4/28/2010

எல்லாமும் அவளே!

அவன் நடத்திக் கொண்டிருந்தான் நிகழ்ச்சி
அவனைக் கண்டவளுள் அன்பின் முகிழ்ச்சி
சூதன் அவன்மேல் கொண்டான் சூழ்ச்சி
அதுகண்டு அவன் தரித்தனன் தாழ்ச்சி
ஊரார் பூண்டனர் அவன்மேல் இகழ்ச்சி

அவனோ அடையவில்லை பிறழ்ச்சி
அவளோ ஆயினள் நம்பிக்கைத் திகழ்ச்சி
அதுகண்டு அவன் அடைந்தனன் நெகிழ்ச்சி
அவ்வூக்கத்தில் சூழ்ச்சிக்குப் பூண்டனன் அகழ்ச்சி
எழுச்சிகண்டதில் சூதனோ ஞெகிழ்ச்சி
ஆயினும் மாய சூதனுக்கோ வீழ்ச்சி
நாயகன் அவள்மேல் பொழிந்தனன் புகழ்ச்சி
வெட்கத்தில் அவள்முகம் கவிழ்ச்சி! நாணத்தில்
முறுகி முருகிய அவள்முகமோ கவிழ்ச்சி!!

மகிழ்ச்சி!

4/25/2010

அகநகை


மகிழ்ச்சி!மகிழ்ச்சி!!மகிழ்ச்சி!!!
மூத்த, வெகுமூத்த சீமானுள் தியாகவுள்ளமது நிறைந்த கதைகள் புதைந்து கிடப்பது காணின் மகிழ்ச்சி!மகிழ்ச்சி!!மகிழ்ச்சி!!!

மகிழ்ச்சி!மகிழ்ச்சி!!மகிழ்ச்சி!!!
தேனிலவிலிருந்து கூட, இட்ட இடுகைக்கு வாசகர் பரிந்துரைக்கான ஒப்பமுக்கு துலங்குவதில் மகிழ்ச்சி! மகிழ்ச்சி!!மகிழ்ச்சி!!!

மகிழ்ச்சி!மகிழ்ச்சி!!மகிழ்ச்சி!!!
தம்பியவன் புத்தம்புதுக் கன்றுடன் உறவாட அணவுதலாய்க் கூடியிருப்பன் என நினைந்து நினைந்து, மகிழ்ச்சி! மகிழ்ச்சி!!மகிழ்ச்சி!!!

மகிழ்ச்சி!மகிழ்ச்சி!!மகிழ்ச்சி!!!
கொங்கர் மண்ணில், மேல்கரைப் பூந்துறை நாட்டுக்கும் சிங்காரப் பட்டணத்துக்குமென ஊசல்மணியாய் ஆடிக்கிடந்தவர், ஒரு நிலையில் நின்று இடுகைகள் இடும் காலம் மீளப்போவது அறிந்து கொண்டதில் மகிழ்ச்சி!மகிழ்ச்சி!!மகிழ்ச்சி!!!

மகிழ்ச்சி!மகிழ்ச்சி!!மகிழ்ச்சி!!!
குடுகுடுப்பை ஆட்டி ஆட்டி வீதியிலேயே கிடந்தவர், ஒற்றை அருநெல்லி நாத்தினை ஊன்றி தோட்டக்காரனாய் ஆகி வீடு புகுந்ததில் மகிழ்ச்சி!மகிழ்ச்சி!!மகிழ்ச்சி!!!

மகிழ்ச்சி!மகிழ்ச்சி!!மகிழ்ச்சி!!!
நொம்பலத்தில் ஆழ்ந்து போய்க் கிடந்த இராச தில்லையம்பலவர், வலையில் ஓடியாடித் திரிவது கண்டு மகிழ்ச்சி!மகிழ்ச்சி!!மகிழ்ச்சி!!!

மகிழ்ச்சி!மகிழ்ச்சி!!மகிழ்ச்சி!!!
புகையிரதத்துக்கு கணக்கு வழக்குத் தொடுப்பவர், என்றாகிலும் ஒருநாள் பெற்ற பிள்ளையைப் பார்க்க அமெரிக்க தேசத்து மண்ணை மிதித்துத்தானே ஆகவேண்டும் என்பதில் மகிழ்ச்சி!மகிழ்ச்சி!!மகிழ்ச்சி!!!

மகிழ்ச்சி!மகிழ்ச்சி!!மகிழ்ச்சி!!!
பதிவுலக நக்கீரன், எதையும் அணு அணுவாய்ப் பகிர்ந்து, சல்லி சல்லியாய் நேர்முகம் கொண்டு வகுந்தெடுத்து வேதாளத்துக்கே வேதாளர் பாலிபாய்நாதன் அச்சுமுகம் தெரிந்துகொண்டதில் மகிழ்ச்சி!மகிழ்ச்சி!!மகிழ்ச்சி!!!

மகிழ்ச்சி!மகிழ்ச்சி!!மகிழ்ச்சி!!!
இரயிலடியில் வெள்ளையக்காவுடன் இச்சுஇச்சு விளையாடும் கருப்புத்தங்கம், தென்பாண்டிச் சிங்கமதை நேரில் காணப்போவது குறித்து எண்ணுகையில் மகிழ்ச்சி!மகிழ்ச்சி!!மகிழ்ச்சி!!!

மகிழ்ச்சி!மகிழ்ச்சி!!மகிழ்ச்சி!!!
பழையதே ஆயினும் நல்லபாங்குடன் ஊன்சோறு போட்டு, திருட்டுச் சோழனை தின்னுச்சோழனாக்கியவர் வடகரோலைனா வந்து போவதில் மகிழ்ச்சி!மகிழ்ச்சி!!மகிழ்ச்சி!!!

மகிழ்ச்சி!மகிழ்ச்சி!!மகிழ்ச்சி!!!
சிங்கப்பூர்க் கைலாயர் திடீர்க் காட்சியளித்ததில் மகிழ்ச்சி!மகிழ்ச்சி!!மகிழ்ச்சி!!!

மகிழ்ச்சி!மகிழ்ச்சி!!மகிழ்ச்சி!!!
இராயிக் களிக்கு ஒட்டுவாணமா இரக்கிரி கடைந்து தின்பதில் மகிழ்ச்சி!மகிழ்ச்சி!!மகிழ்ச்சி!!!

மகிழ்ச்சி!மகிழ்ச்சி!!மகிழ்ச்சி!!!
ஊர்க் கிணற்றடியில் அத்தை மகள் கையைத் தொடுகையில் மகிழ்ச்சி!மகிழ்ச்சி!!மகிழ்ச்சி!!!

மகிழ்ச்சி!மகிழ்ச்சி!!மகிழ்ச்சி!!!
சேற்றுழவில் மேயும் கொக்குகளைக் காண்பதில் மகிழ்ச்சி!மகிழ்ச்சி!!மகிழ்ச்சி!!!

மகிழ்ச்சி!மகிழ்ச்சி!!மகிழ்ச்சி!!!
மனதிற்த் தோன்றுவன, தெளிதமிழில் எழுதிப் பார்க்கையில் மகிழ்ச்சி!மகிழ்ச்சி!!மகிழ்ச்சி!!!

மகிழ்ச்சி!மகிழ்ச்சி!!மகிழ்ச்சி!!!
இதை நீங்கள் வாசிக்குங்கால், அதுவும் மகிழ்ச்சி!மகிழ்ச்சி!!மகிழ்ச்சி!!!


4/24/2010

நானும் இருக்கேன்!

இருப்பை உணர்த்தி, உணர்ந்து கொள்ள
எதையாவது செய்!

பரபரப்புச் சூறாவளி ஈன்றி
கவனத்தைக் கொய்து
இருப்பை உணர்த்திக் கொள்ள
எதையாவது செய்!

அடுத்தவன் நைந்துகொள்ள
நின்தாள் அவன் சிரம்மிதிக்க
இருப்பை உணர்த்திக் கொள்ள
எதையாவது செய்!

அந்தரத்தை உடைத்து
கருவறைக்குள் அத்துமீறி
மாந்தநேயமது கொன்று
இருப்பை உணர்த்திக் கொள்ள
எதையாவது செய்!

இருப்பை உணர்த்தி, உணர்ந்து கொள்ள
எதையாவது செய்!


அடைபட்ட நிலையில் மாந்தன்....


































4/22/2010

மும்மாயை!

சைவ சித்தாந்தத்துல பார்த்தீங்கன்னா, மாயைங்ற பொய்த் தோற்றத்துக்கு பெரிய விளக்கம் கொடுத்து, அதை மும்மாயைன்னு மூன்று விதமாப் பிரிச்சி வெச்சிருப்பாய்ங்க. தூமாயம், தூயாமாயம், பகுதிமாயம்ன்னு மூனு. அதாவது, தூய்மையான பொய்த்தோற்றம், தூய்மையற்ற பொய்த் தோற்றம், பகுதி நிலையிலான பொய்த்தோற்றம்!

தமிழினச் சூழலுக்கும் இச்சொற்கள் பொருந்தும்ங்றது என்னோட எண்ணம். இது ஒரு சுய ஆய்வுதானே ஒழிய, யாரையும் குறைபட்டுக் கொண்டு எழுதுறது கிடையாதுங்க. நவீனத்தை நோக்கி வேகமாப் போய்ட்டு இருக்கிற இந்த சூழல்ல, எல்லாருக்குமே தனிமனிதத் தேவைகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டிய கட்டாய நிலை இருக்குதான்.

அதற்காக, ஒவ்வொரு நாளும் மனிதத்தை எதோ ஒரு விதத்துல கொன்னுட்டுதான் இருக்கோம். குறிப்பா, வளர்ந்து வரும் நாடுகள்ல இது வரம்பு மீறிப் போய்ட்டு இருக்கு. பெற்ற தாய் தந்தையரைக் கூட அல்லாட விட்டுட்டு, தன்னோட அன்றைய மகிழ்ச்சியே பிரதானம்னு போய்ட்டு இருக்கிற ஒரு சூழ்நிலை நாட்டுல!

இந்த சூழ்நிலையில, யாரொருவரும் அவராகவே இருக்க முடியுறதில்லை. காலநேரத்துக்கு ஏத்தபடி, நல்லவனா ஒரு பொய்த்தோற்றம்! கெட்டவனா ஒரு பொய்த்தோற்றம்!! அதுவும் இதுவுமா பட்டும்படாம ஒரு பொய்த்தோற்றம்....

ஆக, தமிழனோட இன்றைய சூழ்நிலைக்கு யார் காரணம்? ஒவ்வொரு தமிழனும்தான் காரணம். தமிழை நேசிக்கிறது கிடையாது; பண்பாடுன்னா அது என்ன விலை? அவன் அவனாவே இருக்கிறபட்சத்துல, அவன் ஒரு பொழைக்கத் தெரியாதவன். ஓங்கிப் பேசி முடிக்கிறவன் திறமைசாலி.

இந்த பின்னணியில, ஒவ்வொரு தமிழனும் சுய ஆய்வுக்கு உட்படுத்திகிறதுதான் காலத்தின் கட்டாயம். அதை விட்டுட்டு, மாயங்களோட மாயங்களா நாமும் இருந்து அடுத்தவனை வசைபாடிட்டு இருக்கிறதுல ஒன்னும் ஆகப் போறது கிடையாது. வலையுலக சமீப நிகழ்வுகளுக்கு முன்னமே நானும் என்னோட வருத்தத்தைப் பகிர்ந்துகிட்டேன்.... எப்படி? மக்கள் இன உணர்வு கொள்ளலையேன்னுதான்!

“மொழி ஒரு சமுதாயச் சாதனம்! மதத்தைக் காப்பது எளிது; மொழியைக் காப்பது எளிதன்று. வாழையடி வாழையெனக் குடும்பத்தில் நடைமுறையில் இருக்கும் பழக்கம், சடங்குகள் முதலானவை சமயத்தைக் காப்பாற்றப் போதுமானவை. ஆனால் மொழி கற்கப்பட வேண்டிய ஒன்று. கற்றால் மட்டுமே காப்பாற்றக் கூடிய ஒன்று!”

வேர்கள் தமிழில்! விழுதுகள் உலகெங்கும்!!

சென்ற ஆண்டு வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை விழாவிற்கு, நுழைவுச் சீட்டு வாங்கத் தவறியதால் நான்பட்ட அல்லல் யாதென நீங்கள் அறிவீர்கள். இந்த ஆண்டும் அதே நிலைதான் வரப் போகிறது. ஏற்கனவே பெருவாரியான நுழைவுச் சீட்டுகளுக்கான பதிவுகள் ஏற்கப்பட்டு விட்டன. எனவே துரிதகதியில் நண்பர்கள் யாவரும் பதிந்து, விழாவில் கலந்து கொள்வீர்களாக!


“செந்தமிழால் சேர்ந்திணைவோம்!
செயல்பட்டே இனம் காப்போம்!!”

4/19/2010

அமெரிக்கா: சித்திரைத் திருவிழா படங்கள்



படங்கள் உதவி: உயர்திரு நாஞ்சில் பீற்றர் அவர்கள்

சித்திரைத் திருவிழா பற்றிய விமர்சனத் தொகுப்புக்கு இங்கே சொடுக்கவும்!

4/18/2010

அமெரிக்கத் தலைநகர் கண்ட சித்திரைத் திருவிழா!










வசந்தம் வருடிவிட, தென்றல் தளைய வர, வீதியெங்கும் இளந்தளிர்கள் பச்சைப் பட்டுடுத்த, முகில்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் ஊர்கோலமிட அந்த இனிய மாலைப் பொழுதானது, அமெரிக்கத் தலைநகரையொட்டிப் பரவி விரவி இருக்கும் தமிழர்களை எல்லாம் வெள்ளோக்கு நடுநிலைப் பள்ளி வளாகத்திற்கு கொண்டு வந்து சேர்க்கச் சேர்க்க, இதுவன்றோ சமத்துவம் போற்றும் தமிழர் கூட்டமெனச் சிலாகித்த நிலாமகள் தன் நான்காம்பிறைப் பொன்னொளியைப் படரவிட்டாள்.

குறித்த நேரத்திற்கொப்ப, வெர்ஜீனியா தமிழ்ப் பள்ளி மாணவர்கள் அரங்கத்தின் மேடையிற் தோன்றி தமிழ்த்தாய் வாழ்த்தினைப் பாடி முடித்ததும், சிவா நவரத்தினம் அவர்கள் விழாவிற்கு வந்திருந்தோரை வரவேற்றுப் பேசினார்.

வரவேற்புரை முடிந்ததும், குழுமியிருந்த அரங்கத்தினருக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. ஒவ்வொருவரும் இது கனவா அல்லது நினைவா என வியந்து தம்மைத் தாமே கிள்ளிப் பார்த்துக் கொண்டார்கள் எனச் சொல்வது மிகையாகாது என்றே சொல்ல வேண்டும். செந்தமிழே திரண்டு வந்திருந்து ஆர்ப்பரித்தது போன்றதொரு காட்சி.

மூன்று வயதில் இருந்து பதின்மத்தைத் தொடும் வயது வரையிலான இளந்தளிர்கள், ஒரு சீராய் ஒவ்வொருவர் பின் ஒருவராய் அரங்க மேடையை நோக்கிப் பணிவோடும், ஒரு ஒழுங்கோடும் முன்னேறிச் சென்றனர். முனைவர் ஜெயந்தி சங்கர் அவர்கள் குழந்தைகளைக் கொஞ்சு மொழியில் நெறிப்படுத்த, ஆசான் கொழந்தவேல் இராமசாமி அவர்கள் நிகழ்ச்சியை முன்னெடுத்துச் செல்ல, குழந்தைகள் அதீத ஆவலுடன் தமிழோடு பின்னிப் பிணைந்து கிடந்தார்கள்.

ஒன்றல்ல, இரண்டல்ல, நாற்பத்தெட்டுத் தமிழ்ச் சிறார்கள் பங்கேற்று, வெகு அனாயசமாக அய்யன் திருவள்ளுவரின் திருக்குறளைச் செப்புவித்து, கற்ற தமிழுக்கும், தன் வாழ்வுக்கும், வந்திருந்தோர் வாழ்வுக்குமான செம்மையைச் செவ்வனே செய்தார்கள். ஒவ்வொரு குழந்தையும் திருக்குறளைச் சொல்லிச் சென்றதும் கூடியிருந்தோர் முகத்தில் பரவசம் பளீரென மின்னலிட, நிகழ்ச்சியைக் கண்டு கொண்டிருந்த எமக்கோ மெய் சிலிர்த்துச் சிலிர்த்து உச்சி குளிர்ந்து கண்கள் பனித்தன. தமிழ்ப் பள்ளியை நடத்திக் கொண்டிருக்கும் அந்த நல்ல உள்ளங்களுக்கான மகத்தான வெற்றியே அந்நிகழ்ச்சி!

தமிழனின் வாழ்வில் இரண்டறக் கலந்ததுதானே இயல், இசை, நாடகம் என்பதும்? இதையும் நமது தமிழ்ச் சிறார்கள் விட்டு வைப்பார்களா என்ன?? கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கும் மேலாக, பல குழந்தைகள் மேடையில் தோன்றி பல்வேறு திரைப்படப் பாடல்களுக்கு, உரிய நடனத்தைப் பாங்காய், தத்தம் நடன ஆசிரியர்களின் பயிற்றுவிப்புக்கேற்ப வெகு அழகாக ஆடி தம் திறமையை வெளிப்படுத்தினார்கள். இடையில் ஏற்பட்ட, தொழில்நுட்ப இடையூறுகள் குறுக்கிடாமல் இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

அடுத்ததாக இடம்பெற்ற, கிளமெண்ட் ஆரோக்கியசாமி அவர்கள் ஒருங்கிணைத்து நடத்திய சிறுவர்களுக்கான இசைப் போட்டியும் சிறப்பாக அமைந்தது. அதிலே ஈழத்து உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் அவர்களுடைய பாடல் ஒன்றைப் பாடிய சிறுமியும், கருவியிசையில் மிளிர்ந்த சிறுமியும் பலரது மனதைக் கொள்ளை கொண்டார்கள் என்பதை அவதானிக்க முடிந்தது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்துக் குழந்தைகளும் வெகு அனாயசமாகத் தத்தம் திறமைகளை வெளிப்படுத்தும் நேரத்தில், விழா ஏற்பாட்டாளர்கள் தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்திக் கொள்வது ஒன்றே, அவர்களுக்கு அளிக்கக்கூடிய ஊக்கமாக இருக்க முடியும்.

இளஞ்சிறார்களின் பல்பொருள் திறமைகளைக் கண்டு களித்துக் கொண்டிருந்ததில், நேரம் விரைவாகக் கரைந்து கொண்டிருப்பதை எவருமே அறிந்திருக்கவில்லை. இரண்டுமணி நேரம் இரண்டு மணித்துளிகளாகக் கழிந்தது போன்றதொரு உணர்வே அனைவருள்ளும் ஏற்பட்டது.

இந்நேரத்தில்தான், புயலெனப் புறப்பட்டுப் பெருங்காரெனக் களமிறங்கினார் கவித்தென்றல் ஜான் பெனடிக்ட் அவர்கள். ஆம், கணீர்க் குரலில் விழா நிகழ்ச்சிகளைத் தொகுத்தளிக்க மேடையில் தோன்றினார் இவர். தலைமை உரையாற்ற, வாசிங்டன் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் பாலகன் ஆறுமுகசாமி அவர்கள் அழைக்கப்பட, தலைவர் அவர்கள் தோன்றி வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கத்தின் கடமை, பொறுப்பு, சாதனைகள் முதலானவற்றைக் குறிப்பிட்டுப் பேசினார்.

அடுத்ததாக, இந்தியத் தூதரக அதிகாரி உயர்திரு. வி.எஸ்.செந்தில் இ.ஆ.ப அவர்கள் சிறப்புரை ஆற்றினார். இந்தியாவின் மகத்தான வளர்ச்சி, தமிழ் மற்றும் தமிழர்களின் சிறப்பு ஆகியவற்றைக் குறிப்பிட்டுப் பேசி அமர்ந்ததும் கரவொலி அடங்க சில நேரம் பிடித்தது. சிறப்பு விருந்தினரைத் தொடர்ந்து, இந்திய கார்கில் போரில் பங்கேற்ற உயர்திரு. கர்ணல் இரவி அவர்கள் பேசினார். அவர் பேசுகையில், இச்சித்திரை விழாவில் தமிழரொடு தமிழராய் கலந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைவதாகக் குறிப்பிட்டார்.

சித்திரைத் திருவிழா எனும் தலைப்பில் பேச, ’அனைவரும் நன்கறிந்த’ எனும் சிலாகித்தலோடு மேடையில் தோன்றினார் வலைப்பதிவர் பழமைபேசி. சித்திரைத் திருவிழாவின் மூலத்தை அறியும் நோக்கில், ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தைத் தாம் கற்க முற்பட்டதையும், அதில் எவ்வாறு சமத்துவத்தோடு சித்திரைத் திருவிழா கொண்டாடப்பட்டது என்பதையும் குறிப்பிட்டுப் பேசினார்.

கூடவே, திருக்குறள் மாநாடு, புறநானூறு ஆய்வுக் கூட்டம், இலக்கிய வட்டம், தமிழ்ச் சமூகத்தையொற்றிய சுகதுக்கங்களுக்கான பங்களிப்பு எனப் பன்முகத்தோடு இயங்கும் வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கத்தைப் பார்த்து அதன்மீது காதலுடன் கூடிய பொறாமை கொள்வதாகவும் கூறியது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

பழமைபேசி அவர்களது உரைக்குப் பிறகு, வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கத்தின் செயல்பாடுகள் எனும் தலைப்பில் சங்கத்தின் செயலாளர் திருமதி. கல்பனா மெய்யப்பன் அவர்கள் வெகு விரிவாகப் பேசி சங்கத்தின் உறுப்பினர்கள் மேலும் மேலும் ஊக்கத்தோடு செயல்பட வேண்டுமென்பதை அறிவுறுத்திப் பேசினார். அவரைத் தொடர்ந்து, தென்றல் முல்லை இதழின் ஆசிரியர் கோபிநாத் அவர்கள், தென்றல் முல்லை இதழுக்கு சங்கத்தினரின் பங்களிப்பு எவ்வாறாக இருக்க வேண்டுமென்பதை விபரமாக எடுத்து உரைத்தார்.

சரியானதொரு தருணத்தில் உண்டிக்கான இடைவேளையை நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஜான் பெனடிக்ட் அறிவிக்கவும், அரங்கத்தினர் வளாகத்தின் மற்றொரு மூலையில் இருந்த உணவக மையத்தை அணுகினர். அங்கே அவர்களுக்கு அறுசுவையுடன் கூடிய உணவு கடுகதியில் பரிமாறப்பட்ட்து. இட அமைப்பும், உணவு பரிமாறப்பட்ட விதமும் வெகு சிறப்பாக இருந்த்து.

உணவு இடைவேளைக்குப் பின்னர், நாட்டுப்புறப் பாடலுக்கான இளமை ததும்பிய துள்ளல் நடனத்தை ஜானத்தன், பிரின்ஸ் மற்றும் ஜெய்சன் ஆகிய பதின்மவயதினர் அரங்கேற்றினார்கள். இசையும் நடனமும் அரங்கத்தினரையும் எழுந்து நின்று ஆடும் நிலைக்கு இட்டுச் சென்றது.

நிகழ்ச்சியின் துவக்கத்தில் இளஞ்சிறார்கள் எப்படி திருக்குறளை வடிவாகச் சொல்லி அரங்கத்தினர் மனதைக் கொள்ளை கொண்டார்களோ அதைப் போல, ஈழத்துக் கவிஞர் சேரனின் பாடலான பூமியின் அழகே பரிதியின் சுடரே எனும் பாடலுக்கு வெகுநேர்த்தியான அபிநயத்துடன் ஆடி, பார்ப்போரைப் பரவசத்திற்குள் ஆழ்த்தினர் அபிநயா நடனப் பள்ளியின் மாணவியர்.

நாட்டியம் ஆடிய மாணவிகளில் ஒருவரான மாதவி சங்கர் நிகழ்ச்சியைத் தொகுத்தளிக்க, நடன ஆசிரியர் திருமதி. ரேவதி குமார் அவர்களின் நடன மேலாண்மையில் மேலும் சில பாடல்களுக்கு தொடர்ந்து நடனம் இடம் பெற்றது. சித்திரைத் திருவிழாவின் மகுடத்தில் மாணிக்கமாய் அமைந்த ஒரு நிகழ்ச்சி என்றால், கவிஞர் சேரனின் பாடலுக்கு இடம் பெற்ற நடனமாகத்தான் இருக்க முடியும்.

அபிநயா நடனப் பள்ளியின் மாணவிகள் வழங்கிய அந்த அழகுறு நிகழ்ச்சியத் தொடர்ந்து, இலக்கியச் சுவை கூட்ட மேடையில் தோன்றினார் முனைவர் இர.பிரபாகரன் அவர்கள். யாதும் ஊரே, யாவரும் கேளிர் எனும் புறநானூற்றுப் பாடலுக்கு நயம்படப் பொருளுரை அளித்து அவர் பேசியதும், அந்தப் புறநானூற்றுப் பாடலுக்கு இசையமைத்துப் பாட வந்தார் திருமதி.லதா கண்ணன். முனைவர் பிரபாகரன் அவர்களது நயமான உரைக்கு மேலும் மெருகூட்டும் வகையில் மிக அற்புதமாக, சக பாடகர் அய்யப்பன் அவர்களோடு இணைந்து பாடி அரங்கத்தினரின் கைதட்டலை அள்ளிச் சென்றார் லதா கண்ணன்.

தமிழ்ச் சமுதாயம் சார்ந்த ஒரு சில அறிவிப்புகளுக்குப் பின்னர், தனித்தமிழில் பேச முடியுமா? எனும் நிகழ்ச்சியை அவருக்கே உரிய பாணியில் நட்த்த வந்தார் கவிச்சோலை ஜான் பெனடிக்ட். நடுவர்களாக முனைவர் சரவணபவன், நல்லாசிரியர் வேலுச்சாமி, வலைப்பதிவர் பழமைபேசி ஆகியோர் செயலாற்ற, நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மேடையேறினர் திருமதி. புஷ்பராணி, மருத்துவர் ஜெயகோபால், திரு.ஜோகன், திரு.சுந்தர் குப்புசாமி, திருமதி. உமாதேவி ஆகியோர்.

கொடுத்த தலைப்பில் போட்டியாளர்கள் அனைவருமே வெகு சிறப்பாக, ஆங்கிலச் சொல் எதுவும் இடம் பெறாமல்ப் பேசி அரங்கத்தினரைப் பெருவியப்பில் ஆழ்த்தினர் என்றுதான் குறிப்பிட வேண்டும். போட்டியின் முடிவில், திரு.சுந்தர் குப்புசாமி அவர்கள் முதலிட்த்தைப் பெறுவதாக முனைவர் சரவணபவன் அறிவிக்கவும், அதை ஆமோதிக்கும் பொருட்டு அரங்கமே எழுந்து நின்று கரவொலி எழுப்பியது.

எல்லோரும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த பட்டிமண்டப நிகழ்ச்சிக்கான அறிவிப்பு வெளியாகவும், அனைவரும் ஓடோடி வந்து த்த்தம் இருக்கைகளில் அமரத் துவங்கினர். திரைப்படப் பாடல்களால் தமிழ் வளர்ச்சி அடைகிறதா? வீழ்ச்சி அடைகிறதா?? எனும் தலைப்பில் பேச வருமாறு இரு அணியினரையும் அழைத்தார் பட்டிமண்டப நடுவர் பிரபாகரன் முருகையா.

அதைத்தொடர்ந்து, வளர்ச்சி அடைகிறது என வாதாட அணியின் தலைவராக உமாதேவி, கோபிநாத் மற்றும் ஜான்பெனடிக்ட் ஆகியோரும், வீழ்ச்சி அடைகிறது என வாதாட அணித் தலைவராக மயிலாடுதுறை சிவா, முனைவர் பாலாஜி சீனிவாசன் மற்றும் வாஞ்சிநாதன் ஆகியோரும் களம் புகுந்தனர்.

பல திரைப்படப் பாடல்களை இரு அணியினரும் மேற்கோள்காளாக்க் காட்டிப் பாடிப் பேசினர். எனினும் மயிலாடுதுறை சிவா மற்றும் பாலாஜி சீனிவாசன் ஆகியோர் இசை நயத்துடன் பழைய பாடல்க்ளைப் பாடிக் காட்டியது அனைவரையும் கவர்ந்தது.

எனினும், இறுதியாகப் பேச வந்த ஜான்பெனடிக்ட், தான் முன்வைத்த ஆணித்தரமான கருத்துகளால் அரங்கத்தினரின் ஆதரவைத் தட்டிச் சென்றார். நடுவரும் அதற்கேற்ப, காலமாற்றத்திற்கேற்ப பாடல்களும் மாற்றத்திற்கு ஆட்படுகிறது; கவிஞனின் தோய்ப்பில் திரைப்படப் பாடல்கள் தமிழுக்கு என்றும் வளர்ச்சிக்கான பங்களிப்பாகவே இருக்கிறது என தீர்ப்பை நல்கினார். மொத்த்த்தில், பட்டிமண்டப நிகழ்ச்சியானது வெகு சுவாரசியமாகவும், நயத்தோடும் அமைந்த்து என்றே சொல்ல வேண்டும்.

இறுதியில் சித்திரைத் திருவிழாவுக்கு வருகைபுரிந்த அனைவருக்கும், திரு.செயபாண்டியன் நன்றி நவில்ந்தார். இரவு மணி பத்து மணியைத் தாண்டி இருந்தது. எனினும், ஒரு கூட்டுப் பறவைகளாக்க் கூடிய தமிழர் கூட்டம் பிரிய மனமில்லாமல் ஆங்காங்கே குழுமம் குழுமாக நின்ற்வாறே அளாவளாவிக் கொண்டும், நகைத்தபடியே ஆர்ப்பரித்துக் கொண்டும் இருந்தனர். எந்த ஒரு காரியத்துக்கும் முடிவு என ஒன்று உள்ளது என்பதுதானே நியமம்?!

திருவிழாவினை குடும்பத்தோடு முன்னின்று நடத்திய பலருள் உயர்திரு நாஞ்சில் பீற்றர் அவர்களும் ஒருவர். வளாகத்தைத் தூய்மைப்படுத்திக் கொண்டே அனைவருக்கும் பிரியாவிடை அளித்து நின்ற அவரைப் பெருமிதத்துடன் கண்ணுற்றபடியே பிரியா விடை பெறலாயினன் இவனும்!

கண்கவர் காட்சிப் படங்களுக்கு இங்கே சொடுக்குக!

4/16/2010

அமெரிக்கா: சித்திரைத் திருநாள் விழா அழைப்பு

அமெரிக்கத் தலைநகர் வாசிங்டனில், சிறப்பானதொரு சித்திரைத் திருநாள் விழா வருகிற சனிக்கிழமை, ஏப்ரல் 17ம் திகதி மாலை நடைபெற இருக்கிறது. தமிழர்கள் அனைவரும் வந்திருந்து, தமிழரின் பண்பாடு, கலை, இலக்கியம் நயம்படக் கலந்த இத்திருவிழாவினைச் சிறப்பிக்க வேண்டுமாய் வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கம் வேண்டுகோள் விடுத்திருக்கிறது.

White Oak Middle School12201
New Hampshire Ave.
Silver Spring , MD 20904

4:15 4:20
தமிழ்த்தாய் வாழ்த்து

4:20 4:25
ஒன்று யாவர்க்கும் ….. (சிறிய குழந்தைகள்)

4:30 5:30
சிறுவர்களுக்கான மாபெரும் திருக்குறள் போட்டி

5:30 5:35
நடனம்: யாக்கை திரி காதல் சுடர் ஜீவன் …

5:35 5:40
நடனம்: காசு மேலே காசு வந்து கொட்டுகிற நேரம் இது..

5:40 5:45
நடனம்: ஓடி ஓடி விளையாட வாடா..

5:40 6:10 சிறுவர்களுக்கான பாட்டுப் போட்டி

6:10 6.45

தலைவர் உரை
பாலகன் ஆறுமுகசாமி,
தமிழ்ச் சங்கத் தலைவர்

சிறப்புரை
திரு. வி. எஸ். செந்தில் I. A. S
(இந்திய தூதரகம்)

சித்திரைத் திருவிழா
வலைப்பதிவர் பழமைபேசி

தமிழ்ச்சங்கத்தின் இன்றைய செயல்பாடுகள்
கல்பனா மெய்யப்பன், செயலாளர்

தென்றல் முல்லை - அறிவிப்பு
ஆசிரியர்: கோபிநாத்

6:45
சிறுவர்களுக்கானப் பரிசளிப்பு

7:45 7:50
துள்ளல் நடனம் (நினைத்தாலே இனிக்கும் ..)

7:50 7:55
பூமியின் அழகே பரிதியின் சுடரே ….. (ஈழத்துக் கவிஞர் சேரன்)

7:55 8:00
கண்டேன் காதலை .. (திரைப் படப்பாடல்)

8:05 8:10
மதுரையை நினைத்தாலே மனம் குளிர்தம்மா ..

8:10 8:15
கோவிந்தன் குழலோசை ..

8:15 8:20
யாதும் ஊரே யாவரும் கேளிர்
புறநானூற்றுப் பாடல் எண் 192

8:20 8:50 தனித் தமிழில் பேச முடியுமா?

9:00 10:00
கருத்தோடு கூடிய நகைசுவைப் பட்டி மன்றம்

இன்றையத் திரைப்படப் பாடல்களால் தமிழ் வளர்ச்சி அடைகிறதா? அல்லது வீழ்ச்சியடைகிறதா??

10:00 நன்றி நவிலல்


4/15/2010

அமெரிக்கா: வருமானவரிக் கணக்கு சமர்ப்பிக்க இன்றே கடைசி நாள்

மக்களே, வருமான வரிக் கணக்கு சமர்ப்பிக்க இன்றே கடைசி நாள்!

April 15
Tax return due. Your 2009 income tax return is due, unless you file for an extension until Oct. 15.

File for extension. If you want an automatic extension of time to file your 2009 tax return, file Form 4868. Filing the form gives you until Oct. 15 to file your return. To avoid a penalty, however, be sure to pay any tax that is due on April 15.

Individual Retirement Accounts or Roth IRAs. This is the deadline for making contributions to IRAs or Roth IRAs for tax year 2009.

Estimated tax payment. Your first-quarter estimated tax payment for 2010 is due.

State tax returns. If you are required to file a state tax return, it is probably due, but check with your state to be certain. Many states automatically extend the filing time for those who have filed for a federal extension.

Household employers. If you paid cash wages of $1,700 or more in 2009 to a household employee, file Schedule H (Form 1040) with your income tax return and report any employment taxes by April 15.

4/14/2010

4/09/2010

இயற்கையின் பரிதவிப்பில்...

சமீபத்தில் நான் வாசித்துச் சிலிர்த்த எழுத்து என்றால், அது எழுத்தாளர் யாணன் அவர்களுடைய எழுத்துதான். அவர் எழுதிய சவ்வாது மலைத் தொடரை வாசிக்க வாசிக்க, எனது வாழ்க்கையின் பொற்காலம் என்று நான் கருதுகிற மலையும் மலைசார்ந்த என் பால்ய காலம் நினைவில் மோலோங்கியது.

அத்தொடரானது இருநாட்கள் எம்மை வெகுவாகப் பாதித்து, அந்த இரு நாட்களும் இடுகைகள் கூட இடவில்லை. மீண்டும் மீண்டும் என்னவெல்லாமோ எம்முள் வந்து சென்றது. இயற்கை அன்னையின் ஏகோபித்த அரவணைப்பில், பெற்ற அன்னையின் செழுமிய வளர்ப்பில், உற்றார் உறவினரின் கனிவில் வளர்ந்து திரிந்த நாட்கள் அவை. மலைவாழ் மக்கள் அள்ளி அள்ளித் தெளித்த அன்பில், திளைத்த பொழுதுகள் மீண்டும் வந்து நெஞ்சைக் கப்பிக் கொண்டது.

எம்மை அந்நினைவில் தோய்த்துத் தோய்த்து இனிமை கொண்டவன், அந்த இனிய எழுத்தாளரை அழைத்து எம்நினைவுகளைத் தட்டி எழுப்பியமைக்கான பாராட்டுகளைத் தெரிவித்துச் சிலாகிக்கவுமானேன்.

அதிலிருந்து விடுபட்ட ஓரிரு வாரத்திற்குள்ளாகவே, மீண்டும் என்னை நானே இழந்தவனானேன். பூசணிப் புருடையில் இருந்து அன்பாய்த் தேனைப் பகிர்ந்திடும் கரங்களும், மூங்கில் அரிசியில் காய்ச்சிய கஞ்சியைத் தொன்னையில் வார்க்கும் கரங்களும்... கொடிங்கியம், விளாமரத்துப் பட்டி, கரட்டுமடம், மொடக்குப்பட்டி, தளி, ஜல்லிபட்டி எனும் ஊர்களை நான் வலம் வந்த காலத்தில், முயல் மற்றும் கானகத்துப் பறவைகளின் ஊனை ஊட்டிய அம்மக்களை எளிதில் மறந்துவிட முடியுமா என்ன?!

ஆமணக்கு இலையில் ஆசை ஆசையாய் உருட்டி வைக்கும் திணை மற்றும் எள் உருண்டைகளும், வரகுக்களியும், சாமைச் சோறும் எம்முள் இன்னமும் குருதியில் கலந்தே இருக்கின்றன. அதனால்தானோ என்னவோ, நான் கண்டு மெய்மறந்த இக்காணொளியானது எம்முள் மீண்டும் பெரியதொரு தாக்கத்தை ஏற்படுத்தியே இருக்கிறது!




4/08/2010

குதபகாலம்










4/07/2010

பள்ளயம் 04/07/2010

வணக்கம்! பள்ள(ளை)யம் தொடரில், மீண்டும் உங்களை எல்லாம் சந்திப்பதில் பெருமகிழ்வு கொள்கிறேன். பள்ளயம் என்பதின் பொருள் அறிய விழைவோர், எமது இந்த முந்தைய இடுகையினைப் பார்த்துத் தெரிந்து கொள்ளவும்.

----------------------------

அமெரிக்காவுல பொருளாதார நிலைமை முன்னேறின மாதிரி ஒரு தோற்றம் ஏற்பட்டு இருக்கு. அது நிதர்சனமா? அல்லது மாயத் தோற்றமான்னு தெரியலை! நான் இருக்கும் சார்லட் மற்றும் அண்டி இருக்குற பகுதியில வேலையற்றோர் எண்ணிக்கை உயர்ந்து கிட்டத்தட்ட 12% ஆகியிருக்காம். இதுல வேற, வேலையற்றோர் நல உதவி காலாவதி ஆகிப் போச்சுதாம் நிறையப் பேருக்கு.

பங்குச் சந்தை நிலவரம் பொருளாதாரததைப் பிரதிபலிக்கும் குறியீட்டுமானியா? இந்தியாவுல பண வீக்கம், இங்க அமெரிக்க வெள்ளியோட மதிப்போ கீழ்வரம்... ஒன்னும் புரியலை போங்க!

----------------------------

நாம அடிக்கடி போறது வர்றது எல்லாமே U.S.Airwaysலதானுங்க. நெம்ப நாளாவே அது குத்துசுரும், குலைவுசுருமாத்தான் இழுத்திட்டு இருக்கு. பொசுக்குன்னு பொழிஞ்சு போயிட்டேன்னு மஞ்சக் கடுதாசி குடுத்தான்... போச்சு, என்னோட பேர்ல இருக்குற இலட்சக்கணக்கான மைலுக கோவிந்தா ஆயிடும்... அப்பப்ப இது நல்லபடியா இருக்கோணுமின்னு நினைச்சுக்கிறது உண்டு.

U.S.Airwaysம் United Airlinesம் ஒன்னுகூடறதுக்கு மறுபடியும் பேச்சுவார்த்தை நடக்காம். யெப்பா, சாமி... கொஞ்சம் ஒன்னுகூடுங்க... நிறைய வேலை வாய்ப்புகளை உண்டாக்குங்க... ஒன்னுகூடுறது உங்களுக்கும் நல்லது... உங்களுக்கு வேலை பாக்குறவுங்களுக்கும் நல்லது... எனக்கும் நல்லது!

----------------------------

சீன அரசாங்கம், அந்த நாட்டு தொலைக்காட்சி, வானொலிகள்ல ஆங்கிலப் பதங்களையும் சுருக்காங்களையும் பாவிக்கத் தடை விதிச்சு இருக்காம். அங்க செயல்பட்டுட்டு இருக்குற தமிழ் வானொலி மற்றும் இன்னபிற ஊடகங்களுக்கும் இது பொருந்துமாம். ஏம்ப்பா, சீனாவுலயே தமிழ் மொழியில ஆங்கிலக் கலப்பு இல்லன்னு ஆகுறப்ப, தமிழ்நாட்டுல? இஃகிஃகி!!

----------------------------

மக்களே, வர்ற 04/11 ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் நான்கு மணிக்கு ச்சட்டனூகா, டென்னசியில என்ன? பதிவர் சந்திப்புதான்! இஃகிஃகி!! அதனால நேஷ்வில், கூடவே அலபாமா ப்ரம்மிங்காம் பக்கத்துல இருக்குற மக்கள் எல்லாம் வந்து கலந்துக்குங்கப்பு... இடம்: Marriott Residence Inn, 215 Chestnut Street, Chattanooga, TN. மேலதிகத் தகவலுக்கு எனக்கு ஒரு மின்னஞ்சலைத் தட்டுங்க!!

----------------------------



----------------------------
(எழுத்து)அறிவுள்ளவன் எழுத்தாளன்!
அறிவும் திறமும் கொண்டவன் படைப்பாளன்!!
அறிவுடன் கூடிய திறமும், ஆளுமையும் கொண்டவன் முன்னோடி!
அறிவு, திறம், அறமுடன் கூடிய ஆளுமையும் கொண்டவன் தலைவன்!!


இது யார் சொன்னது? உடனே, பெரிய அளவுல யோசிச்சு இருப்பீங்களே? அரிஸ்டாட்டில், சேக்சுபியர் அளவுக்கு... இப்படி யாராவது பெரிய தலையச் சொன்னா நம்புவாங்க... நானே சொந்தமா சிந்திச்சு சொன்னதுன்னா, நம்பவா போறாங்க?! இஃகி!

4/06/2010

நயமான மொக்கை!

சண்டமாருதம்

நீர் பெரிய சண்டமாருதமோ?
அடிச்சிக் காலி செய்திடுவீரோ??
இரைச்சல் இட்டவனைப்
பெருஞ்சத்தம் எதுவுமின்றி
குண்டுக் கட்டாய்க் கட்டி
தூக்கிக் கொண்டு போய்
இருத்தினான்
மாதா கோயிலடியில!
மறுகணமே
அவனிருந்த வீடு பறக்க
வளைந்தடித்தது
ஏசப்படாத
சண்டமாருதம்!!

சுயமுரண்

நயமான மொக்கை
மழுங்கிய கூர்வாள்
தொலைந்த கண்டுபிடிப்பு
உண்மையான பொய்
பெரியார் பூசனை
நீண்ட சிறுகதை
உண்மைக் கதை
ஏழை அமைச்சர்
கருத்தொற்றுமைமிகு பதிவர்கள்
சிங்காரச் சென்னை?!

(மூலம்: மின்தமிழ்க் குழுமம்)

4/05/2010

யாக்கை!

யாங்கெங்கிலும்
யார் யாருக்கோ
யார் யாரையோ
யாதோவொன்றால்
யாத்திருக்கிறது!

அண்ட வெளியில்
உமக்கும்
யார் யாரையோ
யாண்டெங்கிருப்பினும்
யாதோவொன்றால்
யாமென
யாத்திருக்கும்!!

நின்னையும்
யார் யாருக்கோ
யாதெனக் கேளாது
உம்மிலும் யாமளமாய்
யாத்தேயிருக்கும்
தொடர்ந்து செல்
யாங்ஙனமென வினவாது
யவனமே உவணமென!!!

4/04/2010

அறச்சீற்றம்!

பிற்பகல் மணி நான்கு அல்லது நாலரை இருக்கும். மனம் எதிலுமே நாட்டம் கொள்ளவில்லை. ஏற்காட்டுக் குளிரை அனுபவிக்க ஆசை ஆசையாய்க் கூட்டி வந்த ஆசை நாயகியை, புறப்பாட்டுச் சமிக்கை ஊதிய பிறகும் இரயில நிலையத்தில் காணாத கட்சித் தலைவனைப் போல இருப்பற்று அலைந்து கொண்டிருந்தது மனம்.

தொலைக்காட்சியில் இரஞ்சிதாக் காட்சிகள் ஓடியும், குழந்தைகள் அருகிலே இருப்பது கண்டு காணக் கொடுத்து வைக்க முடியாமையை எண்ணிக் குமுறுவதைப் போல தேகத்துக்குள் ஒரு ஊமைக் குமுறலானது, வெளியே தெரியாதபடி ஆர்ப்பாட்டம் செய்து கொண்டு இருந்தது.


ஒரு இடத்தில் அமர்ந்து பார்ப்போமென இருக்கையில் இருத்திப் பார்த்ததுதான் தாமதம், தவழ்ந்து வந்து கரையை நெருங்கியதும் சீறும் கடலலையைப் போல, வலியெனும் மின்னலைகள் மண்டையின் மையப் பகுதியில் இருந்து வெளிப்புறமாக நகர்ந்து இடித்ததில், கண்களும் கண்களை அண்டிய பகுதியும் தாக்குண்டது.

இது வேலைக்காவாது என நினைத்த மாத்திரத்தில், முன் முற்றத்தில் உலாவுதல்; உலாவும் பொருட்டு இரண்டு அடிகள் கூட வைத்திருக்கவில்லை கழல்கள். புதுடெல்லி இராஸ்டிரபதி பவனில் இருந்து, சென்னை சாஸ்திரி பவனுக்கு வந்த கட்டளையைப் போல, அவ்வளவொரு துரித கதியில் அவசரக் கட்டளை எப்படி நிகழ்ந்தது என்றே தெரியவில்லை.

முன்முற்றத்தில் இருந்த மானுடல், மின்னல் வேகத்தில் எட்ட இருக்கும் குளியலறைக்கு இடம் பெயர்ந்தது. அது எப்படி சாத்தியமானது? உடலில் இருக்கும் மூலக்கூறுகளை எல்லாம் மின்னணுக்களாக மாற்றி, அதைச் செல்ல வேண்டிய இடத்திற்கு மின்னூடகத்தின் வழியாகச் செலுத்தி, அடைய வேண்டிய இடத்தில் வைத்து மீண்டும் மறு உருவாக்கம் செய்து இருப்பார்களோ? ஆம், மானுடல் குளியலறைக்கு எப்படிச் சென்றதென்றே தெரியவில்லை.

கட்சியில் தலைவனின் தலைமைக்கு ஒரு பிரச்சினை என்றவுடன் கிராம நகரத் தளபதிகள் எல்லாம் கிளம்பி, தலைவனும் தலைமையும் இருக்கும் தலைநகரத்தை ஆட்கொள்வதைப் போல, உடலில் திசுக்கள் இருக்கும் எல்லாவிடத்தும் வெளிப்படும் சக்தியானது, குறிப்பிட்ட அந்த இடத்தின் திசுக்களுக்கு முன்னேறிச் சென்று ஒன்று கூடியது.

கால்கள் இரண்டும் மடங்கியபடி, கைகள் இரண்டும் தரையில் முன்னூன்றியபடி! கால்களுக்கும் கைகளுக்கும் இடையில் தேகத்தின் மையப்பகுதி தொங்கிக் கொண்டு இருக்கிறது நுணலைப் போல.

ஆத்மாவையும் மீறிய ஒருவன் இந்த உடலில் இருப்பானோ? ஒருவேளை அவன்தான், புறநானூற்றில் சங்கொலி எழுப்பித் தலைவன் படைவீரர்களுக்குச் சமிக்கை அளிப்பதைப் போல, Ready, Set, Goவென சமிக்கையை அளித்திருப்பானோ?

உடலெங்கும் வியாபித்திருக்கும் திசுக்களில் இருந்து வந்து குழுமிய சக்தியனைத்தும், அக்குறிப்பிட்ட இடத்தின் திசுக்களை இறுக்கிச் சீறியது. ஏ அப்பா? என்ன வலுவான சக்தியது?? பூமா தேவியின் ஈர்ப்பு சக்தியையும் மீறிச் செலுத்துகிற சக்தியல்லவா அது?! தன் வீரியம் அனைத்தையும் ஒருங்கே வெளியிட்டு வென்று காட்டியது.

ஒரே ஒரு முறைதான், ‘உவ்வே!’. தேகம் விடுதலை அடைந்து, பரிபூர்ண விடுதலைக் காற்றை அனுபவிக்கத் துவங்கியது. கட்சி மாநாட்டுக்குக் குழுமிய தொண்டர் எல்லாம், தத்தம் தலைவனின் உருட்டு மிரட்டுச் சீற்றத்தைக் கண்டபின் தத்தம் ஊர்களுக்குத் திரும்புவதைப் போல, உணர்வானது உடலின் எல்லாப் பாகங்களுக்கும் விரவிப் படர்ந்து கொண்டிருந்தது.

ஆகா... ஆகா... விடுதலை, விடுதலை, விடுதலை! மகிழ்ச்சி, மகிழ்ச்சி, மகிழ்ச்சி!! ஆனந்தப் பள்ளு பாடியது மானுடல்!!! சக்தியைத் திரட்டிய திசுக்களெல்லாம் ஓய்வு கோரியிருக்க வேண்டும். நித்திரை தேவன், மானுடலை சயனத்தில் ஆழ்த்த, அதன் பொருட்டுக் கண்கள் சொருக, மானுடம் நிசப்தம் கூடிய அமைதியின் ஆழ்கடலில் இன்ப இலயிப்பினூடாக!

4/03/2010

அமெரிக்கப் பதிவுலகில் போட்டி, அந்தப் பதிவர் யார்?!

அன்புத் தமிழ் நெஞ்சங்களே, வலைஞர்களே,

வணக்கம்! சென்ற ஆண்டு அட்லாண்டாவில் உணர்வு கொள்வோம் உரிமை காப்போம் என ஆர்ப்பரித்த செந்தமிழர் கூட்டம், இவ்வாண்டு கனெக்டிகெட் மாகாணம் வாட்டர்பெரியில் கூடி, செந்தமிழால் சேர்ந்திணைவோம், செயல்பட்டே இனம் காப்போம் என முழக்கமிட ஆயத்தமாகிக் கொண்டு இருக்கிறார்கள் என்பதைப் பெருமகிழ்ச்சியோடு பகிர்ந்து கொள்கிறேன்.

சென்ற ஆண்டு, நேரிடை வர்ணனையளிக்கும் பொருட்டுத் தனியொருவனாகக் களத்தில் நின்று எம்மால் முடிந்ததைச் செய்தோம். இவ்வாண்டு, பல வலைஞர்கள், பல்லூடகப் பரிமாணங்களோடு களம் புகக் காத்திருக்கிறார்கள். அவர்களுள் அசத்தப் போவது யார்? எனும் ஆவல், நாளுக்கு நாள் மேலோங்கிய வண்ணம் உள்ளது. அவர்களுக்கு நிகராகப் போட்டி இட முடியாவிட்டாலும், என்னால் ஆனதைச் செய்து, போட்டியில் பங்கு பெற நானும் ஆயத்தம்தான்!

வலையுலகைப் பொறுத்த மட்டிலும், நான் இன்னமும் கடைப்பதிவனே! முன்னோடிகள் பலர், அதுவும் விழா நடைபெறப் போகிற இடத்திற்கு அருகண்மையில் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எவ்வழியோ, அவ்வழியே நாமும்! சங்கம் வைத்துப் பதிவுலகை வளர்ப்பார்களா? அல்லது, விழாவின் ஒரு அங்கமாக வலைஞர் சந்திப்பை மாத்திரமே நடத்துவார்களா?? அத்துனையும் அவர்களைச் சார்ந்ததே! இஃகிஃகி!!

தமிழ்விழா குறித்தான நறுக்கு வெளியாகி இருக்கிறது. மற்றும் விழாவிலே இடம் பெறப் போகும் இலக்கிய வினாடி வினா மற்றும் கவியரங்கம் ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள், எனது மின்னஞ்சல் வழியாகத் தொடர்பு கொள்ள வேண்டுகிறேன்!

தமிழ்விழா குறித்த நறுக்கு

"செந்தமிழால் சேர்ந்திணைவோம்,
செயல்பட்டே இனம் காப்போம்!"

பணிவுடன்,
பழமைபேசி.