னிடம் கேட்க வேண்டியது ஏதாவது உள்ளனவா??

நீங்கள் நிறைய இலக்கிய நூல்கள் படித்து வருவதாக அறிகிறேன். இளைஞர்களுக்கு இதனால் ஏதாவது பயன் உண்டா எனச் சொல்லுங்கள்.

மொழி வளம் கூடும். மனம் பண்படையும். கூடவே வாசிப்பனுபவம் பெருகிப் பேரின்பம் கிட்டும்; கிட்டுகிறது என்பதுதான் என் நிலை. நன்றி சத்யா! உங்கள் ஊர்த் திருவிழா சிறக்க எம் நல்வாழ்த்துகள்!!

நீங்களும் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறீர்கள். அதற்கும் மேலாக, உங்களுடைய பதிவுலகப் பணி சிறக்க என் வாழ்த்துகள்!

வேர்கள் தமிழில்! விழுதுகள் உலகெங்கும்!!

6/29/2010

அண்ணன் அப்துல்லாவே வருக!


கந்தையற்ற அண்ணனாய்
மாம்ணேயென ஆற்றுபவனாய்
ன்முகமே இனியபொழுதாய்
வது இயல்பினனாய்
வகைதரு உற்றவனாய்
க்கமது ஊட்டுபவனாய்
ல்லோருக்கும் எங்களவனாய்
ணியது ஆகுபவனாய்
ம்மையே கொண்டவனாய்
ண்ணுதல் ஒதுக்காது
ராயம் போற்றும்
ஒளதாரியனே

வட அமெரிக்கத் தமிழர் திருவிழாவுக்கு வருகை தரும்
அண்ணன் அப்துல்லாவே வருக! வருக!! வருக!!!

6/28/2010

அடுத்த அமெரிக்கத் தமிழ்த் தலைமுறையினரிடம் தமிழ் வாழுமா? வாழாதா??

மக்களே,

வணக்கம். வரும் வார ஈறானது, விடுப்புடன் கூடிய நெடிய வார ஈறு என்பது அமெரிக்காவில் உள்ளோர் அனைவருக்கும் தெரிந்ததே! மேலும், இவ்வார ஈறில், கனெக்டிக்கெட் வாட்டர்பெரி நகரில் தமிழர்கள் எல்லாம் பெருந்திரளாகக் கூட இருக்கிறார்கள்.

இவ்வாண்டுத் தமிழ்த் திருவிழாவானது, வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் வரலாற்றில் ஒரு பெரிய திருப்பு முனையாகவும், மைல்கல்லாகவும் அமைய இருக்கிறது என்பது நோக்கர்களின் எதிர்பார்ப்பு. எனவே, கூடுமான வரையிலும் தத்தம் நண்பர்களுடனும், குடும்பத்தாரோடும் கலந்து கொண்டு சிறப்புறச் செய்வீராக!

இத்திருவிழாவிலே, புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களின் அடுத்த தலைமுறையினரிடம் தமிழ் வாழும்! வாழாது!! எனும் தலைப்பிலான பட்டிமண்டபம் நிகழ்விருக்கிறது. முனைவர்.பர்வீன் சுல்தானா அவர்கள் நடுவராக இருந்து இந்நிகழ்ச்சியை நடத்த இருக்கிறார்.

புலம்பெயர்ந்து வாழும் அடுத்த தலைமுறையினரிடம் தமிழ் வாழுமா? வாழாதா?? எங்கே உங்கள் கருத்துகளையும் சொல்லுங்களேன் பார்ப்போம்!! வாழும் என்றால் அதற்கான காரணம் என்னவாக இருக்க முடியும்?? வாழாது என்றால், அதற்கான காரணம் என்ன??

வேர்கள் தமிழில்! விழுதுகள் உலகெங்கும்!!

6/27/2010

அமெரிக்கத் தமிழ்த் திருவிழாவில் சந்திப்போம்!


வட அமெரிக்கத் தமிழ் சங்கப் பேரவையின் தமிழ்த் திருவிழாவானது, ஜூலை 2 முதல் நடைபெற உள்ளது அனைவரும் அறிந்ததே! விழா நடக்கும் அரங்கில் இருந்து ஜூலை 1ம் தேதி முதற்கொண்டே, விழா ஏற்பாடுகள் மற்றும் நடக்கும் நிகழ்ச்சிகள் பற்றிய விபரங்களைத் தொகுத்தளிக்க இருக்கிறோம் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

வேர்கள் தமிழில்! விழுதுகள் உலகெங்கும்!!

பணிவுடன்,
பழமைபேசி மற்றும் நண்பர்கள்.

6/26/2010

செம்மொழி மாநாடும், கோவைக் காவல்துறையும்!!

தண்மை அளித்திடும் இலக்கியமும், தாரணி புகழ்ந்திடும் இலக்கணமும் கொண்ட தமிழ் மொழிக்கான ஒரு உலகளாவிய மாநாடு. அரசியல் மற்றும் இன்னபிற விழுமியங்களுக்கும் அப்பாற்பட்ட மனநிலை கொண்டு பார்க்கின், இம்மாநாட்டைக் கண்ணுறும் வாய்ப்பு கிடைக்காமற் போனதில் எனக்கு மிகுந்த ஏமாற்றமே!

தமிழ் மாணவன் என்கிற முறையிலே, நிறையக் கண்காட்சிகள், உரைகள், நிகழ்ச்சிகள் முதலானவற்றைக் கண்டு, தமிழின் தொன்மையை அறிந்து கொள்ளக் கூடிய ஓர் அரிய வாய்ப்பு. இவ்வார ஈறில், கிடைத்த நேரத்தில் இதுபற்றிய காணொலிகள் மற்றும் செய்திகளை வாசிக்கும் வாய்ப்புக் கிட்டியது.

மேலும், அரங்கத்தில் இருந்த நிறைய நண்பர்களிடமும் உரையாடினேன். நிறைவான செய்திகள் பல கிடைக்கப் பெற்றேன். கூடவே, நிறையற்றவையும் இருக்கத்தானே செய்யும்? முதலாவதாக, வருத்தப்பட வேண்டிய ஒன்றைக் கட்டாயம் குறிப்பிட்டே ஆகவேண்டும்.

ஏதோ போனால்ப் போகிறதென, இங்கொருவரும் அங்கொருவரும்தான் அதிகக் கலப்படமற்ற தமிழ் கொண்டு உரையாடுகிறார்கள். ஆங்கிலத்தின் தாக்கம் என்றைக்கும் இல்லாதபடி மேலோங்கி இருப்பதைக் காண முடிகிறது.

துவக்கப்பள்ளியில் நான் இருந்த காலமது. பட்டி தொட்டிகளில் எல்லாம் பேரலை வீசிய காலமது. திராவிட முன்னேற்றக் கழகம், திராவிடர் கழகம் மற்றும் T.இராஜேந்தர் ஆகியோரின் மேடைப் பேச்சுகளைக் கேட்க, வயதில் பெரியவர்களோடு மிதிவண்டியிலேயே ஊர் விட்டு ஊர் செல்வோம்.

பெதப்பம்பட்டியில் தூயமணி, வா.வேலூரில் அரங்கநாதன், சூலூரில் கூத்தரசன், உடுமலையில் S.K.இராஜூ போன்றோரெல்லாம் தமிழைத் தென்றலாய் வளைய விடுவார்கள். நட்சத்திரப் பேச்சாளர் கோவைத் தென்றல் மு.இராமநாதன் பேச்சைக் கேட்டாலோ, பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் குறிஞ்சி மலர்ந்தது போன்றொரு மலர்ச்சி உண்டாகும்.

அத்தகைய கொங்குநாட்டிலே நடக்கிற ஒரு தமிழ்மாநாட்டில், என் நண்பர்கள் எல்லாம் கலந்து கொண்டிருக்கிற இச்சூழலில், அவர்களொடு இல்லாதது குறித்து ஏமாற்றமே. எனினும், மாநாட்டு வளாகத்துள்ளேயே ஆங்கிலம் மேலோங்கியிருப்பது கண்டு, அவ்வேமாற்றம் என்பது அந்நொடியிலேயே மறைந்தும் விடுகிறது.

கொங்குதமிழைக் காணோம்; அந்த உவமை, உவமேயம், உவமானம் காணோம்; இலக்கியச் சுவையானது காணோம்; கட்சி மேடை என்றாலும் கூட, கலிங்கத்துப்பரணியும், புறநானூறும், பதிற்றுப்பத்தும், பொருநராற்றுப்படையும் இறக்கை கட்டிப் பறக்குமே அந்நாளில்? இன்று அந்த இறக்கைகள் எல்லாம் முறிக்கப்பட்டு விட்டனவா??

அரசியல்க் கட்சிகளின் பங்கு இவ்வாறிருக்க, மாநாட்டுக்கான ஏற்பாடுகளைச் சிறப்பாக நடத்தி இருக்கிற தமிழக அரசையும், அரசு சார்ந்த அலுவலர்களையும் வெகுவாகப் பாராட்டித்தான் ஆக வேண்டும். நான் பார்த்த செய்திகளைப் பொறுத்த மட்டிலும், நான் கண்ட காணொலிகள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பொறுத்த மட்டிலும், நண்பர்கள் சொல்லக் கேட்டதைப் பொறுத்த மட்டிலும், விழா ஏற்பாடுகளும், கட்டமைப்பும், சட்டமொழுங்கும் வெகு சிற்ப்பாகவும் ஒழுங்கோடும் அமைக்கப்பட்டு இருப்பதாக உணர்கிறேன்.

தமிழக அரசின் செயல்பாட்டைப் பொறுத்த வரையிலே, கோயம்பத்தூரைச் சார்ந்தவன் என்ற முறையில், நன்றி கூறுதலோடு அகமகிழவும் செய்கிறேன். எல்லாவற்றுக்கும் மேலாக, அந்நகரின் சட்டம் ஒழுங்கைச் செம்மையாகக் கொண்டு செல்லும் கோவைக் காவல் துறையினரின் கடுமையான உழைப்புக்குத் தலைவணங்குகிறேன்!!



எழில்வஞ்சி சிறப்புறுகவே!

6/25/2010

தமிழுக்கில்லை தட்டுப்பாடு!

இவ்வாண்டுக்கான விருந்தினர் சென்றாண்டு விருந்தினருடன்!



தங்கமே தமிழுக்கில்லை தட்டுப்பாடு


எத்தனை சபைகள் கண்டோம்
எத்தனை எத்தனை பகையும் கண்டோம்
அத்தனையும் சூடங்காட்டிச் சுட்டுப் போடு

மெட்டுப் போடு மெட்டுப் போடு
என் தாய் கொடுத்த தமிழுக்கில்லை தட்டுப்பாடு
மெட்டுப் போடு மெட்டுப் போடு
அட கடலுக்குண்டு கற்பனைக்கில்லை கட்டுப்பாடு

தங்கமே தமிழுக்கில்லை தட்டுப்பாடு
ஒரு சரக்கிருக்குது முறுக்கிருக்குது மெட்டுப் போடு

எத்தனை சபைகள் கண்டோம்
எத்தனை எத்தனை பகையும் கண்டோம்
அத்தனையும் சூடங்காட்டிச் சுட்டுப் போடு

மெட்டுப் போடு மெட்டுப் போடு
என் தாய் கொடுத்த தமிழுக்கில்லை தட்டுப்பாடு
மெட்டுப் போடு மெட்டுப் போடு
அட கடலுக்குண்டு கற்பனைக்கில்லை கட்டுப்பாடு

இது மக்கள் பாட்டு தன்மானப் பாட்டு
இது போராடும் உங்கள் வாழ்க்கைப் பாட்டு
கல்லூரிப் பெண்கள் பாடும் கன்னிப்பாட்டு
சபைகளை வென்று வரும் சபதம் போட்டு
நாம் கட்டும் பாட்டு ஈரம் தட்டும் பாட்டு
கட்டிச் செந்தேனாய் நெஞ்சில் சொட்டும் பாட்டு
தாய்ப்பாலைப் போல் ரத்தத்தில் ஒட்டும் பாட்டு
தமிழ் மக்கள் வீட்டைச் சென்று தட்டும் பாட்டு

மெட்டுப் போடு மெட்டுப் போடு
என் தாய் கொடுத்த தமிழுக்கில்லை தட்டுப்பாடு
மெட்டுப் போடு மெட்டுப் போடு
அட கடலுக்குண்டு கற்பனைக்கில்லை கட்டுப்பாடு

இனி கண்ணீர் வேண்டாம் ஒரு கவிதை செய்க
எங்கள் கானங்கள் கேட்டுக் காதல் செய்க
நம் மண்ணுக்கும் விண்ணுக்கும் பாலம் செய்க
நலம் பெற வேண்டும் என்றால் நன்மை செய்க
நம் பூமி மேலே புது பார்வை கொள்க
நம் இயற்கை மேல் இன்னும் இச்சை கொள்க
கொஞ்சம் நிலவுக்கு நேரம் வைத்து தூக்கம் கொள்க
பாறைக்குள் வேரைப் போலே வெற்றி கொள்க

மெட்டுப் போடு மெட்டுப் போடு
என் தாய் கொடுத்த தமிழுக்கில்லை தட்டுப்பாடு
மெட்டுப் போடு மெட்டுப் போடு
அட கடலுக்குண்டு கற்பனைக்கில்லை கட்டுப்பாடு

தங்கமே தமிழுக்கில்லை தட்டுப்பாடு
ஒரு சரக்கிருக்குது முறுக்கிருக்குது மெட்டுப் போடு
எத்தனை சபைகள் கண்டோம்
எத்தனை எத்தனை பகையும் கண்டோம்
அத்தனையும் சூடங்காட்டிச் சுட்டுப் போடு

மெட்டுப் போடு மெட்டுப் போடு
என் தாய் கொடுத்த தமிழுக்கில்லை தட்டுப்பாடு
மெட்டுப் போடு மெட்டுப் போடு
அட கடலுக்குண்டு கற்பனைக்கில்லை கட்டுப்பாடு
--கவியரசு வைரமுத்து

6/24/2010

வட அமெரிக்கப் பதிவர் சங்கமம் - பரிசு அறிவிப்பு

உணர்ந்திடுக, இன்றே உணர்ந்திடுக
தமிழனுக்கு நேரும் ஏற்றம்
உமக்கு நேரும் ஏற்றம் அன்றோ?!
பிணிநீக்க எழுந்திரு நீ இளந்தமிழா,
பதிவுலகச் செம்மலே,
பிற்றை நாளுக்கணிசெய்யும்
தமிழ்ப்பணி செய்ய எழுகவே!
அறத்தைச்செய்!
வீறுகொள் அழகு நாட்டில்!!
பணிசெய்வாய் தமிழுக்கு
துறைதோறும் துறைதோறும்
பழ மொழியோனே!
தமிழ்த் திருவிழாவின்
பதிவர் சங்கமத்தில்
சங்கமித்திடுக! உறவு பேணிடுக!!

பதிவுலகப் பொங்குதமிழ்ச் செலவங்களே,

அமெரிக்காவிலே, கனெக்டிக்கெட் மாகாணத்திலே, வாட்டர்பெரி நகரில் எதிர்வரும் ஜூலை மாதம் 3. 4 மற்றும் 5ம் தேதிகளில் தமிழர்கள் கூடும் திருநாள் நடைபெற உள்ளமை நீங்கள் அறிந்ததே! விரைவில், விழாவுக்குப் பதிவு செய்யும் முறைமையானது நிறைவெய்த உள்ளது. கூடுதல்த் தகவல்களுக்கு, பேரவையின் வலைமனையை நாடவும்.

மேலும் திருவிழாவிற்கு அழகுமிகு அவனியின் எட்டுத் திக்கெங்கும் இருந்து பன்னாட்டுப் பதிவர்கள் வர இருப்பது இவ்வாண்டுத் திருவிழாவினுடைய மகுடத்திற்கு அணி சேர்க்கும் மாணிக்கக் கல்லாகும். தனிப்பட்ட முறையிலே, இது எனக்கும் பெருமை சேர்க்கும் ஒரு பற்றியம்.

நீங்களும் வந்து சங்கமத்திலே வந்து உங்களை இணைத்துக் கொள்வீர்களேயானால், இன்னும் பல இரத்தினங்கள் மகுடத்தில் கோர்க்கப்பட்டதென முரசு கொட்டுவேன். வாருங்கள், உறவை மேம்படுத்திப் பெருமை கொள்வோம். விழாவுக்கு உடனே, பதிவு செய்யுங்கள்! பதிவு செய்த மறுகணமே, பதிவர் சந்திப்புக்கும் உங்கள் பெயரை முன்மொழிந்து விடுங்கள்.

ஆம், ஜூன் 29ந் தேதி கிழக்கு அளவீட்டு மணி மாலை ஐந்துக்கு முன்னர் பதிவு செய்பவர்கள், சிறப்புப் பரிசில் பெறத் தகுதி உள்ளவர் ஆகுவர். பதிவர் சங்கமத்தின் போது வெற்றியாளர் குடவோலை முறையில் தெரிவு செய்யப்பட்டுப் பரிசில் பெற்றுச் சிறப்பெய்துவர் என்பதையும் அன்பொழுகத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதுகாறும் குடவோலையில் இடம்பெற்றோர்:

இனிய இளா
தளபதி நசரேயன்
சுந்தர வடிவேலு
தமிழ்சசி
சின்னப்பையன் சத்யா
மோகன் கந்தசாமி
வழிப்போக்கனின் கிறுக்கல் யோகேசுவரன்
மருதநாயகம்
மோகன்
விஜி சத்யா

சிறப்பு விருந்தினர்

புதுகைத் தென்றல் அப்துல்லா
பெரு நாட்டுப் பெருந்தகை பெருசு

குறிப்பு: ஜூன் 29க்கு முன்னர் இப்பதிவிலோ, எமது மின்னஞ்சலிலோ பதிவு செய்யாதோரின் பெயரோலைகள் குடத்தில் இடப்படாது.

வேர்கள் தமிழில்! விழுதுகள் உலகெங்கும்!!

6/23/2010

தாவல்

மேலிடத்தை முன்னிறுத்தி.......

வேட்டி சட்டை தேடினான்

அள்ளக்கைகள் தேற்றினான்

செய்து தருவதாய்ச் சொன்னான்
முன்பணம் முடிவாய் வாங்கினான்

கும்பிடுபவன் ஆனான்
வாக்குறுதி கொடுத்தான்

கணக்கில் ஒன்றினான்
சாதி பார்த்து நின்றான்

நன்றாகவே கவனித்தான்
நல்லபடியாய் வென்றான்

பெட்டி பெட்டியாய்ப் பெற்றான்
பட்டி பட்டியாய் வளைத்தான்

பார்ப்பதற்குச் சென்றான்
எல்லாவற்றையும் இழந்தான்

கடைசியாக......

அந்த மடம் புளித்து
இந்த மடம் புகுந்து
குவியாய்க் குவித்து
காறிக் காறித் துப்பினான்!!



இது தாவல்..... ஆனாக் காவல் இங்க இருக்கு!!!

FeTNA: சொல்ல நினைத்தேன் இது கேளீர்!

வட அமெரிக்கத் தமிழரே இது கேளீர் - உம்பால்
சொல்ல நினைத்தேன் இது கேளீர்!

உள்ளங்குடியுறு உம்தமிழை உயிராய் ஓம்பிடுவீர்
மற்றனமுன் வேம்பாய் ஒருகாலும் நினையாதீர்
வட அமெரிக்கத் தமிழரே இது கேளீர் - உம்பால்
சொல்ல நினைத்தேன் இது கேளீர்!

தனித்தியங் கும்தன்மை உமக் குண்டு
தமிழே ஞாலத்தில் தாய்மொழி பண்டு!
புலம்பெயர்ந்த நாடிதில் நற்பண்பு கொணர்
தமிழை என்றென்றும் போற்றிடுவீர்!!

வட அமெரிக்கத் தமிழரே இது கேளீர் - உம்பால்
சொல்ல நினைத்தேன் இது கேளீர்!

வந்த இடத்திற் தாய்மொழி மறவல் ஆகிடுமோ
வாழ்வில் உயிர்நாடி புறத்தொழித்தல் வேண்டாமே
உம்மக்கள் கூடிடுவார் பேரவையின் விழாவதிலே
வந்திடுவீர் பெருங்கூட்டமெனக் கூடிடுவீர்

விழாவிற் கூடியபின் பிரிந்திட நெஞ்சம் பெறாது
இசைத்திட்ட தமிழை பேசாதிருத்தல் ஒண்ணாது
கொண்ட உறவைப் போற்றாதிருக்க மனமொப்பாது
இன்பந்தரு தமிழில் ஒன்றிட உயிர் மறுக்காது

வட அமெரிக்கத் தமிழரே இது கேளீர் - உம்பால்
சொல்ல நினைத்தேன் இது கேளீர்!


எவையும் தன்னுள் ஆக்கிய பெருவெளி
எங்கும் அடடே தாயின் பேரொளி என
எந்தையும் தாயும் குலாவி மகிழ்ந்திட்ட
எம்மொழியைச் செப்பி மகிழ்ந்திட வாரீர்

எண்ணிப் பத்துத்தினங்களே உள அன்றோ?
எண்ணிப் பார்க்காது இன்றே பதிந்திடுவீர்
ஞாலமெலாம் நோக்க இருப்பன கண்டிடுவீர்
தமிழரே வாரீர்! வாரீர்! வாரீர்!!

வட அமெரிக்கத் தமிழரே இது கேளீர் - உம்பால்
சொல்ல நினைத்தேன் இது கேளீர்!
கனெக்டிக்கெட் தமிழ்த் திருவிழாவிற்கு உம்முறவு
உடன் அழைத்து வாரீர்! வாரீர்!! வாரீர்!!!

வட அமெரிக்கத் தமிழரே இது கேளீர் - உம்பால்
சொல்ல நினைத்தேன் இது கேளீர்!

வேர்கள் தமிழில்! விழுதுகள் உலகெங்கும்!!

6/21/2010

செம்மொழி மாநாடு: ஈரோடு கதிர் பேசுகிறார்!

யார் இந்த ஈரோடு கதிர்?


அன்புப்பெருக்கானது பொங்கு கடலினும் அளப்பரியதாய் மேலோங்கி, எங்கும் செழித்திடச் செய்யும் கொங்குவள நாட்டின் சிற்றரசுகளில் ஒன்றான பொன்கலூர் நாட்டுக்கு உரிய செம்பை எனும் கிராமத்தைச் சார்ந்தவர். வளர்ந்து வரும் படைப்பாளி, சிந்தனைவாதி!

சிற்றிதழ்களில் இவரது கட்டுரைகள் தொடர்ந்து இடம் பெற்று வருகின்றன. இணையத்திலும் கடந்த இரு ஆண்டுகளாக எழுதி வருகிறார். சீரிய ஆளுமைக்குச் சொந்தக்காரர். சமூகநலப் பணிகளை வெகுவாக ஆதரித்து எழுதுபவர். அரிமா சங்கம் மற்றும் ஜேசீஸ் சங்கம் முதலானவற்றில் முனைப்பாகச் செயல்பட்டு வருபவர்.

பல ஆண்டுகளாக உடல்தானம் மற்றும் கண்தானங்களை முனைப்போடு ஆதரித்து, ஊக்குவித்துச் செயல்படுத்தி வருபவர். அரிமா சங்கம் மற்றும் தனது நண்பர்களோடு இணைந்து மரம் நடுதல், கல்விக்கான உதவி முகாம்கள் முதலானவற்றை நடத்துவதிலும் பங்களிக்கிறார்.

உலகளாவிய வலைப்பதிவர் கட்டமைப்பு உருவாக வேண்டும் என்பதில் திண்ணமாய் இருப்பவர். தமிழ்மணம் திரட்டியின் நல்லாதரவோடு, ஈரோடு பதிவர் சங்கமம் எனும் நிகழ்ச்சியை வெகு நேர்த்தியாக நடத்திக் காட்டியவர்களுள் இவரும் ஒருவர்.

வார ஈறில் வேளாண்மைத் தொழில் புரிந்து வரும் தன் பெற்றோருடனும், வார நாட்களில் ஈரோடு நகரில் சுயதொழில் புரிந்து கொண்டும் சமூகத்திற்குத் தன்னாலான பணிகளைச் செய்து வருகிறார்.

செம்மொழி மாநாடு

கோயம்பத்தூரில் வெகு விமரிசையாக நடக்கவிருக்கும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் ஒரு பகுதியாக தமிழிணைய மாநாடும் நடக்கவிருக்கிறது. இணையத்தில் தமிழ் வளர்க்கும் பல ஆன்றோர், சான்றோர், தொழில்நுட்பப் பொறிஞர்கள், இளைஞர்கள் என ஏராளமானோர் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

இந்நிகழ்வையொட்டி ஜூலை 25, 2010ம் நாள் பிற்பகல் 3.45 மணியிலிருந்து மாலை 4.15 வரையிலும், மாநாட்டு வளாகத்தில் இருக்கும் முரசொலி மாறன் அரங்கத்தில், கவிஞர்.திலகபாமா, சிவகாசி அவர்கள் தலைமையில் நடைபெறும் நிகழ்ச்சியில் வலைப்பூக்களால் நிகழ்ந்த சாதனைகள் எனும் தலைப்பில் உரையாற்றவிருக்கிறார் ஈரோடு கதிர் அவர்கள்.

சமூக மேன்மையைக் கருத்திற் கொண்டு படைக்கும் எழுத்துகளைக் கொண்ட ஒரு வலைப்பூவின் படைப்பாளி, இத்தகைய தலைப்பில் உரையாற்றுவது அவருக்கும், பதிவுலகக் கட்டமைப்புக்கும் பெருமை சேர்க்கும் ஒன்றாகும்.

நாளுக்கு நாள் இணையப் பயன்பாடு பெருகி வரும் இவ்வேளையில், வலைப்பூக்களின் சிறப்பைக் கூட்டப்போகும் அவரது உரை மற்றும் அவரோடு இணைந்து அரங்கத்தைச் சிறப்பிக்கும் மற்றவர்களது உரையும் சிறப்பாக அமைய வேண்டும் என வாழ்த்துகிறோம்!

எதுசெய்ய நாட்டுக்கே எனத்துடித்த சிங்கமே! இன்றே, இன்னே,
புதுநாளை உண்டாக்கித் தமிழ்காப்பாய் புத்துணர்வைக் கொணர்வாய்
அதிர்ந்தெழுக! தமிழுக்குத் துறைதோறும் துறைதோறும் அழகு காப்பாய்!
இதுதான்நீ செயத்தக்க எப்பணிக்கும் முதற்பணியாம் எழுக நன்றே!
--பாவேந்தர் பாரதிதாசன்


வாழ்த்தும்,
உலகளாவிய நண்பர்கள் மற்றும் பழமைபேசி

6/20/2010

FeTNA: ஆடுவமே பள்ளுப் பாடுவமே

ஆடுவமே பள்ளுப் பாடுவமே! தமிழ்
ஆட்சியின் மாட்சியில் கூடுவமே!

கண்கவர் கனடியத் தேசமுதல் - தென்கோடிப்
பெருதேச மட்டும் தமிழர் கோலங் கொண்டே
ஆடுவமே பள்ளுப் பாடுவமே! தமிழ்
ஆட்சியின் மாட்சியில் கூடுவமே!

மானிடம் என்னுமோர் ஆதிப்பயிர் - தமிழ்
மக்களென்றே குதித்தாடுவமே!
கானிடை வாழ்ந்திட்ட மனிதர்க்கெலாம் - நல்ல
கதியினைக் காட்டினர் தமிழர் என்றே நாம்
ஆடுவமே பள்ளுப் பாடுவமே! தமிழ்
ஆட்சியின் மாட்சியில் கூடுவமே!

வானிடை மிதந்திடும் தென்றலிலே - மணி
மாடங்கள் கூடங்கள் மீதினிலே,
தேனிடை ஊறிய செம்பவழ - இதழ்ச்
சேயிழை யாரொடும் ஆடுவமே! நாம்
ஆடுவமே பள்ளுப் பாடுவமே! தமிழ்
ஆட்சியின் மாட்சியில் கூடுவமே!

கவிதைகள், காவியம், உயர்கலைகள் - உளம்
கவர்ந்திடும் சிற்பமும் சிறந்தனவாம்
குவிகின்ற பொன்பொருள் வெள்ளியெலாம் - இங்குக்
குறையிலவாம் என்றாடுவமே!பள்ளுப் பாடுவமே! தமிழ்
ஆட்சியின் மாட்சியில் கூடுவமே!

நாஞ்சில் ஐயனொடு பெருங்கூட்டம் இலக்கியம் செப்பிடுவர்
கவின்மிகு கவிகள் கவி பாடிடுவர், தித்திக்கும்
தீந்தமிழ்ப் பேச்சாளர் பட்டிமண்டபம் நடத்திடுவர்; நாம்
ஆடுவமே பள்ளுப் பாடுவமே! தமிழ்
ஆட்சியின் மாட்சியில் கூடுவமே!

ஆடுவமே பள்ளுப் பாடுவமே! தமிழ்
ஆட்சியின் மாட்சியில் கனெக்டிகெட்
வாட்டர்பெரியில் கூடுவமே!
ஆடுவமே பள்ளுப் பாடுவமே! தமிழ்
ஆட்சியின் மாட்சியில் கனெக்டிகெட்
வாட்டர்பெரியில் கூடுவமே!








மக்களே,

வணக்கம். சென்ற ஆண்டைக் காட்டிலும், கூடுதல் இணைய, பல்லூடக வசதிகளுடன், இந்த ஆண்டும், வட அமெரிக்காவில் நடக்கப் போற தமிழ்த் திருவிழாவை, உலகெங்கும் பரந்து விரிந்து வாழும் நம் பதிவுலக நண்பர்களுக்கும், வாசகர்களுக்கும் தொகுத்தளிக்க இருக்கிறேன்.

அமெரிக்காவில் இருக்கும் தமிழர்கள் எல்லாம் நிகழ்ச்சிக்கு வாங்க. நேர்லயே சந்தித்துப் பேசுவோம். உறவுகளை அமைப்போம். பொருளாதார, பண்பாட்டு மேம்பாடுகளுக்கான வழி வகைகளை வலுப்படுத்துறதுக்கான ஒரு வாய்ப்பா இதைப் பயன்படுத்த முனைவோம். உடனே, நிகழ்ச்சிக்கு முன்பதிவு செய்யுங்க. இன்னும் 12 நாட்கள்தான் இருக்கு.

நேரடித் தொகுப்பாளரா இருந்து, நிகழ்ச்சியை உடனுக்குடன் அப்படியே இம்மி பிசகாது, உள்ளது உள்ளபடி தர முயற்சிக்கிறேன். நீங்களும் உங்க ஆலோசனையச் சொல்லுங்க. நிறைய பதிவர்கள் வர இருக்காங்க. நான் அவங்களோட ஒருங்கிணைஞ்சு, எவ்வளவுக்கு எவ்வளவு மேம்பட்டுத் தர முடியுமோ, அந்தளவுக்கு நயமாவும் தரமாவும் தர முயற்சிக்கிறேன்.

FeTNA: விளக்கமய்யா விளக்கம்!!!

// From: மஞ்சூர் ராசா
Date: Sun, 20 Jun 2010 10:53:11 +0300
Local: Sun, Jun 20 2010 3:53 am
Subject: Re: [தமிழமுதம்] இராவணன் - திரைப்பட விமர்சனம்/அனுபவம்

அன்பு நண்பரே

உங்க ஃபெட்னா... தமிழ் கலாச்சாரத்தை வளர்ப்பதை விட சினிமாக்காரர்களுக்கும் அவர்களின் கூத்துக்கும் தான் முன்னுரிமை கொடுத்து அவர்களை தான் தொடர்ந்து அழைப்பதாக கேள்விப்பட்டேன். இதுதான் ஃபெட்னாவின் தமிழ் வளர்க்கும் குறிக்கோளாவென ஒரு பதிவொன்றில் படித்த ஞாபகம்..

விளக்கம் ப்ளீஸ்... //



ஐயா,

வணக்கம். விளக்கம் அளிக்க மிகவும் கடமைப்பட்டு உள்ளேன்.

தமிழ்விழாவின் நிமித்தம்:

வட அமெரிக்காவில் உள்ள தமிழர்களை எல்லாம் ஒன்று கூட்டி, அவர்களுக்குள் ஒரு தொடர்பை உருவாக்கி பிணைப்பை ஏற்படுத்துவதே!

தமிழ்விழாவின் நோக்கம்:

நடைபெறுகிற அந்த மூன்று நாட்களுக்கும், தமிழருள் உள்ள பலதரப்பட்டவரையும் கவர்ந்திழுத்து, அவர்களுக்கான நிகழ்ச்சிகளை வழங்குவது.

தமிழ்விழாவின் நடைமுறை:

அனைத்தும் பிரிவினரையும் மனதிற்கொண்டு, இருக்கிற நேரத்தைச் சமச்சீராகப் பிரித்து, அதற்கேற்றாற் போல நிகழ்ச்சி நிரலை வகுப்பது. ஆன்மீகம், கலை, இலக்கியம், தொழில் நுட்பம், சமூக விழுமியம், திருமண அரங்கம், கணினி அறிவியல், மருத்துவம், தொழில் முனைவோர் அரங்கம், பதிவர் பட்டறை, கல்வி இப்படி இன்னும் சில. தயை கூர்ந்து, நிகழ்ச்சி நிரலைக் கண்டு இதனை நீங்களே உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

வரவு மற்றும் செலவு:

பேரவை என்பது இலாப நட்டமற்ற பொது அமைப்பாக, வட அமெரிக்க வருவாய்த் துறையினரால் ஆண்டு தோறும் தணிக்கைக்கு உட்பட்டு நடத்தப்படுகிற அமைப்பு. மேலும், ஒவ்வொரு வெள்ளிக்குமான கணக்கு இணையத்தில் மக்கள் பார்வைக்காக வெ(ள்)ளிப்படையாக வைக்கப்பட்டே இருக்கிறது.

நிர்வாகம்:

முழுக்க முழுக்க, மக்களாட்சிக் கோட்பாட்டினைத் தழுவிய முறையிலேயே நிர்வாகிகள் தெரிவு செய்யப்படுகிறார்கள். முனைப்போடு செயல்படுவோர் எவருக்கும் முன்னுரிமை தானாகவே வந்து சேர்ந்துவிடுகிறது என்பது வெள்ளிடைமலை.

நிதியின் பயன்பாடு:

நிர்வாகத்தின் ஒட்டுமொத்த ஒப்புதலோடு, தமிழும் தமிழனும் சார்ந்த மேம்பாட்டுக்குப் பல விதங்களிலும் செலவிடப்படுகிறது.

குறுகிய காலக் குறிக்கோள்:

இயன்ற அளவில், இளைய தலைமுறையைத் திரட்டி அவர்களுக்குப் பயிற்சியூட்டி, பின் பேரவையை நடத்தும் பொறுப்பினைக் கையளிப்பது.

இவையெல்லாம், பேரவையை அண்டி உள்ள எவருக்கும் தெரிந்த பற்றியங்கள். கலைத்துறையினரை அழைப்பது பற்றி, ஆண்டுதோறும் முணுமுணுப்புகள் எழுவது வழமையே. ஏன் இந்த இரட்டை வேடம் சிலருக்கு??


திரைப்படத்துறையின் மீதான நாட்டத்தை அமெரிக்காவில் இருக்கும் பேரவைதான் தமிழர்களுக்கு ஊட்டுகிறதா?? சமூகத்தோடு அது ஒன்றிவிட்ட ஒன்று என்பதில் உண்மை இல்லையா?? திரைப்படக் கலைஞர்கள் என்பவர்கள் மனிதர்கள் அல்லவா?? அவர்கள் எதோ, தீண்டத்தகாதவர்கள்
போல எண்ணுவது ஏன்??

திருவிழாவில் மூன்றாவது நாளை, முழுக்க முழுக்க இலக்கியத்திற்கு ஒதுக்குகிறார்களே? ஏன், கூட்டத்திற்கு 25% பேர் கூட வருவதில்லை??கூட்டத்தினையும் ஏற்பாடு செய்துவிட்டு, அத்தகைய கூட்டத்திற்கு வரவேண்டாம் என்றும் பேரவையினர் கூறினார்களா??

கண்ணால் காண்பதுவும் பொய்; காதால் கேட்பதுவும் பொய்; தீர விசாரிப்பதே மெய்! மெய்!! மெய்!!!

பொறுப்பி: நான் பேரவையின் எந்தவொரு நிர்வாக அமைப்பிலும் உறுப்பினன் அல்ல. சக தமிழன் என்ற முறையில் முழுக்க முழுக்க ஒரு ஆர்வலனே. மேலும், இதழியலாளன் என்ற முறையில் ஒரு சார்பின்றி, தேவையிருப்பின் விமர்சிக்கவும் தவறுவதில்லை என்பதைக் கடந்த ஆண்டுக்கான எனது பங்களிப்பை வாசித்தவர்கள் உணர்ந்தே இருப்பர்.

செந்தமிழால் சேர்ந்திணைவோம்!
செயல்பட்டே இனம் காப்போம்!!

பணிவுடன்,
பழமைபேசி
.


6/19/2010

இராவணன்


நாம எப்பவும் இந்தத் திரைப்படங்களுக்கு போவதும் இல்லை; போயிப் பார்த்துட்டு விமர்சனம் எழுதின அனுபவமும் இல்லை. ஆகவே, இதை ஒரு கைதேர்ந்த விமர்சகப் பண்டிதருடைய விமர்சனம் என நினைத்துக் கருத்து சொல்வது தவிர்க்க வேண்டுகிறேன்.

காலையில எழுந்ததுமே சீமாச்சு அண்ணன் சொன்னாரு, சனிக்கிழமையும் தமிழ் இராவணனை சார்லட்ல காண்பிக்கிறாய்ங்களாம்னு.

அது சரி, எருமைக்குப் புல் புடுங்கினா மாதிரியும் ஆச்சு, காடு சுத்தமான மாதரயும் ஆச்சு; கோவிலுக்குப் போயி சாமி கும்பிட்ட மாதிரியும் ஆச்சு, அண்ணனுக்குப் பெண் பார்த்த மாதிரியும் ஆச்சு; அரங்கத்துக்குப் போயி திரைப்படம் பார்த்த மாதிரியும் ஆச்சு, கைவசம் இருக்கிற FeTNA தமிழ்த் திருவிழா நறுக்கு(flyer)களை அங்க வெச்சி விநியோகம் செய்தது போலவும் ஆச்சுன்னு, மணி மூனே முக்கால்க் காட்சிக்கு நானும் எனது நண்பரும் போயிருந்தோம்.

காட்சி துவங்கினதுமே பட்சி சொல்லுச்சு, இது எதோ அரைச்ச மாவையே அரைக்கிற வேலைன்னு. இருந்தாலும், இருந்து பார்ப்போம்னு மனசைத் தேத்திகிட்டேன். ஏன்னா, படத்துக்கு பங்களிச்ச நிறையக் கலைஞர்கள், விக்ரம், ப்ரியாமணி, பாடகர் கார்த்திக்னு நிறையப் பேர் நம்ம கனெக்டிக்கெட் தமிழ் விழாவுக்கு வர்றாங்க பாருங்க.

எடுத்த எடுப்புலயே, காவல்துறை அதிகாரியின் மனைவியக் காட்டுக்குள்ள கடத்திட்டுப் போயிடுறாங்க. எந்தவிதமான அத்துமீறலும் இல்லாம, மற்றவருடைய மனைவியான அந்தப் பெண்மணி கவனிக்கப்படுறாங்க.

கதையின் போக்குல, ஏன் அவங்க காவல்துறை அதிகாரிகள் மேல தீவிரமா நடந்துக்கிறாய்ங்க அப்படின்னு சொல்லும்படியான காட்சிகள். மேட்டுக் குடியினரால, மேட்டுக்குடி, காட்டான், கிராமத்தான், ஒடுக்கப்பட்டவன் முதலான சொற்கள் வெகு இலாவகமா, எப்பவும் போலக் கையாளப்பட்டு எடுக்கப்பட்ட திரைப்படம்தான் இதுவும்.

மேட்டுக்குடியினரால, எப்படியெல்லாம் அதிகார மமதை கையாளப்படுது. அப்பாவி, சாமன்ய மக்கள் எப்படியெல்லாம் பாதிக்கப்படுறாங்கன்னு உணர்த்தக் கூடிய காட்சிகள் நன்றாகவே படமாக்கப்பட்டு இருக்கிறது. இங்கதாங்க நமக்கு வேதனை தலைதூக்குது!

பாதிப்பு, அடக்குமுறை, கிராதகம், இதையெல்லாம் எதிர்த்துக் குரல் குடுக்கிறதை ஒரு கதாநாயகத்துவமாக் காண்பிக்கிற சமூகம், ஏன் நிதர்சன வாழ்க்கையில அதை வேறுபடுத்தியும், மாறுபடுத்தியும், திரித்தும், இழித்தும் காண்பிக்கணும்? இப்படியான படைப்புகளும் மேட்டுக்குடியில இருந்துதானே வருது?! நிதர்சனத்துல நடைபெறுகிற திரிபுகளுக்கும், இழிவுகளுக்கும் அவர்கள்தானே காரணம்??

இதை யோசிச்சி, மனசு நொந்துகிட்டு இருக்கிற இடத்துலதாங்க, அந்தப் பாடல் வரிகளைப் பாடகர் வெகு அருமையாப் பாடுறார். அது, வெந்த புண்ல வேலைப் பாய்ச்சின மாதிரியே இருந்தது எனக்கு. அப்படியென்ன சொல்லுச்சு, அந்த வரிகள்?

வலி மிகும் இடங்கள் வலி மிகா இடங்கள் தமிழுக்குத் தெரிகின்றதே! வலி மிகும் இடங்கள் வலி மிகா இடங்கள் தங்களுக்குத் தெரிகின்றதா?! இப்படித் தொடர்ச்சியாப் போகும் அந்தப் பாடல்.

நிச்சயமாக் கவிஞர் இப்படித்தான் எழுதி இருக்க வேண்டும், வலி மிகும் இடங்கள் வலி மிகா இடங்கள் தமிழுக்குத் தெரிகின்றதே! வலி மிகும் இடங்கள் வலி மிகா இடங்கள் தமிழனுக்குத் தெரிகின்றதா?! அப்படின்னு. படத்துக்காகக் கொஞ்சம் மாத்திட்டாங்களோ??

எங்க, எப்ப வலி மிக வேணும்; எங்க, எப்ப வலி மிகாமல் இருக்கணும்ன்னு தெரியாமத்தானே இருக்கு சமூகம்? திரையரங்குல அழுவோம்! வாழ்க்கையில எத்தகைய கொடூரத்தையும் பார்த்திட்டுக் கண்டுங் காணாமப் போறவங்கதானே நாம்??


இதை நாம எழுதினோமானா, இவன் அமெரிக்காவுல இருந்துட்டு வக்கணையா எழுதுறான். போயி, ஊர்ல, வழில நின்னு கூவ வேண்டியதுதானே அப்படின்னும் பகிடி விடுவான் நம்மாளு.

கிராமத்தானுக, காட்டானுக, பாமரன்கள் எல்லாம் அப்பழுக்கு இல்லாத வெள்ளந்திகள்ங்ற உண்மையத் தெரியாத்தனமாக் காண்பிச்சிட்டாங்க போலிருக்கு. அதுக்கே, நீங்க தாராளமா இந்த படத்துக்குப் போகலாம்.

முடிவுக் காட்சி வருது.... ஒரு ஆண், எந்த சூழ்நிலையிலும் எந்தப் பெண்ணையும் ஐயமுறுகிற பொதுப்புத்தி உடையவன்ங்ற யதார்த்தம் துணிவா வெளிப்படுதோன்னு நம்பி உட்கார்ந்தேன். ஆனா, அது ச்சும்மா, லுலுலாய்க்குன்னு சொல்லி முழுப் பூசணிக்காயை சோத்துல மறைக்கிறாய்ங்க. இதோட, வண்ணத்திரை வெண் திரையாகுது. என்ன கொடுமை சரவணன் இது?

நடித்த கலைஞர்கள், தங்கள் பங்கைச் செம்மையாச் செய்து இருக்காங்க. ஓரிரு பாடல்களும் அருமை. ஆனாக் கதையும் வசனமும்??

அடப் போங்கய்யா, நீங்களும் உங்க நீதியும், கதையும்ன்னு மனசுல நொந்துகிட்டே வந்து வாசல்ல நின்னேன். வர்றவங்களுக்கு எல்லாம், தமிழ்த் திருவிழா 2010 குறித்த நறுக்கைக் கொடுத்தேன். அவங்கள்ல சிலராவது, தமிழ் நிகழ்ச்சிக்கு வருவாங்கன்னு எதிர்பார்க்குறேன்.


என் வங்கணச் சிங்கியைக் காணவில்லையே?!

அதுவொரு மாலை நேரம்.... ஊருக்குத் தெற்காலே வளைந்து நெளிந்து ஓடும் செண்பக ஓடை... ஓடையின் இரு மருங்கிலும் பச்சை விரிப்பு காலம் முழுதும் விரிக்கப்பட்டே இருக்கும்...

அங்கேதான் சிங்கி சரசுவும் தன் கால்நடைகளை மேய்ச்சல்ப் புல்தரையில் மேயவிட்டபடி நாட்டுப்புறப் பாடல்களைப் பாடியபடி இருப்பாள். ஓடையைக் கடந்துதான் அணிக்கடவு, இராமச்சந்திராபுரம், நஞ்சேகவுண்டன் புதூர் முதலான ஊர்களுக்குச் சென்றாக வேண்டும்.

ஓடையைக் கடந்து செல்வோரெல்லாம், ஓடையின் வரவியைத் தழுவி வரும் தென்றலைத் தரிசிக்கிறார்களோ இல்லையோ, சிங்கி சரசுவின் மீது கடைக்கண் பார்வையை வீசாமற் செல்வது இல்லை. பார்வை கிட்டாத கண்கள், உள்ளீடு இல்லாத கோவைப்பழம் கண்ட அணில்கள் போலச் செல்வதும் வழமை.

இப்படியாக வீதம்பட்டி வேலூர் சார்ந்த எட்டுப்பட்டிக் கண்களுக்கும் பரிச்யமான சிங்கிக்கும் ஒரு சிங்கன் உண்டு. சிங்கனுக்குச் செங்காட்டுத் தோப்பில்தான் ஊழியம். சிங்கிக்குச் சொல்லிப் படைத்தவன் போலவே இருப்பான் சிங்கனும்; பரந்த மார்பு, தினவெடுத்த தோள்கள், வைர உலக்கைகளாய்க் கைகள், வலது கையின் மணிக்கட்டின் மேற்புறமாக இறுகக் கட்டிய கருப்பராயன் கயிறு....

எப்போதும் போலவே, அந்தி சாயும் நேரத்தில், செண்பக ஓடையின் ரெட்டைப் புளியமரம் தாண்டிய மறைவுப் பகுதிக்கு வருகிறான். மோகனத்தகிப்பில் இருக்கும் அவன் கண்கள் நாலாபுறமும் ஊடுருவித் தோற்கிறது.... தோற்ற குறிப்பறிந்து, பிரேம வெக்கையில் வெளிப்படுகிறது பாடல்.....


சிங்கியைக் காணேனே! என் வங்கணச் சிங்கியைக் காணேனே!
சிங்கியைக் காமப்பசுங்கினிப் பேடைடைச்
சீர்வளர் குற்றாளர் பேர்வளம் பாடிய
சங்கீத வாரியை இங்கித நாரியைச்
சல்லாபக்காரியை உல்லாச மோகனச்
சிங்கியைக் காணேனே! என் வங்கணச் சிங்கியைக் காணேனே!

ஆரத்தனத்தைப் படங்கொண்டு மூடி
அசைத்து நின்றாளதை யானைக் கொம்பென்றுநான்
கோரத்தை வைத்தவிழிக் கதிர் சென்றேனென்
கொஞ்சத் தனத்ததை அறிந்து சுகக்காரி
பாரத் தனத்தைத் திறந்து விட்டாள் கண்டு
பாவியேன் ஆவி மறந்து விட்டேனுடன்
தீரக்கனிய மயக்கி முயக்கியே
சிங்கார மோகனம் சிங்கி கொண்டாளந்தச்
சிங்கியைக் காணேனே! என் வங்கணச் சிங்கியைக் காணேனே!

பூவென்ற பாதம் வருடி வருடிப்
புளக முலையை நெருடி நெருடி
ஏவென்ற கண்ணுக்கோர் அஞ்சனம் தீட்டி
எடுத்த சுருளும் இதழால் இடுக்குவள
வாவென்று கைச்சுருள் தாவென்று வாங்காள்
மனக்குறி கண்டு நகக்குறி வைத்தபின்
ஆவென்று ஒருக்கால் இருப்பன் உதைப்பன்
அதுக்குக் கிடந்து கொதிக்குதென் பேய்மனம்
சிங்கியைக் காணேனே! என் வங்கணச் சிங்கியைக் காணேனே!

தாராடும் குன்றி வடத்தை ஒதுக்கித்
தடமார் பிறுகத் தழுவ வந்தாள் அவள்
வாராடும் கொங்கைக்குச் சந்தனம் பூசாள்
மறுத்து நான் பூசினும் பூசலாகாது என்பாள்
சீராடிக் கூடி விளையாடி இப்படித்
தீரா மயல்தந்த தீராமைக்காரியைக்
காராடும் கண்டர்தென் ஆரிய நாட்டுறை
காரியப் பூவையை ஆரியப் பாவையை
சிங்கியைக் காணேனே! என் வங்கணச் சிங்கியைக் காணேனே!


மூலம்: குற்றாலக் குறவஞ்சி

6/18/2010

பிறகென்ன?

விடியவிடிய கிளிப்பிள்ளைக்கான பாடம்
தனிக்குடித்தனக் கனவு மிதப்பில்
விடிந்ததும் மூழ்கிய படகு
தன்தாயின் மடியில் கணவன்!

*****

வாழ்க்கைச் சுவரில் தீட்டிய
நியதியின் சித்திரத்தில்
முகமாய் மிளிர்கிறது நம்பிக்கை!

*****


மணல் வடிவங்களை மாற்றியபடியே
இருக்கிறது பாலைக் காற்று;

அதற்குக் கொள்ளை ஆசை
எல்லா வடிவங்களின் மேலும்!

*****

வீசியடித்த காற்றைப் புணர்ந்து
பின் அதில் கரைகிறது முகில்
அர்ப்பணிப்பின் குழந்தை மழை!

*****

இது எதிர் மாதிரி... கதிர் இங்கே!

6/17/2010

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை, தமிழ்த் திருவிழா - ஒரு கண்ணோட்டம்!

உறவெல்லாம் ஓடியோடி
உழைக்க உழைக்க
உன்னதமாய்ப் பெருகி வருகுது
உற்சாகம்! உற்சாகம்!!

முன்னோடிகளெல்லாம்
மூச்சுவிட நேரமில்லாது
முடுக்கிவிட்டு முடுக்கிவிட்டு
ஆடுறார்! முத்தாடுறார்!!

இனிக்க இனிக்க
இலக்கியம் பெருகுது
கன்னலென கவிகள்
கனியுது! கனியுது!!

வேர்கள் தமிழிலென
சொல்லிச் சொல்லி
தன்னார்வத் தொண்டர்படை
உழைக்குது! உழைக்குது!!

வலைப்பதிவர் பெருமை
வந்தோரெல்லாம் கண்டுகொள்ள
சின்னப்பையன் சத்யா
வேலை செய்யுறார்! செய்யுறார்!!

வியப்பூட்டும் விழாக்கோலம்
வருகுது! வருகுது!!
வட அமெரிக்கத் தமிழரெலாம், அல்ல
உலகத் தமிழரெலாம்
வாருங்கோ! வாருங்கோ!!

மக்களே, வணக்கம்! சென்ற ஆண்டு, வெகு விமரிசையாக அட்லாண்டாவில் திருவிழா நடந்தேறியது தெரிந்ததே! அங்கே அரங்கம் நிரம்பி, இறுதி நாட்களில் வர விழைந்தோருக்கு இடம் கிடைக்காமற் போனமை பெரும் ஏமாற்றத்துக்கு உள்ளாக்கியது. நானே கூட, இறுதி நேரத்தில் வராமற் போன ஒருவரின் நுழைவுச் சீட்டைப் பயன்படுத்தித்தான் கலந்து கொண்டேன்.

இதையெல்லாம் மனதிற் கொண்டு, பேரவையினர் அதைவிடப் பெரியதொரு அரங்கில் இவ்வருடத் திருவிழாவை நடத்தத் திட்டமிட்டு, வேலைகள் வெகு விமரிசையாகவும் விறுவிறுப்பாகவும் நடந்து வருவதைக் காண முடிகிறது. தினமும் பல பல்வழி அழைப்புகள், செம்மையான ஒருங்கிணைப்பு என ஏராளமான தன்னார்வத் தொண்டர்கள் அல்லும் எல்லும் தொடர்ந்து உழைத்து வருகிறார்கள்.

தமிழர்களை ஒன்று கூட்டி, அவர்களுக்குள் ஒரு இணைப்பைக் கொண்டு வருவதற்கு அவர்கள் ஆற்றும் பணி மகத்தானது என்றே சொல்ல வேண்டும். நிற்க! தற்போது நிகழ்ந்து வரும் விழா வருகைக்கான பதிவு, எதிர்பாராததைவிட வெகு வீரியத்துடன் ஏற்றப் பாதையில் முன்னேறிக் கொண்டு இருக்கிறது என அறிய முடிகிறது.

எனவே, அன்பர்கள் அனைவரும் இன்றே பதிவு செய்து உங்களுக்கான இடத்தை உறுதி செய்து கொள்ளுங்கள். கூடவே, உங்கள் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்களுக்கும் விபரத்தைத் தெரியப்படுத்துவீராக!!

வேர்கள் தமிழில்!
விழுதுகள் உலகெங்கும்!!

6/15/2010

குடுகுடுப்பை இளஞ்சோழர் வாழிய வாழியவே!!

அமெரிக்காவில் பிறந்தாலென்ன?
அயனாவரத்தில் பிறந்தாலென்ன??
குடுகுடுப்பைச் சோழனுக்கு
வாய்த்த மைந்தன் நீர்
தமிழுக்கு உயிர்த்த
இளஞ்சோழனே!

அவனியாள வந்தாய் நீர்
இளஞ்சோழா
பாரெங்கும் தமிழ் தழைத்தோங்க
நீர் வாழ்க! நின் கொற்றம் வாழ்க!!

பொதிகை நின்னைத் தவழ்ந்துவர
நின்பெற்றோர் பெருமை உய்த்திட
அவர்தம்பெயர் சொல்லிவருவாய் நீயே
உம்பிறப்பால் தமிழ் எழுச்சிகொள்ளும்!
தென்பாங்குத் தமிழே நீர் வாழ்க!
செழிப்பும் செம்மையும் நினதாக!!

6/14/2010

FeTNA: கனெக்டிக்கெட் அரண்மனையில் கூடிடுவீர்!

தமிழர்களே, தமிழர்களே,
கனெக்டிக்கெட்
அரண்மனையில் கூடிடுவீர்!
ஆண்டுவிழாவது கண்டிடுவீர்!!
வண்ணவரிக் கோலங்கள் பளிச்சிடவே
இருபுறத்து வாழைகளும் வரவேற்றிட
மேளதாளமது இசைத்திடவே
திருவிளக்கை ஏற்றிடவே
தமிழர்களே, தமிழர்களே,
அரண்மனையில் கூடிடுவீர்!
ஆண்டுவிழாவது கண்டிடுவீர்!

ஆன்மிகம் போற்றிட
தவத்திரு பேரூர் அடிகளார் ஆசியுரை!
நாட்டுப்புறம் நாமறிய
மதுரைவீரன் தெருக்கூத்து!
இலக்கியம் இனிக்க இனிக்க
நாஞ்சில் பீற்றர் அய்யாவின் பல்லூடகக்களிப்பு!
தமிழர்களே, தமிழர்களே,
அரண்மனையில் கூடிடுவீர்!
ஆண்டுவிழாவது கண்டிடுவீர்!

ஈழத்துப் பெருமை சொல்லி
உள்ளது உள்ளபடி உரையாற்ற
முனைவர் அடேல் பார்கர்
மனித உரிமைகள் இன்னது இன்னதுதானென
எடுத்துரைத்து உண்மை விளம்ப
முனைவர் ஃபிரான்சிஸ் பாய்ல்
நீரடித்துநீர் விலகாது
மனிதம்போற்ற மனிதர்விலகாரென
தமிழுக்கு மருத்துவச்சி
தமிழனுக்கு மருத்துவச்சி
டாக்டர் அலென் ஷாண்டர்
தமிழர்களே, தமிழர்களே,
அரண்மனையில் கூடிடுவீர்!
ஆண்டுவிழாவது கண்டிடுவீர்!

மாமன்றம் சிந்திக்கப் பட்டிமன்றம்
தமிழாளும் பர்வீன் சுல்தானா
வேர்கள் தமிழில் விழுதுகள் உலகெங்கும்
கவியரங்கம் தமிழ் அதிமதுரம்
தமிழ்சொல்லாட்சி வீரமங்கை கவிஞர் தாமரை
தமிழர்களே, தமிழர்களே,
அரண்மனையில் கூடிடுவீர்!
ஆண்டுவிழாவது கண்டிடுவீர்!

இளஞ்சிட்டுகள் தமிழ்த் தேனீயாய்
இனிக்க இனிக்க இன்னிசைக்கோ
சாகசக்குயில் சாதனாசர்க்கம்
நிகழ்ச்சிகளைத் தொகுத்தளிக்க
தமிழ்க் கலைத்தாயின் புதல்விகள்!
தமிழர்களே, தமிழர்களே,
அரண்மனையில் கூடிடுவீர்!
ஆண்டுவிழாவது கண்டிடுவீர்!

நகைச்சுவைக்கோ சந்தானம்
நவரசத்திற்கோ விக்ரம்
தேமதுரக் குரலுக்கு கார்த்திக்
இசையைக் கூட்டி ஆர்ப்பரிக்க
ஹாரிஸ் ஜெயராஜ்
தமிழர்களே, தமிழர்களே,
அரண்மனையில் கூடிடுவீர்!
ஆண்டுவிழாவது கண்டிடுவீர்!

அவனியெங்கும் கண்கள் முளைக்க
அவையெல்லாம் விழாவை நோக்க
செந்தமிழால் சேர்ந்திணைவோம்
செயல்பட்டே இனம் காப்போம்
தமிழர்களே, தமிழர்களே,
கனெக்டிக்கெட் அரண்மனையில் கூடிடுவீர்!
ஆண்டுவிழாவது கண்டிடுவீர்!

ஜூலை 2-5, வாட்டர்பெரி, கனெக்டிகெட்

6/12/2010

பள்ளயம் - 06/12/2010

வணக்கம்! பள்ள(ளை)யம் தொடரில், மீண்டும் உங்களை எல்லாம் சந்திப்பதில் பெருமகிழ்வு கொள்கிறேன். பள்ளயம் என்பதின் பொருள் அறிய விழைவோர், எமது இந்த முந்தைய இடுகையினைப் பார்த்துத் தெரிந்து கொள்ளவும்.

========================================

காணுதல், பார்த்தல், நோக்குதல் முதலான சொற்களை நாம எந்த சூழ்நிலையில புழங்குறோம்? கண்களால எதோ ஒன்னைப் பார்க்கும் போது பரும்படியாப் பாவிக்கிறது நம்ம வழக்கம். அந்த மூன்று சொற்கள்லயும் இருக்குற நுண்ணியத்தைப் பெரும்பாலானவர்கள் தெரிஞ்சி வெச்சிருக்கிறதும் இல்லை. சரி, அப்படி அதுல என்ன நுண்ணியம் இருக்கு?

மலையைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது, உலாவிய மானைக் கண்டேன். திரையை நோக்கியதும், திகில்க் காட்சியைக் கண்டேன். அவளை நோக்கியதில், பின்னணியில் இருந்த எழிலார்ந்த வெளியைப் பார்க்க முடியவில்லை.

மேம்போக்கா, மொத்தமா ஒன்னை விழிகளால தரிசிக்கிறது பார்த்தல்; வானத்தைப் பார்த்தேன். நகரும் காட்சி அல்லது குறிப்பிட்ட ஒன்றை மட்டும் பிரதானமாகக் கண்களால் தரிசிப்பது காணுதல் அல்லது கண்டு கொள்தல். முன் தீர்மானத்தோடு, நோக்கத்தோடு, கண்களால் தரிசிப்பது நோக்குவது.

இப்படி நுண்ணியங்களைப் புரிஞ்சி, அதற்கான சொற்களைப் புழங்கினா, மொழியின் வளம் கூடும். தமிழ்நாட்டுல என்ன சொல்றோம்? அவளைப் பார்த்து பேசிட்டு வந்தேன். அதுவே ஈழத்தமிழ்ல?? அவளைக் கண்டு, இருந்து, நாலு கதை கதைச்சிட்டு வந்த நான்!


========================================

தமிழ் ஒரு செம்மொழி! கூடவே நுண்ணிய மொழின்னும் சொல்றோம். ஆங்கிலத்துல சொல்லணுமுன்னா, it is sensitive language too! அப்படின்னா? அதாவது, சொல்ல வந்ததை, எந்த விதமான மாற்றுப் பொருள் கொள்தலும் இல்லாம, குழப்பம், திரிபுமில்லாமச் சொல்றது. Communicating without any ambiguity....

ஆனாலும் பாருங்க, சிலேடை, பல பொருள்ச் சொற்கள்னும் நிறைய தமிழ்ல இருக்கு. ஆக, மேல சொன்ன கூற்றுக்கு இது முரண்பாடா இருக்கு. கூடவே, மொழியின் விழுமியத்தில் ஒரு நடைமுறையும் இருக்கு. அது என்ன??

உலகளாவிய ஒப்பந்தங்கள் போடும் போது, அந்த ஒரு குறிப்பிட்ட மொழியிலதான் ஒப்பந்தத்தை வரையறுப்பாங்களாம்! காரணம் என்ன?? ஒன்னைச் சொன்னா, சொன்னதுதான்! அதை வேற பொருள்கொண்டு புரிதலுக்கான இடமே இல்லையாம். It is very sensitive with no ambiguity. அப்படிப்பட்ட மொழியா? அது எது?? ஃபிரெஞ்ச்!!!


========================================

Blackmail! தமிங்கிலத்துல ப்ளேக்மெயில்னும் சொல்றோம். அதென்ன இந்த ப்ளேக்மெயில்?? ஒருவரைப் பற்றிய மறைபொருள் ஒன்றைத் தெரிந்து வைத்துக் கொண்டு, அதை வெளியிட்டு, விழுமியக்கொலை(character assasination) நிகழ்த்தி விடுவேன் என அச்சுறுத்துவது. அல்லது, செய்த குற்றமிகு செயலை வெளியிட்டுச் சட்டத்தின் முன்னால் நிறுத்தி விடுவேன் என மிரட்டுவது.

சரி, அப்படியான் ஆங்கிலத்துல இருந்து தமிழுக்கு கருப்பு அஞ்சல்னு மொழியாக்கம் செய்யலாமா? அபத்தமாத் தெரியுதே? மொழியாக்கம் செய்யும் போது, எதையும் சொல்லுக்கு சொல்னு செய்தா, அது அபத்தமாத்தான் முடியும். ஆகவே, இடம், பொருள், ஏவல் மற்றும் மரபு தெரிஞ்சி மொழியாக்கணும் செய்யணும்.

சரி, இந்த சொல்லுக்கான இடம், பொருள், ஏவல் பத்தி நாம பேசவேண்டிய அவசியம் இல்லை. ஏன்னா, இது வெகுவாப் புழக்கத்துல இருக்கிற சொல்தான்! மரபு??

Blackmailங்ற இச்சொல், இசுகாட்லாந்து நாட்டுக்கு உரிய சொல். mail அப்படின்னா, அவங்க மொழியில, வரி, கையூட்டு அல்லது குறியாப்பு என்று பொருள். ஒன்றைப் பெறுவதற்கான மாற்றுப் பொருள். ஆகவே, நாம இதை எதோ அஞ்சல்னு நினைக்கப்படாது பாருங்க.

இப்படியாக, இசுகாட்லாந்து நாட்டுல, தொழில் நிமித்தமாகவும், அன்றாடப் பிழைப்பு நிமித்தமாகவும் அமைதி வேண்டி, அங்கிருந்த அடாவடிப்பேர்வழிகள் கையூட்டு, அதாவது அச்சுறுத்திப் பணம் பறிச்சாங்க.

அப்படிப் பணம் பறிக்கும் போது, தம்வசம் இருந்த கால்நடைகளைக் கொடுத்தாங்க. அவைகள் பொதுவா கறுப்பு வண்ணத்துல இருந்ததால, கறுப்புக் கையூட்டுன்னு சொல்றது வாடிக்கை ஆச்சு, அதான் இந்த Blackmail! அதுவே, தன்வசம் இருந்த வெள்ளியைக் கையூட்டாத் தரும்போது வெண்மைக் கையூட்டு, அதாவது whitemailனும் சொல்ல ஆரம்பிச்சாங்க.

ஆகவே, இச்சொல்லை மொழியாக்கம் செய்யும் போது இப்படியான மரபுகளையும் தெரிஞ்சி வெச்சி, மொழியாக்கம் செய்யுறது மிக அவசியம். அதெல்லாஞ்செரி, இதுக்கு இணையான தமிழ்ச் சொல்? அவன், அவளோட நிர்வாணப்படத்தை வெச்சே, அவளை சூட்சுமகந்தம் செய்யுறான். திருடினதை வெளில சொல்லிடுவேன்னு சொல்லிச் சொல்லியே சூட்சுமகந்தம் செய்ததுல, அவன் பைத்தியமாவே ஆயிட்டான்.


========================================

லாபியிங்(lobbying): இந்தத் தமிங்கிலச் சொல் என்னா சொல்லுது? அவன் செஞ்ச லாபியில, இவனோட நியாயமெல்லாம் செத்துப் போச்சு. இப்படிப் பேசிப் புழங்குறதைக் கேட்டும், படிச்சும் இருப்பீங்க.

மேலை நாடுகள்ல, சட்ட முன் வரைவுகள் ஓட்டெடுப்புல வெல்றதுக்கான, தனக்கு ஏதுவான சரிக்கட்டுதல் வேலைகளை எங்க செய்வாங்க? ஓட்டெடுப்புத் துவங்குறதுக்கு முன்னாடி, அரங்க முன்றல், முற்றத்துல சக உறுப்பினர்கள்கிட்டச் செய்வாங்க. இந்த இடத்துல(lobby) செய்யுற காரியமே, பெயராகு பெயரா மாறவும் செய்தது.

அதாவது, சரிக்கட்டுதல்ங்ற வினையாகு பெயர்தான், முற்றப்படுத்துதல்ங்ற பெயராகுபெயர்ல புழக்கத்துக்கு வந்திடுச்சு. தமிழ்ல, வினையாகு பெயர்லயே, அதாவது, சரிக்கட்டுதல்ன்னே புழங்கலாம்; கையாள்றதுக்கு வாட்டமாவும் இருக்குதல்ல?!


========================================

அடம்பன் கொடியும், திரண்டால் மிடுக்கு!

6/10/2010

FeTNA: கலைத்துறையினர் அழைக்கிறார்கள்!


வேர்கள் தமிழில்!
விழுதுகள் உலகெங்கும்!!


6/09/2010

FeTNA: நடிகர் விக்ரம் அழைக்கிறார்





வேர்கள் தமிழில்!
விழுதுகள் உலகெங்கும்!!

6/08/2010

தமிழ் விழாவில், வட அமெரிக்கப் பதிவர் சந்திப்பு

மக்களே, வணக்கம்! ஜூலை 3, 4, 5ல் கனெக்டிக்கெட்டில் நடைபெறும் தமிழ்விழா 2010க்கு பெருந்திரளான பதிவர் பெருமக்கள் வரவிருக்கிறார்கள். அனைவரும் முன்கூட்டியே இவ்விடுகையின் கீழ் தெரியப்படுத்தினீர்கள் என்றால், பதிவர் சந்திப்பை ஏற்பாடு செய்ய வசதியாக இருக்கும். பதிவர் சந்திப்பின் ஒருங்கிணைப்பாளராக நண்பர் இளா மற்றும் தளபதி நசரேயன் அவர்களைச் செயல்படுமாறு வேண்டிக் கொள்கிறேன்.

சிறப்பு விருந்தினர்கள்: அண்ணன் அப்துல்லா மற்றும் தம்பி பெருசு





செந்தமிழால் சேர்ந்திணைவோம்!
செயல்பட்டே இனம் காப்போம்!!

6/06/2010

தமிழ்த் தொண்டன் விஜய் மணிவேல்

செறிவெனப்படுவது கூறியது மறாஅமை; பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்!! இவ்வண்ணமே, பண்புக்கும் அன்புக்கும் செறிவுக்கும் பொலிவூட்டி, அமெரிக்கத் தமிழர்களுக்கும் தமிழுக்கும் பிறர் அறியா வண்ணம் தன் கடமை அறிந்து பெருந்தொண்டாற்றி வரும் இளைஞர்தான், செயல்வீரர் விஜய் மணிவேல் அவர்கள்.

எத்தகைய விளம்பரத்திற்கும் ஆசைப்படாதவர்; தெளிந்த சிந்தனைக்கு உரியவர்; உள்ளூர்த் தமிழ்ச் சங்கங்களுக்கும் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவைக்கும் தொடர்ந்து தன்னாலான தொண்டினைச் செய்து வருபவர்! மேலும், வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் இணைய தளத்தைக் கட்டமைத்துப் பராமரித்து வருபவருங்கூட!!

அடுத்த மாதம் நிகழவிருக்கும் தமிழ் விழாப் பணிகளில் மூழ்கியிருந்த அவர், நமது வேண்டுகோளுக்கு இணங்க நேரம் ஒதுக்கி, நமது கேள்விகளுக்குப் பொறுமையாக பதிலளித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

வணக்கம் விஜய். நீங்கள் எத்தனை ஆண்டுகளாக அமெரிக்காவில் இருக்கிறீர்கள்?

வணக்கம் பழமைபேசி. நான் இங்கு வந்து பத்து ஆண்டுகளாகிறது. காலம் கழிந்ததே தெரியவில்லை. பத்து ஆண்டுகள் ஆகிவிட்டது என்பதை என்னால் நம்பவே முடியவில்லை.

உங்களை கடந்த ஓர் ஆண்டாக, அருகில் இருந்து அவதானித்து வருகிறேன். தமிழர்களுக்காக உழைக்க வேண்டும் என்கிற நாட்டம் எப்படி வந்தது?? தாயகத்தில் இருக்கும் போதே தமிழுணர்வு கொண்டவராகவும் முனைப்பாகவும் இருந்தீர்களா??

உண்மையில் சொல்லப் போனால், ஊரில் இருந்தவரைக்கும் எனக்கு எந்த உணர்வும் இருந்ததில்லை. என்னை ஒத்த வயதுள்ள இளைஞர்களுடன் சேர்ந்து கொண்டு, பொழுதைக் கழிப்பதுதான் நான் செய்யும் வேலையாக இருந்தது. இங்கு வந்த பிறகுதான், சிறிது சிறிதாக என்னுள் தாயகத்தின் மீதும், தமிழர்களின்பாலும், தமிழ் மொழியின்பாலும் ஒரு பற்றுதல் ஏற்பட்டது.

உங்களுக்கு ஒன்று தெரியுமா? நான் மதுரையைச் சார்ந்தவனாக இருந்தாலும், மீனாட்சி அம்மன் கோவிலுக்கு நான்கு அல்லது ஐந்து முறைதான் சென்றிருக்கிறேன்; நான் இங்கே வந்த பிறகு சென்று வந்தையும் சேர்த்து! ஊரில் இருக்கும் வரைக்கும் அதன் அருமை, பெருமையை உணரமுடியவில்லை. ஆனால், இங்கே வந்தபிறகு கோவிலின் பெருமைகளை உணர்ந்து அடிக்கடி செல்ல வேண்டும் என்கிற ஆவல் மேலிடுகிறது. அதேபோல்தான், தாய்மொழியின் மீதான பற்றுதலும் மேலோங்கிய வண்ணம் இருக்கிறேன்.

நீங்கள் சொல்வதைப் புரிந்து கொள்ள முடிகிறது. உணர்வு கொண்டவராக இருந்தாலும், எதோ ஒரு உந்துசக்தி இருந்திருக்கும். குறிப்பாக, தமிழ்ச் சங்கங்கள் மற்றும் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவைக்கு அயராது உழைத்துக் கொண்டு இருக்கிறதைக் காண முடிகிறது. அப்பணிகளுக்குள் எப்படிக் காலடி எடுத்து வைத்தீர்கள்?

இந்த இடத்தில் மிசெளரியில் இருக்கும் கெழுதகை நண்பர் பொற்செழியன் அவர்களைக் குறிப்பிட விரும்புகிறேன்.அவரோடு இருந்த, முனைவர் திரு. ஆறுமுகம் மற்றும் திரு. வாசு அவர்களும் இதற்குக் காரணமாக இருந்தார்கள். பொற்செழியன் அவர்களோடு இணைந்த காலத்தில், மிசெளரி தமிழ்ச் சங்கத்திற்கு இணையதளம் மற்றும் இதர கட்டமைப்பு வேலைகள் செய்ய வேண்டி இருந்தது. அதன்பொருட்டு, அவருடன் இணைந்து மேற்கொண்ட பணிகளே முதற்படி.

எப்படி வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவைக்கான பணிகளுக்குள் நுழைந்தீர்கள்?

நான் மிசெளரி தமிழ்ச் சங்கத்திற்கு செய்யும் பங்களிப்பைக் கேள்வியுற்ற அன்றைய பேரவைத் தலைவர் தில்லை குமரன் அவர்கள் என்னைத் தொடர்பு கொண்டு கேட்டுக் கொள்ளவே, இரவி சுந்தரம் அவர்களுடன் என்னை இணைத்துக் கொண்டேன்.


இரவி சுந்தரம் அவர்கள், பேரவையின் இணையதளம் மற்றும் தகவல்க் கட்டுமானப் பணிகளை கவனித்து வந்தார். அவரோடு சேர்ந்து நானும் செய்ய வேண்டிய பணிகளைப் பங்கிட்டுக் கொண்டேன். ஆனாலும், என் பங்களிப்பானது இன்றைய அளவுக்கு அப்போது இருந்திருக்கவில்லை.

அப்படியானால், எப்போது முழுமூச்சாக உழைக்கத் துவங்கினீர்கள்?

2007ஆம் ஆண்டு ஃப்ளோரிடா மாகாணத்தில் நடைபெற்ற, வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் ஆண்டு விழாவில் கலந்து கொண்டிருந்தேன். அவ்விழாவிற்குப் பிறகு முனைவர் திரு.முத்துவேல் செல்லையா அவர்கள் தலைவரானார். ஒரு நாள் அவருடன் அளவளாவிக் கொண்டிருக்கையில், எனது மனதிற்பட்டதைக் கூறியதும் அவர் என் மேல் நம்பிக்கை கொண்டவரானார். இது என் வாழ்வில் நடந்த ஒரு பெரிய நிகழ்வு என்றே குறிப்பிட வேண்டும். நல்லதொரு வாய்ப்பினை எனக்களித்தமைக்கு அவருக்கு என்றென்றும் நன்றி உடையவனாகிறேன்.

மேலும், அன்றிலிருந்து இன்று வரைக்கும் நான் கடந்த வந்த பாதையை எண்ணும் போது, எனக்குப் பெருமையாக இருக்கிறது. பேரவையின் இணைய தளத்தை, பேரவையின் முன்னோடிகளின் உதவியால்தான் வெகுவாக மேன்மைப்படுத்த முடிந்தது.

அட்லாண்டாவில் நடந்த தமிழ் விழா குறித்த அனைத்துப் பணிகளையும், தக்க மென்பொருள் கொண்டு தன்னியக்கமாக மாற்றியமை, கட்டமைப்புக்கு வெகுவாக வலு சேர்த்தது. இனி அந்த கட்டமைப்பானது, என்றென்றும் பேரவைக்கு உதவியாக இருக்கும். நண்பர் செளந்திர பாண்டியன் அவர்களது பங்கும் இதில் அளப்பரியது ஆகும்.

இன்னும் பேரவையின் வலைதளத்தை மேன்மைப்படுத்த வேண்டியது உள்ளது. அதற்காகச் செய்ய வேண்டிய பணிகளைப் பட்டியலிட்டுக் கொண்டே இருக்கிறேன்.

சென்ற ஆண்டு விழாவில் கலந்து கொண்டவன் என்கிற முறையில், நீங்கள் கூறியதை எல்லாம் நானே பார்த்து இருக்கிறேன். நீங்கள் வெகுவாகச் செய்த மாற்றங்களுக்கான வரவேற்பு எத்தகையதாக இருந்தது?

நல்ல வரவேற்பு இருந்தது. பேரவையின் அத்தனை விபரங்களையும், வெளிப்படையாகப் பார்வைக்கு வைக்கப்பட்டு இருக்கிறது. எவரும், எப்போது வேண்டுமானாலும் தரவாக்கிக் கொள்ளும் வகையில் அத்தனை விபரங்களும் வழங்கியில் முறையாக்ச் சேமிக்கப்பட்டு உள்ளது. இவையெல்லாம் பேரவையின் கட்டமைப்புக்கு வலுச்சேர்த்தன என்றால் மிகையாகாது. உகந்த நேரத்தில், தக்க ஆலோசனை நல்கி வழிநடத்திய பேரவைத் தலைவர் மற்றும் முன்னோடிகளை நினைவு கொள்வதில் பெருமை அடைகிறேன்.

நண்பர் என்ற முறையில், உங்கள் வாழ்க்கையைக் குறித்தான கேள்வி. நீங்கள் செய்து வருகிற சமூகப் பணிகள், உங்கள் குடும்ப வாழ்க்கையைப் பாதிக்கவில்லையா? அதை எப்படி எதிர்கொள்கிறீர்கள்??

நல்ல கேள்வி. நிச்சய்மாக எனது மனைவியின் ஒத்துழைப்பு இதில் அடங்கி இருக்கிறது. எங்களுக்குள் இருக்கும் புரிந்துணர்வினால்தான் இது சாத்தியமாகிறது.


இப்போதெல்லாம், அன்றாடம் அதிகாலை ஒரு மணி வரைக்கும் விழித்திருந்து வேலை செய்ய வேண்டி இருக்கிறது. வீட்டாருக்கும் இது தெரிந்தே இருக்கிறது. என்னுடன் இருக்கும் மனைவி, மகள் மட்டுமல்லாது ஊரில் இருக்கும் என் உற்றார் உறவினரும் இதை எண்ணி மகிழ்ந்து, பெருமை கொள்ளவே செய்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால், அமெரிக்கா போயும் என் மகன் தமிழுக்குத் தொண்டாற்றுகிறான் என அவர்கள் மற்றவரிடத்தே சொல்லிச் சொல்லிப் பெருமை கொள்வதைக் காண முடிகிறது.

விஜய், உங்கள் உழைப்பை எண்ணி நானும் பெருமை கொள்கிறேன். உங்கள் மனைவிக்கும் தமிழின்பால் பற்றுதல் இருப்பதாகக் குறிப்பிட்டீர்கள். அது எப்படி??

எனக்கு திருமணம் நடைபெறுவதற்கு முன்பே, தமிழ்ச்சங்கப் பணிகளில் முனைப்பாக ஈடுபடுத்திக் கொண்டு இருந்தேன். திருமணம் நடைபெற்ற பின், அமெரிக்கா வந்த என் மனைவி இங்குள்ள தமிழ்ச் சங்கத்தினரோடு நட்புறவோடு பழக ஆரம்பித்துக் கொண்டமையால், இயல்பாகவே அவருக்கும் தமிழின்பால் பற்றுதல் ஏற்பட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

உள்ளூர்த் தமிழ்ச் சங்க விழாக்கள் என்று சொன்ன மாத்திரத்திலேயே, வீட்டில் உற்சாகம் கரைபுரண்டு ஓடும். விழாவிற்குச் சென்று நண்பர்களோடு இருந்து பொழுதைக் கழிப்பது, பண்பாடு பேணுவது, நிகழ்ச்சிகள் நடத்துவது போன்றவற்றில் இருக்கும் குதூகலத்தை எண்ணுகையில் மகிழ்ச்சி பொங்கும். உறவுகளைக் காண்பதில் என் மனைவிக்கு எப்போதுமே மகிழ்ச்சிதான்!

உங்கள் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடிகிறது. இந்த ஆண்டிற்கான தமிழ்விழா குறித்த ஏற்பாடுகள், பேரவையின் வளர்ச்சி இது பற்றிக் கூறமுடியுமா??

மிகவும் எழுச்சியாக இருக்கிறது. நிறைய புதுமுகங்களை, இளைஞர்களைக் காண முடிகிறது. அடுத்த தலைமுறையினர் வெகுவாக உள்ளே வர ஆரம்பித்து இருக்கிறார்கள். தமிழ் மொழியின்பால் என்றுமில்லாத பற்றுதல் மேலெழுந்த வண்ணமாக உள்ளனர் என்பது வெள்ளிடைமலை.


நாடெங்கும் தமிழ்ப்பள்ளிகளின் எண்ணிக்கையும், மாணவர்களின் எண்ணிக்கையும் கூடிக் கொண்டே போகிறது. இதையெல்லாம் அவதானிக்கும்போது பேருவகை அடைகிறேன்.

விஜய், இது ஒரு சிக்கலான கேள்வி. பொதுவாக, ஊதியத்தை எதிர்நோக்கி ஒன்றைச் செய்வார்கள். அல்லது, புகழ், விளம்பரத்திற்க்காக உழைப்பார்கள். உங்களைப் பொறுத்த வரையில் இதில் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. அப்படி இருக்கையில், என்றேனும் அயர்ச்சியாக, சலிப்பாக உணர்ந்தது உண்டா??

கிடையவே கிடையாது. கடந்த ஐந்து ஆண்டுகளைப் பின்னோக்கிப் பார்க்கையில், உற்சாகம், ஊக்கம் என்பது படிப்படியாகக் கூடிக் கொண்டேதான் வருகிறது. முனைப்பின் வீரியம் என்னுள் கிளர்ந்துவிட்டுப் பீறிடுகிறது என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. உள்ளூர்த் தமிழ்ச் சங்கமும், வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையும் என் குழந்தைகள். குழந்தைகளுக்காக உழைப்பதை எந்த ஒரு தமிழனும் அயர்ச்சியாக நினைப்பதில்லை.

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையைப் பற்றி மற்றவர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

பேரவையானது தமிழுக்கும், தமிழருக்குமான ஒரு கட்டமைப்பு. அதைப் போற்றுவது நம் கடமை. ஒவ்வொருவரும் அதை உணர்ந்து, எந்த ஒரு தயக்கமும் இன்றி நாட வேண்டும். ’கண்ணால் காண்பதுவும் பொய்; காதால் கேட்பதுவும் பொய்; தீர விசாரிப்பதே மெய்!’ என்பதை வலியுறுத்துகிறேன். தமிழ் உறவுகளுக்கான இடம் இது. புலம் பெயர்ந்த மண்ணில், நமது பண்பாடு பேணவும், மொழியை வளர்த்தெடுப்பதிலும் பேரவையின் பங்கு மகத்தானது.

விஜய், தங்களுடன் உரையாடியதில் மனநிறைவும், மகிழ்ச்சியும் கொள்கிறேன். மிக்க நன்றி! உங்களுக்கு என்னிடத்தில் ஏதேனும் கேட்க வேண்டி இருக்கிறதா??

ஆண்டு முழுமைக்கும் என்னுடன் தொடர்பில் இருந்து கொண்டு உதவி வரும் உங்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்களும் முனைப்பாக பல்வேறு பணிகளை எடுத்துச் செய்து வருகிறீர்கள். அவை யாவும் சிறப்புற அமைய என் வாழ்த்துகள்!

---பழமைபேசி

செந்தமிழால் சேர்ந்திணைவோம்!
செயல்பட்டே இனம் காப்போம்!!

6/04/2010

அமெரிக்கத் தமிழ் உறவுகளே!


Alert - Hotel Booking

Holiday Inn Express - all allotted rooms full.

Holiday Inn - all rooms at $50/night all taken. only limited rooms available at $79/night FeTNA discount rates.

Comfort Suites - very few rooms available at $50/nit FeTNA discount rates.

Hampton Inn - very few rooms available at $70/night FeTNA discount rates.

Looking for more nearby Hotels at FeTNA discount rates, but no guarantees!!! Go to FeTNA website and call hotels early and directly to get the discounted FeTNA rates. They won't last long.

விழாவில் சந்திப்போம் உறவுகளே!

செந்தமிழால் சேர்ந்திணைவோம்!
செயல்பட்டே இனம் காப்போம்!!

இது உண்மையா??







”நேற்று முன்தினம் அபுதாபியிலுள்ள முத்துத்தீவில் இறந்த நிலையில் ஒரு கடற்கன்னி சடுதியாகக் கண்டெடுக்கப்பட்டு உள்ளது. இங்கிருந்த உல்லாசப் பிரயாணிகள் அதிர்ச்சிக்குள்ளானதோடு அத்தீவை விட்டும் உடனடியாக வெளியேறியுள்ளனர்”

உலக வரலாற்றில் முதன் முதலான கடற்கன்னியின் உண்மை நிழற்படம் அப்படின்னு ஒரு மின்னஞ்சல் வந்ததுங்க. இது நெசமுங்ளா??

6/03/2010

நிந்திதத் தமிழ்!



அறிவுப்பூர்வமாவதற்கு
எப்படியெல்லாம்
உணர்ச்சிவயப்பட வேண்டி இருக்கிறது
இவரால்?


குழந்தையை
அன்பு கலந்த வாஞ்சையோடு
அரவணையுங்கள் எனப்பகருதலற்று

எமோ...மோசனல், ரேரேஃஃஃஃசனலென
தமிழை நிந்தித்துத்
தன் பை நிரப்புதலோ??

6/02/2010

பெண் நடிகை?!

நெஞ்சம் என் மொழிக்காகவே துடிக்கிறது
மற்ற மொழிகளிலும் தாழ்வாய்
என்மொழியைச் சிலர் நினைத்திடலாம்
பொது மன்றங்களில் அது
பேசப்படாமலும் போகலாம்; ஆனால்
எனக்கு உயர்ந்தது என் தாய்மொழியே!
என் அவார் மொழியானது
நாளை உதிருமெனில், சாவு
என்னை இன்றே சூடிக்கொள்ளட்டும்!

ஏன்? ஏன்?? இவன் நல்லாத்தானே இருந்தான்... என்னாச்சு இவனுக்கு அப்படின்னுதானே நினைக்குறீங்க? நமக்கெல்லாம் இந்தளவுக்கு நெஞ்சுரம் வந்திடுமா என்ன?? நான் ஒரு கோழைப்பயல்ங்க.... பிரச்சினைன்னு வந்தா, எட்டு காததூரம் ஓடிடுவேன்... இஃகிஃகி!! சரி, அப்ப யார்தான் இதைச் சொன்னது??

தசுகிசுத்தான் நாட்டைச் சார்ந்த பாவலன் இரசூல் கம்செத்தோவ் சொன்னதுதாங்க இது. சரி, அவங்க நாட்டோட மக்கள் தொகை எவ்வளவு? வெறும் 80 இலட்சம்தாங்க! தசிக்ங்றது அவங்க மொழி!! எல்லாருமே, தூய தசிக் மொழியிலதான் பேசிப் புழங்குறாய்ங்களாம். ஆண்டுக்கு ஆண்டு, அம்மொழியைப் பேசுவோர் எண்ணிக்கை கூடுதாமாங்க. தமிழ்நாட்டுல??

இரசூல் கம்சொத்தோவ் போலப் பாடி புகழ் பெற முடியாதுதான். ஆனாலும், நமக்குன்னு ஒரு கிருதா இருக்கத்தான செய்யுது?


உங்களால மட்டும் எப்படி ஆங்கிலச் சொல் கலக்காமப் பேச முடியுது? அதுவும் அமெரிக்காவுல இருந்துட்டு, அமெரிக்காவுல இருக்கிற சகதமிழர்கள்கிட்ட எப்படிச் சரளமாத் தமிழ் பேசமுடியுதுன்னு அடிக்கடி மக்கள் கேக்குறாய்ங்கள்ல, நம்மையும் பார்த்து??

அவங்க அப்படிக் கேட்கும் போதெல்லாம், வட அமெரிக்க வலைஞர் தளபதி நசரேயன் சொன்னதுதாங்க நினைவுக்கு வரும். அவர் அப்படி என்னதான் சொன்னாரு??

“பழமையண்ணே, எதிர்ல நிக்கிறவன் தமிழன்னு தெரிஞ்சாப் போதும்.... நமக்கு சுட்டுப் போட்டாலும் தமிழைத் தவிர வேறெதும் வராதுண்ணே! நானும் மேலாளரா இருக்கேன்... வெள்ளையப்பனுக, வெள்ளையம்மாகூட ஆங்கிலத்தில பேசுறதோட சரி, மத்தபடி எல்லாம் தமிழ்தான்!”

தளபதி, இப்படி சொல்லிச் சொன்னதுல இருந்து நாமளும் அதேதானுங்க. கூடவே, வட அமெரிக்கத் தமிழச் சங்கப் பேரவைத் தலைவர் சொல்றதும் நினைவுக்கு வரும். அவர் அப்படி என்ன சொன்னாருன்னு கேக்குறீங்களா??

“நேரம் இல்லை; விபரம் தெரியாது; பேச்சு வராது அப்படின்னு நினைச்சா, எதுவொன்னும் செய்ய முடியாது. ஆனா, மனசு வெச்சிட்டா எதையும் செய்ய முடியும்!”, அப்படின்னு சொல்லிச் சொல்வாரு. இதுவும் எனக்குப் பிடிச்சிருக்கு; நிதர்சனமும் கூட!

ஆகக் கூடி, என்ன சொல்ல வர்றேன்னா, தமிழனைக் கண்டா தமிழ்லதான் பேசுறதுங்றதுல மனசு வெச்சா, தன்னால தமிழ் வந்து நாக்குல தாண்டவம் ஆடும்ங்றேன்... என்ன நாஞ்சொல்றது??

இப்படித்தான் பாருங்க, நம்ம பங்காளி ஒருத்தன் எடக்குமுடக்காவே பேசிட்டு இருந்தான். எங்க நாஞ்சொல்றதை எல்லாம் தமிழ்ல சொல்லு பாக்கலாம்னான். செர்றா பங்காளி, பேசு பாக்கலாம்னேன் நானு!

“யார்கோட கால்ல, இவ்வளவு சீரியசாப் பேசிட்டு இருக்கே?”

“அழைப்புல யார்றா அது, வெகு மும்முரமாப் பேசிட்டு இருக்கே?”

“நான் இப்ப பிசி...நீ கேக்குற கொசுடீன்க்கெல்லாம் ஏன்சர் குடுத்துட்டு இருக்க முடியாது!”

“நான் இப்ப ரொம்ப முசுவு... நீ கேக்குறதுக்கெல்லாம் மறுமொழி குடுத்துட்டு இருக்க முடியாது!”

இப்படியே சித்த நேரம் மாறி மாறிப் பேசிட்டு இருந்தோம். கடைசில, மிரண்டு போய், கை கூப்பி வணக்கம் சொல்லத் துவங்கிட்டான்.


அதே போல வார இதழ்கள்ல அடிக்கடி பார்க்கிற சில சொற்கள், எரிச்சல் வர்றா மாதிரி இருக்கும் பாருங்க...

பெண் நடிகையுடன் தொழில் அதிபர் இரகசியப் பயணம்னு எழுதுவான். ஏன்டா, என்னைக்குடா ஆண் நடிகைய எங்களுக்கு காண்பிக்கப் போறீங்க? எனக்கு வெவரந் தெரிஞ்ச நாள்ல இருந்து, பெண் நடிகை, பெண் தோழி, பெண் வேலைக்காரின்னு பெண்களாவே சொல்லிச் சொல்றீங்களே?


..ங்கொய்யால, நடிகை, தோழி, வேலைக்காரப் பெண்மணி அப்படின்னு எழுதினா, கிளுப்புகிளுப்புத் தட்டாதோ??

அதைவிடக் கொடுமை... நான் நாலஞ்சி மாசத்துக்கு முன்னாடி ஊருக்குப் போயிருந்தப்ப பார்த்தனுங்க.... முதல் மாதிரி, பொடி பொட்டுக எல்லாம் பாவாடை, தாவணி, உள்ளூர்த் தையல்காரர் தைச்ச சட்டை இதெல்லாம் உடுக்கறது கிடையாது... எல்லாம், திருப்பூர் பின்னல்ச் சட்டைதாம் போங்க.... சரி, காலமாற்றம்... நாகரிக மேம்பாடு... இருந்துட்டுப் போகட்டும்....

Love is sweet... Look at here... இப்படித்தான் சொல்லுது அதுல இருக்குற வாசகம்... ஏப்பா, என்னைக் கவனி, காதல் இனிது... பொன்னேந்தல்... இப்படியான வாசகங்கள் திருப்பூர் அச்சுல ஏறாதா?? என்னமோ போங்க...

என்னமோ சொல்ல வந்துட்டு... என்னமோ பேசிட்டு இருக்கம்பாருங்க... மக்கா, இன்னும் சரியா ஒரு மாதந்தான் இருக்கு... நம்ம வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையோட தமிழ் விழாவுக்கு.... கனெக்டிகெட்ல நடக்குது இந்த ஆண்டு.... எல்லாரும் வரப் பாருங்க...

விழாவுக்கு இன்னமும் பதியாதவங்க, உடனே பேரவையோட இணைய தளத்துல போயிப் பதிஞ்சுடுங்க... முக்கியமா, போக்குவரத்து, விடுதி வசதிகளை உடனடியாச் செய்யப் பாருங்க... சரியா?


செந்தமிழால் சேர்ந்திணைவோம்!
செயல்பட்டே இனம் காப்போம்!!