8/31/2008

மூணாம் விழுது! படியுங்கள்!!

"விண்ணூர்"னா எல்லார்த்துக்கும் ஞாபகம் வர்றது, ஊரோரம் இருக்குற ஊர் ஆலமரம். யாரையாவது வீட்ல போயிக் கேக்கும்போது, அந்த ஆள் வீட்ல இல்லைன்னா, போயி ஊர் ஆலமரத்துல பாருங்கன்னுதான் பதிலு வரும். அந்த மரம், பத்து தலைக்கட்டுக்கு மேல பாத்து இருக்கும். மரத்துக்கு நடுவாப்புல இருக்குறது பிரதான மரம். அதை "பெரிய மரம்"னு சொல்லுவாங்க.

பெரிய மரத்தைச் சுத்தி நெலத்துல பதிஞ்சது மூணு விழுதுக. பதியாதது நெறைய. மொத்தமா ஒரு பத்து பதினஞ்சு இருக்கும். மரத்துல நெறைய பச்சைக் கிளிகளும் குருவிகளும், குயில்களும், காக்கா கூட்டமும் கூடு கட்டி இருக்கும். எப்பவும் ஓகோன்னு களை கட்டி இருக்கும். இந்த பெரிய மரத்தை சுத்தித்தான் ஊர்ப் பொம்பளைங்க ஒக்காந்து எதனாச்சும் ஊர்ப்பழமை பேசிட்டு இருப்பாங்க. காட்டுக்கு களை வெட்டப் போறவங்க காலைல இங்கதான் ஒண்ணு கூடி, அப்புறம் ஒண்ணாப் போவாங்க. கொழந்தைக்கு சாப்பாடு ஊட்டுற பொம்பளைங்களும் பெரிய மரத்தடியில இருப்பாங்க. சமயத்துல, "அவ இவங்கூடப் போனான். இவ அவங்கூடப் போனா"ங்கிற கதைக எல்லாம் ஓடிட்டு இருக்கும், பெரிய மரத்துல. "ஏண்டி நீ பெரிய மரத்தடில வச்சி, அப்படி சொன்னியாமே"ன்னு கேட்டு சண்டை எல்லாம் போடுவாங்க.

நெலத்துல பதிஞ்சு இருந்த முதலாவது விழுது, அந்த மேட்டைத் தாண்டி விநாயகங்கோயில் மூலைல இருக்கும். அதுக்குப் பக்கத்துலதான் அந்த வட்டப்பாறை தரையில பாதியும் வெளியில பாதியும் தெரியுற மாதிரி கெடக்கும். பாறைக்கு நடுப்புல மூணுகல் வெளையாட்டு (ஆடு புலி ஆட்டம்) வெளையாடுறதுக்கு உண்டான வரிக செதுக்கி இருக்கும். எந்நேரமும் வயசானவிங்க ரெண்டு பேர் உக்காந்து வெளையாடிட்டு இருப்பாங்க. அந்த ரெண்டு பேர்த்த சுத்தி மத்த பெரியவிங்க உக்காந்து, ஆடுற வெளையாட்டை வேடிக்கை பாத்துட்டு இருப்பாங்க. பாறையச் சுத்தி, ஒரே வெத்தலை பாக்கு எச்சையா இருக்கும். பெரியவிங்க இருக்குற எடம் ஆச்சே!

அந்த ரெண்டாவது விழுது, கடைசியா நெலத்துல பதிஞ்சது. சுத்துப்புறம் சின்ன அளவுல இருக்கும். தெக்கால போற இட்டேரி, இந்த விழுதுக்குத் தொட்டாப்புல இருக்கும். அப்புறம், இதைச்சுத்தி நெலத்துல பதியாத விழுதுக நாலஞ்சு, தரையில இருந்து கொஞ்சமா மேல தூக்குனாப்புல இருக்கும். சின்ன வயசுக் கொழந்தைக, ஆம்பளைப்பசங்களும் பொம்பளைப் புள்ளைகளுமா ஒண்ணு சேந்து தூரி கட்டி வெளையாடுவாங்க. சில நேரங்கள்ல சுத்திச் சுத்தி வெளையாடுவாங்க. வாண்டுக அவுக வயசுக்கு, அவுக வெளையாட்டை வெளையாடிட்டு இருப்பாங்க. நெறைய நேரங்கள்ல அண்ணனோ, அப்பிச்சியோ மரத்தடியில, வேற விழுதடியில இருப்பாங்க. இல்லைன்னா அம்மாவோ ஆத்தாவோ பெரிய மரத்தடியில இருப்பாங்க.

மூணாவது விழுது, கொஞ்சம் மேட்ல இருந்து கீழ்ப்பொறமா, காணவேடாங் கோயில் மூலைல இருக்கும். அந்த விழுது கொஞ்சம் கெழக்குப்பாத்த மாதிரி இருக்கும். அதனால வெயில் நெறைய நேரம் அங்க விழுகும். அதனால பெரிய வயசுப் பசங்க மட்டுந்தான் அந்த விழுதுப் பக்கம் ஒக்காந்து எதென்னாச்சும் பேசி சிரிச்சுட்டு இருப்பாங்க. காலைல ஆறு மணிக்கெல்லாம் ஊருப் பசங்க இங்க வந்துருவாங்க. ஆறு மணியில இருந்து வரப் போக. இப்படி இராத்திரி ஏழு மணி வரைக்கும் அந்த விழுதுல கூட்டம் இருந்துட்டே இருக்கும். வயசுப் பசங்க கூடுற எடம்ங்றதுனால, சுத்தி ஒரே துண்டு பீடிகளாக் கெடக்கும். சமயத்துல குடிக்கறதுக்கு பீடி இல்லைனா, கீழ கெடக்குற துண்டு பீடிகள்ல இருக்குற, பெரிய துண்டு பீடி எடுத்தும் குடிப்பாங்க.

இந்த மூணாவது விழுதுல வெச்சித்தான் கோயிந்தனுக்கும் மயில்சாமிக்கும் பழக்கம். ரெண்டு பேரும் ஒரே பீடியக் குடிப்பாங்க. ஒண்ணா சேந்து, கணேசங் கடைக்கு டீ குடிக்கப் போவாங்க. இப்படியே ரெண்டு பேரும் சேந்து வாழ்க்கைய ஓட்டிகிட்டு இருந்தாங்க. கூலி வேலைக்குப் போய்ட்டு இருந்த
இவிங்களுக்கு அதுல நாட்டம் கொறைஞ்சு போச்சு.

"டேய் மயிலு, எத்தன நாளைக்குடா இப்பிடி வெயில்லயும் மழைலயும் கெடந்து சாவறது?"

"ஆமாடா, நானும் அதையேதான் யோசனை பண்ணிட்டு இருந்தேன். என்னடா பண்ணுறது? ஊட்ல வேற, சின்ன அம்மினி வயசுக்கு வந்துட்டா. சீக்கிரம், நாலு காசு சம்பாதிக்கனும்டா."

"சரியாச் சொன்ன! தனலச்சுமி அக்கா காளியம்மன் கோயிலுக்கு பக்கத்துல டீக்கடை வெக்க சொல்லுது!!"

இப்படி ஆரம்பிச்ச இவிங்க, ஊருக்குள்ள ஒரு டீக்கடை சேந்தே போட்டாங்க. கணேசங் கடைக்கும் இவிங்க கடைக்கும் மைல் தூரம் இருக்கும். அதனால காளியம்மன் கோயில் பக்கத்துல இருக்குறவங்க, டீ கடைக்குப் போகாமயே இருந்தாங்க, இத்தினி நாளும். இப்ப இவிங்க கடை வந்ததுக்கு அப்புறம், எல்லாரும் இவிங்க கடைக்கு வர ஆரம்பிச்சுட்டாங்க. கோயிந்தனும் மயில்சாமியும் ஒத்துமையா கடை நடத்திக் காசு பாக்க ஆரம்பிச்சாங்க. ரெண்டு பேரும், வீட்ல இருந்த அக்கா தங்கச்சிக்கு கண்ணாலம் பண்ணி வெச்சி, ஆளுக்கு ஒரு வீட்டையும் கட்டி, அவிங்களும் கண்ணாலம் கட்டி, ரெண்டு பேர்த்துக்கும் ஆளுக்கு ஒரு பையன், ஒரு பொண்ணு.

மயிலு கல்லாவுல இருந்தா கோயிந்தன் அடுப்படியிலயோ, மேல் வேலையாவோ இருப்பான். கோயிந்தன் கல்லாவுல இருந்தா, மயிலு வேற வேலை பாத்துட்டு இருப்பான். இப்படி ரொம்ப நல்லா, யாவாரம் போய்ட்டு இருந்துச்சு.

இந்த நேரத்துல இருவது வருசமா நடக்காத கிராமசபைத் தேர்தல் வந்துச்சு. ரெண்டு பேர் தலைவர் பதவிக்கு போட்டி போட்டாங்க. ஒருத்தர் அருணாசலம். அடுத்தவர் சண்முகம். ரெண்டு பேரும் வேற வேற சாதி. கிட்டத்தட்ட சம பலம் இருக்குறவங்க. தேர்தல்னா வேற என்ன? வசூல் தான்! அருணாசலம் கச்சி ஆளுங்க, காளியம்மங் கோயில் டீக்கடைக்கு வர்றாங்க.

"டே மயிலு, கடை எல்லாம் நல்லாப் போகுதா? நீங்க எல்லாம் நல்லா இருக்கணும்டா. கடையச்சுத்தி இருக்குறது நம்ம சாதி சனம். அவிங்க இல்லாட்டி, இந்த பத்து வருசமா உங்க யாவாரம் நடந்து இருக்குமாடா?"

"நீங்க சொல்லுறது சரிதானுங்க! ஆனா, கோயிந்தன் வெளில போயிருக்குறான்..............."

"என்னடா இழுக்குற?.... நீ என்ன இருந்தாலும் நம்ம சாதிப்பய புள்ள.... கடைய சுத்தி இருக்குறது நம்ம பசங்க......"

யோசிச்சு பாத்த மயிலு, கடை நல்லா நடக்கணுமின்னு, படக்குனு ஒரு ஆயிரம் ரூவா எடுத்துக் குடுக்க, வந்த கூட்டம் வாங்கிட்டுப் போயிருச்சு.

அதே நேரம், கோயிந்தன் வாழை எலக்கட்டு எடுக்க, சண்முகத்தோட பங்காளியோட வாழைத் தோப்புக்கு எப்பவும் போல போயிருந்தான். போன எடத்துல,

"கோயிந்தா, வாடா, வா வா! உங்கிட்ட நாங்களே வரணும்னு இருந்தோம்!!"

"என்ன சித்தப்பா, ஏதாவது பாக்கி இருக்கா? நான், கணக்கு வழக்கு எல்லாம் சின்னாம்மாகிட்ட போனவாரம் சரி பண்ணி, மிச்சம் இருந்த ஆயிரத்து முந்நூறு ரூவாயக் குடுத்துட்டனே?!"

"அது இல்லடா.... அது நீ எப்ப வேணாலும் குடுக்கலாம். நீ நம்ம பய! அண்ணன், தலைவருக்கு நிக்குது பாரு. அதாண்டா, உங்கடைக்கு ஆயிரத்து எண்ணூறுன்னு இரசீது போட்டு வெச்சு இருக்கேன்!!"

"சித்தப்பா, கடைல மயிலு இருப்பான். அவன்கிட்ட......."

"என்னடா இழுக்குற? நீ நம்ம பயன்னு எலக்கட்டு, வாழைத்தார், கடைக்கு வேணுங்ற வெறகு எல்லாத்தையும் சகாய வெலைல, நீங்க கடை வெச்ச நாள்ல இருந்து தந்துகிட்டு இருக்கோம். நாஞ்சொல்லுறது சரியா இல்லையா? அப்ப, இனி சந்தை வெலைக்கே........"

யோசிச்சு பாத்த கோயிந்தன், கடை யாவாரம் நல்லா எப்பவும் போல இருக்கணுமின்னு, "பட"க்குனு கேட்டதை விட இருநூறு ரூவா அதிகமா, ரெண்டாயிரம் எடுத்துக் குடுத்துட்டு, எலக்கட்டையும் எடுத்துட்டு வந்து, கடை வேலையப் பாக்க ஆரம்பிச்சுட்டான் வழக்கம் போல.....

வசூல் செஞ்ச கச்சிக்காரங்க சும்மா இருப்பாங்களா? வசூல் தொகைய ஒலி பெருக்கியில சொல்ல, அங்கதான் ஆரம்பிச்சது பிரச்னை. ஆனா, மயிலுவுக்கும் கோயிந்தனுக்கும் இதைக் கேக்க எங்க இருக்குது நேரம்.....

ஆலமரத்தடியில வெளையாடுனது அந்தக்காலம். சின்னப் பசங்க கிராமசபை அலுவலக வளாகத்துல தொலைக்காட்சி முன்னாடி இருக்குறது இந்தக் காலம். அங்க இருந்த பசங்க, கோயிந்தன் மகன்கிட்டயும், மயிலு மகன்கிட்டயும் வசூல் விசயத்த எடுத்துச் சொல்லி ஒண்ணுக்கு ரெண்டா போட்டுக் குடுக்க , விபரம் போச்சு மயிலு பொண்டாட்டி சிவகாமி கிட்டயும், கோயிந்தன் பொண்டாட்டி வேலுமணிகிட்டயும்.

அடுத்த நிமுசத்துலயே கடை முன்னாடி,

"நான் எப்படி பணம் கொறச்சலாக் குடுத்துட்டு, என்னோட சாதி சனத்தோட பொழங்க முடியும்? கூட இருந்து, அவிங்க புத்தியக் காமிச்சுட்டாக! " ன்னு, மயிலு பொண்டாட்டி சிவகாமி.

"எச்சாக் குடுத்ததுல என்ன தப்பு? எஞ்சாதியோட சகாயம் மட்டும் வேணும்... காசு ரெண்டு சேத்திக் குடுக்கக் கூடாதோ?"ன்னு, சிவகாமியோட சத்தம் கேட்டு ஓடியாந்த, கோயிந்தன் பொண்டாட்டி வேலுமணி.

நிமுச நேரத்துல, கோயிந்தனும் மயிலுவும் விசயம் என்னன்னு தெரிஞ்சுக்குறதுக்குள்ள எல்லாம் நடந்து முடிஞ்சுருச்சு. அப்புறம் என்ன, இருந்த கடை மயிலுவுக்கு! எதுத்தாப்புலயே புதுக் கடை ஒண்ணு, கோயிந்தனுக்கு. இட்லி தோசை போடுறவன் மயிலுகிட்ட, சட்னி சாம்பார் செய்யுறவன் கோயிந்தன்கிட்ட. டீ போடுறவன் மயிலுகிட்ட, வடை போண்டா போடுறவன் கோயிந்தன்கிட்ட. ஊர் சனத்துல பாதிப்பேரு பட்டணம் போயித்தான் இட்லி வடை சாப்புடறது இப்ப. மிச்சம் இருக்குறதுல பாதிப்பேர் மயிலு கடைக்கு, மிச்சம் இருக்குறவங்க கோயிந்தன் கடைக்கு. யாவாரம் வெளங்குமா?

மொதல்ல மயிலு குடும்பம் தெருவுக்கு வந்துச்சு. கடன், குடும்ப பாரம்னு மனசு ஒடஞ்சு போன மயிலு நெஞ்சு வலின்னு படுத்தவன் எந்திரிக்கவே இல்ல. அப்படியே பாடைல வடக்க போய்ச் சேந்துட்டான். போய்ச் சேந்து மாசம் ஆறு ஆவுது.


இங்க கோயிந்தனுக்கு ஓரளவு பரவாயில்ல. பையன் பட்டணத்துல படிக்குறான். ஆனாலும், இவனுக்கு எப்பவும் மயிலு நெனப்பு தான். சரின்னுட்டு, ஒரு மன அமைதிக்காக ஆலமரத்தடியில சித்த இருந்துட்டு வரலாம்னு போறான். எந்த மூணாவது விழுதுல மயிலுகோட பழக்கத்தை ஆரம்பிச்சானோ, அங்க சித்த இருந்துட்டு வரலாம்னு போறான். இவன் அந்தப் பக்கம் போயி ரொம்ப நாளாச்சு. ஆனா, இன்னைக்குப் போறான்......

போனா, அங்க அந்த மூணாவது விழுதை எடுத்துட்டு, ஊர் சனங்க தொலைக்காட்சி பாக்குறதுக்குன்னு புதுக்கட்டடம் ஒண்ணு ஆயிட்டு இருக்கு. அதப் பாத்த கோயிந்தனுக்கு, நெஞ்சு லேசாக் கட்டுனா மாதிரி இருந்தது. சரின்ட்டு, பெருசுக வெளயாடிட்டு இருந்த வட்டப் பாறைல ஒக்காரலாம்னு முதலாவது விழுதுக்குப் போறான். அங்க பாத்தா, கட்டடம் கட்டுறதுக்கு கல் வேணும்னு வட்டப் பாறையயும் தோண்டிப்புட்டாங்க. அந்தக் காட்சியப் பாத்த அவன், அந்த இடத்துல அந்த விநாடி மயிலுகிட்டயே போயிச் சேந்துட்டான்.

சாதி வெறியும், வளர்ச்சிங்கிற போர்வைல நடக்குற இறையாண்மைத் திருட்டுஞ்சேந்து, மயிலு, கோயிந்தன், வட்டப்பாறை, தன்னோட புள்ளை மூணாம் விழுதுன்னு எல்லார்த்தையும் போட்டுத் தள்ளின சோகத்துல, இப்பவும் அழுதுட்டு இருக்கு நம்ப ஊர் ஆலமரம்.


சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் -மேதினியில்
இட்டார் பெரியோர் இடாதார்இழி குலத்தோர்
பட்டாங்கில் உள்ள படி!

8/30/2008

கவி காளமேகத்தின் தாக்கம் - 7

வாவா பாடுபா மாயாநீ,
நீயாமா பாடுபா வாவா!

வணக்கம்! ஒரு ரெண்டு மூணு நாளா, நாம தொடர்ந்து எழுதிட்டு வர்ற "கவி காளமேகத்தின் தாக்கம்' ங்ற தொடர் பதிவு நின்னு போச்சு. கால அவகாசம் கிடைக்க மாட்டேங்குது வாழ்க்கைல. என்ன செய்ய? சரி விசயத்துக்கு வருவோம். எப்பவும் சொல்லுறதுதான், இதுக்கு முந்தைய பதிவுகளைப் படிச்சுட்டு, இதைப் படிச்சா மேலும் பயனுள்ளதா இருக்கும்ங்றது என்னோட தாழ்மையான எண்ணம். படிச்சிட்டீங்கன்னா மேல படியுங்க.

சித்திரக்கவி வகைல நாம அடுத்து பாக்கப் போறது மாலை மாற்று! "ஒரு செய்யுள் முதல், ஈறு உரைக்கினும், அஃதாய் வருவதை மாலை மாற்றென மொழி!". அதாவது கடைசி எழுத்துல இருந்து திரும்பி படிச்சாலும் அதே பாட்டு வரணும். அதாவது மணி மாலையை இட வலமாப் போட்டாலும், வல இடமா மாத்திப் போட்டாலும் ஒரே மாதிரி இருக்கு இல்லீங்களா? அது மாதிரிதான் இதுவும். இட-வலம், வல-இடம்னு எப்படிப் படிச்சாலும் ஒரே பாட்டு வரும். வழக்கம் போல எம்மோட செல்ல மகளை மனசுல இருத்தி, மாலை மாற்று அடிப்படைல எழுதினதுதான், மேல சொன்ன பாட்டு.

பொழிப்புரை:
வா - வருவாய்
பாடு - பாடு
பா - பாட்டு
மா - சிறப்பு
ஆயா - காப்பவள்
நீ - நீயே
நீ - நீ
யாம் - யாங்கள்
மா - மேன் நிலை
பாடு - பாடு
பா - அழகு
வா - வருவாய்

கருத்துரை: எங்கள் சிறப்பே, பாடல் பாட வருவாய் நீ, நாங்கள் மேன்மை அடைவதற்குப் பாட, அழகாய் வா! வா!!

இந்த வகைல பெரியவங்க அவங்க காலத்துல, பெரிய அளவுல பாடி இருக்காங்க. அதுல இருந்து உங்க கவனத்துக்கு ஒண்ணு:

காலேமேலே காணீகா ழீகாலேமா லேமேபூ
பூமேலேமா லேகாழீ காணீகாலே மேலேகா!

காலேமேலே = முதலும் முடிவுமாக இருப்பவனே
கானீஈ = செல்வமாக விளங்குபவனே
காஅழீ = காழிப்பதியில் உள்ளவனே
மாலே = மயக்கம் செய்பவனே
மேபூ = மேன்மையுடன் பூத்த
பூமேலே = தாமரையின் மேலே வீற்றிருக்கும்
மாலே = திருமாலும்
காலேமேலே = திருவடியையும் திருமுடியையும்
காண் நீ காழி = காண்பதை நீக்கிய உறுதிப்பாடு உடையவனே
கா = காத்தருள்க

(.........இன்னும் வரும்........)

8/29/2008

உங்கள் கவனத்திற்கு: பிரிவு - 508

இன்றைக்கு சற்று மாறுதலாக ஒன்றைப் பதிவிடலாம் என்று எண்ணிய போது, சட்டென்று நினைவுக்கு வந்தது நான் சமீபத்தில் தெரிந்து கொண்ட ஐக்கிய அமெரிக்க மாகாணங்க(U.S.A)ளின் மைய அரசு, சட்டப் பிரிவு-508. எதிர்வரும் காலங்களில் இந்தப் பிரிவுக்கு படியும்(compliance )படியாக மென்பொருள் மற்றும் பாவிப்பான்(application)களை மாற்றும் பணி என்பது மேலோங்கி இருக்கும் என எதிர்பார்க்கிறேன். மென்பொருள் கட்டமைப்பாளன் என்கிற முறையில் யானும் நேரடியாகப் பாதிக்கப்பட்டு இருக்கிறேன்.

சரி, பிரிவு-508 என்ன சொல்கிறது? எந்தவொரு கணினிக் கையாள்கையையும் பார்வையற்றவர் மற்றும் கண் கோளாறு உடையவர்களும் செய்யக் கூடிய வகையில் இருக்க வேண்டுமென்பதே அது. இந்த இடத்தில் உங்களுக்கு கேள்வி எழலாம், எப்படி கண் பார்வை அற்றவர் கணினித் திரையை முதலில் பார்க்க இயலும் என்று. உங்கள் கேள்வி நியாயமானதே!

ஆனால் கண்பார்வை அற்றவருக்கும் கணினிக்கும் இடைமுகப்பாக(interface) இயங்கும் உபகரணங்கள், கண்பார்வை அற்றவருக்கும் கணினிக்கும் ஒலி வடிவத்தில் தொடர்பை உண்டாக்கி, எல்லா வேலைகளையும் செய்ய வல்லது. இதனூடாக இன்றைக்கு, ஏராளமான கண்பார்வை அற்றோர் பயன் அடைந்து வருகிறார்கள். ஆகவே, கணினியும் கணினியில் உள்ள மென்பொருள் பாவிப்பான்களும் இந்த உபகரணங்களுக்கும், ஏன் பார்வை உடையவர்களுக்கே கூட திரையில் இருக்கும் அத்துனை ஒளி வடிவங்களையும் துல்லியமாகவும், ஒரே மாதிரியாகப் புரிந்து கொள்ளும் வகையிலும் காண்பிக்க வேண்டும். அது தான் பிரிவு-508.

இதன்படி வில்லைகள்(buttons), படங்கள்(images), தொடுப்பு(links)கள் முதலானவை, எழுத்தால் ஆன விளக்கங்களை உடன்கொண்டு இருக்க வேண்டும். அப்படி இருக்கிற பட்சத்தில், இதை இடைமுகப்பு(interfaces)கள், திரை(screen)யில் இருப்பவற்றை ஒலி வடிவத்தில் மாற்றி, பார்வை அற்றவருக்கு தகவலைப் பரிமாற முடியும். இதன் பொருட்டு வலை(web)யகம், உலாவி(browser), மின்வெளி(cyber) தொடர்பான அமைப்புகள் ஒன்று கூடி பிரிவு-508'க்குப் படிய(comply)ச் செய்யும் வகையிலான மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது. மேலும், மென்பொருள் தயாரிப்பாளர்களும் இந்தப் பிரிவுக்கு கட்டுப்படும் வகையில் மேலும் சில மாறுதல்கள் வரக்கூடும்.

பெரிய நிறுவனம் ஒன்றின் வலையக சாளரங்களை, பார்வை அற்றோரால் பாவிக்க இயலமுடியாத காரணத்தால் நிறுவனம் இழப்பீடு தரவேண்டும் எனக் கோரி வழக்கு தொடர்ந்து உள்ளமை, இந்த பிரிவு தொடர்பான மாறுதல்களைத் துரிதப்படுத்தி உள்ளது. மேலும் மின்வெளி தொடர்பான வேலைக்கு விண்ணப்பிப்போரிடம் இது தொடர்பான கேள்விகள் கேட்கப்படலாம். ஆகவே, ஒரு விழிப்புணர்வை உண்டு பண்ணவும், தகவலை தமிழ் வலையக வாசகர்களுக்குத் தரவுமே இந்தப் பதிப்பு.

மேலதிகத் தகவல்களுக்கு கீழ்க்கண்ட தொடுப்புகளைப் பாவிக்கவும்.

நிறுவன வழக்கு பற்றிய செய்தி

பிரிவு 508ம் அதற்குப் படிதலும்

எமது பதிவு

(...............எழுத்து நடைலயும் நாங்க எழுதுவம்ல?!...................)

8/28/2008

கவி காளமேகத்தின் தாக்கம் - 6

பா      வா      மை      வை,
நீ       மீ          ஊ         ஈ,
வீ      மோ      கோ      போ,
தீ      தா        ஐ       ஓ!

வணக்கம்! மேல நான் எழுதினது பாட்டுங்க!! "கவி காளமேகத்தின் தாக்கம்"ங்ற தலைப்புல பல தரப்பட்ட வகையிலான பாட்டு எழுதிட்டு வர்றோம். நீங்க இதுக்கு முந்தைய பதிவுகளைப் படிக்கலைனா அதுகளை மொதல்ல படிச்சுட்டு வந்தா வசதியா இருக்கும்ங்றது என்னோட தாழ்மையான எண்ணம். மேல சொன்னது ஓரெழுத்துப் பாட்டுங்க. இதுவும் சித்திரக்கவி வகையச் சேந்ததுதாங்க. வழக்கம் போல, செல்ல மகளை மனசுல இருத்தி எழுதினதுதாங்க இதுவும்.

பொழிப்புரை:
பா : அழகே
வா : வா
மை : கண்மை அல்லது பொட்டு
வை : இட்டுக் கொள்
நீ : நீ
மீ : உயர்
: அன்னம் அல்லது உணவு
: கொடு /தானம்
வீ : மலர்
மோ: முகர்தல்
கோ : இறைவன்
போ : செல்
தீ : இனிமை
தா : கொடு
: அச்சம்
: ஒழி அல்லது தவிர்

கருத்துரை: அழகான மகளே, வந்து கண்ணுக்கு மை இட்டுக் கொள்; பின்பு உயர்ந்த நிலை கொள்ள அன்னதானம் இட்டபின் வாசமிகு நறுமலர்களுடன் இறைவனைச் சென்று வழிபடு. அச்சம் தவிர்த்து என்றும் இனிமை கொள்வாயாக!

பொருள் தர வல்ல ஓரெழுத்துகள் நிறைய உள்ளன. பின் வரும் காலங்களில் அவை பற்றி விபரமாக அலசுவோமாக!


"மா" ன்னா மாங்கா(A For Apple)...... தொடர் பதிவு!

நம்ப மகேசு சொன்னா, அதை கண்டுங் காணாமப் போக முடியுமா என்ன? அதான் தொடர் ஓட்டத்துல நாமும்......

thatstamil.com
ஊர் சேதிகளுக்கு! நடிகைமாருங்க பத்தி முத்தாய்ப்பா குடுக்குற எள்ளல் வெகு அலாதி! ரொம்ப நல்லா இருக்கும்.
காட்டாமணக்கு கல்யாணம் பண்ண, வீட்டாமணக்கு வெளக்குப் புடிச்சுச்சாம்.

dinamalar.com
ஊர் சேதிகளுக்கு..... உடனடியா பிரசுரம் ஆகிறதால நமக்கு இதுதான் பிரதானம். முந்துற நாயும், பிந்துற காயும் என்னைக்கும் செல்லும்.

cnn.com
இங்கத்த சேதிகளுக்கு..... ஒபாமா பேச்சு கேக்குறதே வேலையாப் போச்சு.... ஓட்டச் சட்டியானாலும் கொழுக்கட்டை வெந்தா சரிதான?

google.com
நாலும் தேடிப் புடிக்க............. கெட்டிக்காரனோட வாழை எட்டே மாசத்துல!

etrade.com
..... காசப் போட்டாச்சு.... அது, எந்த அளவுக்கு கரைஞ்சு இருக்குன்னு நெலவரம் பாக்கணுமே... கண் கெட்ட பொறகு, கதிரவனுக்கு காலைவணக்கம்!

theserverside.com
மென்பொருள் கட்டுமான நிபுணர்னு சொல்லிக்கிட்டுத் திரியறம். அப்ப அப்ப எதையாவது எடுத்து உடணுமே? அதுக்குத் தான் இங்க.... வாயுள்ள புள்ளை பொழச்சிக்கும்!

howstuffworks.com
பெத்த மவளை சமாளிக்கத்தான்.... அவ கேக்குற கேள்விகளுக்கு இங்க தான பதில் கண்டு புடிக்கோணும். எல்லாத்தையும் புட்டு புட்டு வெச்சு இருப்பாங்க.... எறச்ச கெணறுதான் ஊறும். கேக்குற புள்ளை தான் தேரும்!

dictionary.com
வெள்ளைக்காரன் சொன்ன சொல்லு விளங்கலைன்னா, இவருதான் நமக்கு வழி காமிப்பாரு.... அத்தை சொல்லியாவது வித்தை பழகு!

projectmadurai.org
நம்ம வாழ்க்கையே இங்கதாங்க ஓடிகிட்டு இருக்கு... சங்ககாலத்துல பாடி வெச்ச பாட்டுக படிக்குறது நமக்கு நொம்பப் புடிக்கும். பாட்டுப் படிச்சவன் சபைல.... சீட்டு ஆடுனவன் சந்தியில!

kumudam.com
வாரம் ஒரு வாட்டி, இங்க வந்து எல்லாத்தையும் பாத்துருவேன். எல்லாத்தையும் ஒரு "புடி, புடி"ச்சுட்டு, கடைசில தயிர் சாதம் உண்ட திருப்தி வரும்.
காணாத கழுதை கஞ்சியக் கண்டுச்சாம்! ஓயாம, ஓயாம, ஊத்திக் குடிச்சுச்சாம்!!

charlotte.com
உள்ளூர் சேதி பாக்கணும்..... பள்ளிக்கூடம் நெலவரம் தெரியும்.... மவ அங்க இருப்பா, அதான்! மழை கிழை வந்தா போயி கூட்டியாரத்தான். ஆடாத கூத்து ஆடினாலும் காரியத்துல கண்ணா இரு!

zillow.com
உள்ளூர் வீட்டு வெலை நிலவரம் பாக்க.....
தும்ப உட்டுட்டு வாலைப் புடிக்கலாமா?

weather.com
பல ஊர்களுக்குப் போறோம், வர்றோம்.... அப்ப மழை, பனி நெலவரம் பாக்கணுமா, இல்லையா? முன்யோசனைக்காரனுக்கு முன் எலை!

shopping.com
எந்தப் பொருளும் வாங்குறதுக்கு முன்னாடி, இங்க பூந்து ஒரு அலசு அலசீற மாட்டோம்.?!ஆத்துல கொட்டுனாலும் அளந்து கொட்டு!

bredemeyer.com/
மென்பொருள் பாவிப்பானை வடிவமைக்க என்ன என்ன செய்யணும்னு சந்தேகம் வந்தா, இங்க வந்து கொஞ்ச நேரம் செலவு பண்ணுவேன். வாத்தியார் வெச்சு வித்தை பழகு!

இப்ப நாம கொக்கி போடணுமா? ம்ம்ம்ம்ம்...யார இழுக்கலாம்?

மதுவதனன் மௌ.
உருப்புடாதது_அணிமா
சீமாச்சு

விதிமுறைகள்

1.மூவரை விளையாட்டிற்கு அழைக்கவேண்டும்.
2.தங்களுடைய தளங்களைத் தரக்கூடாது.
3.அடிக்கடி அணுகும் தளங்களை அளிக்கவேண்டும்.
4.தொடர் பதிவின் தலைப்பும் கருத்தும் "மா" ன்னா மாங்கா..., அதாவது A For Apple...

8/27/2008

கவி காளமேகத்தின் தாக்கம் - 5

"சிலேடை நயம் இல்லாம, கவி காளமேகத்தோட தாக்கம் இவனுக்கு எப்படி வரும்?". இப்படிக் கேக்க ஆரம்பிச்சுட்டாங்கையா, கேக்க ஆரம்பிச்சுட்டாங்க! இப்படியான பொறகு, நாம சிலேடைல பாட்டு எழுதித்தான ஆகணும். சரி, அந்த வகைல எளிதான சொல்லுகளை வெச்சு எழுதின, இரட்டுற மொழிதல் (சிலேடை) பாட்டு ஒன்னைப் பாக்கலாங்க.

சோலை யழகு துள்ளி யோடும்
உள்ளம் கவர்ந்த பொன் வளர்
மாசறு மணி
மேனித் தளிர்
மான் மகவு மேஅது!

முதற்ப் பொருள்: சோலையைப் போல் அழகான, துள்ளி ஓடுகிற, உள்ளத்தை கவரக்கூடிய பொன்னாய் அரும்புகிறவள்; கெடுதல் இல்லாத, மணியைப் போல் உயர்ந்த மேனியுடன் வளர்ந்து வருபவள்; மான் போன்ற எழில் கொண்டவளுமாய் இருப்பது என் மகளே!

இரண்டாவது பொருள்: சோலை போன்றதொரு அழகாய், துள்ளி ஓடுவதும், உள்ளத்தைக் கவரக் கூடியதும், பொன்னான இளம் தளிர் போன்றதும், எந்த விதமான தீங்கு இழைக்காத, மேலான, இளமையான உடலைக் கொண்டதுமாய் இருப்பது மான் குட்டியே!

(இனியும் வரும்....)

கனவில் கவி காளமேகம் - 2

வணக்கம்! நாம எதிர்பார்த்தது மாதிரியே கவி காளமேகம் இன்னைக்கும் கனவுல வந்து, என்னடா பேரான்டி நல்ல சுகமானு விசாரிச்சுட்டு, "உணவு உட்கொள்ளுற முறைகள் என்னென்ன?" னு கேட்டாரு. "நேத்துதான் என்னால பதில் சொல்ல முடியலை. இதுக்கு எனக்கு பதில் தெரியுமே! உண்ணுவது, குடிப்பது!!"ன்னு சொன்னேன். அவரு, "அட, எனக்குத் தெரியாதா, நீ ஒரு அரை வேக்காடு"ன்னு சொல்லிட்டு "கட கட"ன்னு சிரிச்சாரு. நமக்கு நொம்ப தர்ம சங்கடமாப் போச்சு. அப்புறம் அவரே சொன்னாரு, "உண்டல், தின்றல், நக்கல், பருகல்னு நாலு விதம் இருக்குடா பேராண்டி. இந்த நாலு வகைய, இன்னும் குறிப்பிட்டு சொல்லணும்னா, அதை பனிரெண்டு வகையா பிரிக்கலாம்"னு. நாம, "சரி தாத்தா! நீங்களே அதைப் புரியும் படியா சொல்லுங்க!"ன்னு கேக்க அவரு சொன்னதிலிருந்து:

உண்டல்: பசியாற, ருசித்துப் புசிப்பது. காலை உணவு உண்டேன்.


தின்றல்: தின்னுவது, கொஞ்சமா ஆற அமர அவகாசத்தில் உட்கொள்வது. மொட்டுக் கடலை தின்றேன்.

நக்குதல்: நாக்கால் நக்கி உட்கொள்வது. தேன் நக்கியது நினைவுக்கு வந்தது.

பருகல்: திரவ உணவை சிறுக உட்கொள்வது. தேநீர் பருகினேன்.

அருந்துதல்: மிகச்சிறிய அளவு உட்கொள்வது. மது அருந்தினேன்.

உறிஞ்சுதல்: வாயைக் குவித்து திரவ உணவை ஈர்த்துக் குடிப்பது. சோறு உண்ட பிறகு தட்டில் மீதம் இருந்த மோரை உறிஞ்சினேன்.

குடித்தல்: திரவ உணவை பசி நீங்க சிறிது சிறிதாக உட்கொள்வது. கூழ் குடித்தேன். கம்பங்கஞ்சி குடித்தேன்.

துய்த்தல்: சுவைத்து மகிழ்ந்து உட்கொள்வது. அவள் அன்பில் கலந்து கொடுத்த அவலைத் துய்த்தேன்.

நுங்கல்: இருந்த திரவத்தை ஒரே எடுப்பில் உறிஞ்சுவது. அச்சோபாத்திர இளநீரை நுங்கியதில் இன்பம் கொண்டேன்.

மாந்தல்: தீராத வேட்கையுடன் "மட மட"வென உட்கொள்வது. தாகவேட்கையில் குடத்து மோர் முழுதும் எனது மாந்தலில் தீர்ந்து போனது.


மெல்லல்: திண்ணமாக(கடுமை) இருக்கும் பொருளைப் பல்லால் கடித்து துவைத்து உட்கொள்வது. கொப்புத்தேங்காயை மெல்லுவதில் பல்லின் வலிமை கூடியது.

விழுங்கல்: பல் மற்றும் நாக்கிற்குப் படாமல் தொண்டை வழியாக உட்கொள்வது. தாத்தா கொடுக்கும் இலைச்சாறை விழுங்க ஏனிந்தத் தயக்கம்?

இதாங்க சொன்னாரு. எனக்கு இப்பத்தாங்க புரியுது, ஏன் தமிழ் செம்மொழின்னு. ஒவ்வொரு காரியத்தையும் நுணுக்கமா குறிப்பிட்டுச் சொல்ல முடியுது பாத்தீங்களா? எதுக்கும் கவி காளமேகம் நாளைக்கும் வந்தா நல்லா இருக்கும். கனவுல அவரு வருவார்னு நம்புவோம். நம்பிக்கைதான வாழ்க்கையே?!


(......கனவுல இன்னும் வருவார்......)

8/26/2008

கனவில் கவி காளமேகம் - 1

கவி காளமேகம் எழுதி வச்ச பாட்டுகள், செஞ்ச குசும்புகளைப் படிச்ச நாம, அவரோட தாக்கத்துல பாட்டு எழுதும் முயற்சி, "கவி காளமேகத்தின் தாக்கம்"ன்ற தலைப்புல போய்ட்டு இருக்கு. அந்த தாக்கத்துலயே தினமும் நித்திரை கொள்ளப் போறோம் பாருங்க. அவரு கனவுலயும் வந்து எதாவது சொல்லிட்டுப் போறாரு. அதான், அவரு சொல்லிட்டுப் போறதை பதிவாப் போட ஆரம்பிச்சிட்டோம்.

மொதல்ல கருத்துரை, பதவுரை, பொழிப்புரை, அகலவுரை, விரிவுரை, பொருளுரைன்னு சொல்லுறாங்குளே பழமைபேசி, உமக்கு அதுகளுக்கு அர்த்தம் தெரியுமானு கேட்டாரு. நாம அப்படியே கனவுலயும் கூட விட்டத்தைப் பாத்தோம். அப்புறம் அவரே சொல்ல ஆரம்பிச்சுட்டாரு. அவரு சொன்னதுல இருந்து:

பதவுரை: செய்யுள்ல வர்ற எல்லா சொல்லுகளுக்கும் அதுக்கு உண்டான அர்த்தத்தை தர வேணும். எழுதறதுக்கு வாகா, எப்படி வேணுன்னாலும் எழுதிக்கலாம்.
பொழிப்புரை: செய்யுள்ல வர்ற எல்லா சொல்லுகளுக்கும் அர்த்தம் தர வேணும். அதே சமயத்துல வரிசையும் மாறக் கூடாதாம்.
கருத்துரை: எல்லா சொல்லுகளுக்கும் அர்த்தம், ஒண்ணுக்கு ஒண்ணுங்ற அடிப்படைல தரத் தேவை இல்லை. வரிசையும் முக்கியம் இல்ல. ஆனா, செய்யுள்ல சொல்ல வந்ததை இரத்தினச் சுருக்கமா சொல்ல வேணும்.
அகலவுரை: இதை விரிவுரைன்னும் சொல்லுவாங்க. பொழிப்புரை, பொருளுரை கூடவே, விரிவா தகுந்த கதை, உதாரணம், இப்படி கூடுதலா விசயங்களை சேத்து பல தகவல்களோட விளக்கமா சொல்லுறது.

பொருளுரை: இது எங்க காலத்துல இல்லடா! உங்க காலத்துல வந்ததுடா பேராண்டி!! நீங்களா எதையோ சொல்லிட்டுத் திரியறீங்க. உன்னை மாதிரி ஒரு அரை வேக்காடு சொன்னதுன்னு சொன்னாரு, "இது வந்து கிட்டத்தட்ட கருத்துரையேதான். ஆனா, கொஞ்சம் கூடுதலா சொல்லுகளை சொல்லி அதுக்கு உண்டான அர்த்தத்தையும் சேத்துக்கலாம். நாம பெரும்பாலும் பாக்குறது, செய்யுள், பொழிப்புரை, அப்புறம் கடைசியா பொருளுரை"ன்னு.

கவி காளமேகம் இன்னைக்கு கனவுல வந்து இதைத்தாங்க "பட்"டுனு வந்து "பட்"டுனு சொல்லிட்டுப் போய்ட்டாரு. நாளைக்கும் வருவாருன்னு நம்புவோம்.


(......கனவுல இன்னும் வருவார்......)

8/25/2008

கவி காளமேகத்தின் தாக்கம் - 4

கவி காளமேகம் எல்லா விதமான கவிதைகளையும் எழுதுவதில வல்லவர். அவருடைய தாக்கம் நம்மளையும் இந்த முயற்சிக்கு தள்ளி விட்டு இருக்கு. நீங்க இதுக்கு முந்தைய மூணு பதிவுகளைப் படிச்சுட்டு இந்த பதிவைப் படிச்சீங்கன்னா மேலும் பயனுள்ளதா இருக்கும். சித்திரக் கவியில மெல்லினப் பாடல், இடையினப் பாடல், வல்லினப் பாடல், நீரோட்டகம், ஒட்டியம் பாத்தாச்சு. அந்த வகைல இப்ப பாக்கப் போறது கோமூத்திரி (ஆநீர் நடை). பாட்டுல முதல் அடிய மேலயும், அடுத்த அடிய கீழயும் எழுதிட்டு, ஒரு எழுத்து விட்டு ஒரு எழுத்து மேலடியிலயும் கீழடியிலயும் படிக்கும் போது அதே அடி வரணும். இப்ப நீங்க மேலயும் கீழயும் ஒரு எழுத்து விட்டு எழுத்துப் படிக்கிறது ஒரு ஆ(மாடு) நடக்கும் போது சிறுநீர் கழிச்சுட்டுப் போனா, தரையில எப்படி இருக்குமோ அந்த சாயல்ல இருக்கும். சிரிக்கப் படாது, சரசுவதி கண்ணைக் குத்தீரும்! ஆம்மா... சொல்லிட்டேன்!! அதனால தான் இந்த வகைக்குப் பேரு கோமூத்திரி (கோ + மூத்திரம்). வழக்கம் போல என்னோட செல்ல மகளை மையமா வெச்சு ஆநீர் நடையில ஒரு கவிதை.

புகழும் வாக்கும்
பெற்று விடு!
நிகழும் போக்கும்
உற்று விடு!!

வீடு வாழ
நல்லது செய்து விடு!
நாடு வாழ
வல்லது உய்து விடு!!

வீட்டைக் காக்கப்
பூட்டைப் போடு!
நாட்டைக் காக்கப்
பாட்டைப் பாடு!!


பொருளுரை: செல்ல மகளே, புகழையும் உண்மை பேசும் வாக்கையும் கொண்டு, பின் இப்போது இருப்பது போலவே நல்லதொரு நிலையை எப்போதும் அடைந்து விடு. வீட்டார் நல்லபடியாக இருக்க நல்ல காரியங்களைச் செய்தும். நாடு நல்லபடியாக இருக்க வலிமை பெற்றும் இருப்பாயாக!. மேலும் வீட்டைப் பாதுகாக்க நல்லதொரு பூட்டைப் பூட்டுவது போல் நாட்டைப் பாதுகாக்க எழுச்சி மிக்க பாட்டைப் பாடு.

(இனியும் வரும்....)

8/24/2008

கவி காளமேகத்தின் தாக்கம் - 3

வணக்கம்! நீங்க இதுக்கு முந்தைய பதிவான "கவி காளமேகத்தின் தாக்கம் - 2 "ங்ற பதிவைப் படிச்சுட்டு வந்தா மேலும் பயனுள்ளதா இருக்கும்ங்றது என்னோட தாழ்மையான எண்ணம். ஏற்கனவே அதை படிச்சிட்டீங்கன்னா, மேல படியுங்க! சித்திரக் கவி வகைல உதடு ஒட்டாமப் பாடினா, அது நீரோட்டகம். அதாவது ஓடைல நீர் ஓடுற மாதிரி ஒரு சீராப் போய்ட்டு இருக்கும். உதடு ஒட்டியும் குவிஞ்சும் பாடினா அது ஒட்டியம். அதாவது ப, ம, உ, ஊ, ஒ, ஓ, ஒள, வ இந்த எழுத்துக மட்டும் தனியாவோ கூட்டெழுத்தாவோ சொல்லுல வர்ற மாதிரிப் பாடினா, உதடு ஒட்டியோ குவிஞ்சோ வரும்ங்க. இப்ப வழக்கம் போல, என்னோட மகளை மையமா வெச்சி எழுதின ஒரு ஒட்டியப் பாட்டு:

துறுதுறு சுறுசுறு பொம்மி குறுபொம்மு!
கொடும் ஊழ், ஊறு வடுவும் மவ்வும் பேரும்!!
மதுவும் சூதும் சுடுசுடு சூடு; ஒவ்வாது!
பாகுமுறுவும் ஊணும் உடுப்பும் உறு!
தொழு ஒரு பொழுது, பெறு ஓதும் பேறு!


பொருளுரை: "துறு துறு" என இருக்கும் சுறு சுறுப்பான, அழகான என் மகளே! கொடுமையானது என்பது மனத்தில் தீங்கு நினைப்பதும், அதனால் பெயர் கெடுவதும். மதுப் பழக்கமும் சூதாடும் பழக்கமும் மிகவும் கொடியது. தீயைப்போல் சுட்டுவிடும், அவை உனக்கு ஆகாது. கரும்புப்பாகுவைப் போன்ற இனிமைப் புன்முறுவல், உண்ண உணவு, உடுக்க உடை ஆகியனவற்றை நீ எப்போதும் உடையவளாவாயாக! மேலும் தினமும் ஒரு முறையாவது இறைவனைத் தொழும் பாக்கியம் நீ பெறுவாயாக!

(இனியும் வரும்....)

கவி காளமேகத்தின் தாக்கம் - 2

கொஞ்ச நாளைக்கு முன்னாடி "கவி காளமேகத்தின் தாக்கம்"ங்ற தலைப்புல இடையினம், மெல்லினம், வல்லினம் தனித்தனியா அமைஞ்ச மாதிரி பாடல் எழுதி பதிய வெச்சு இருந்தேன். நல்ல வரவேற்பு! அதன் தொடர்ச்சியா இப்ப இந்தப் பதிவு. கவிதைகள்ல ஆசுகவி, மதுரகவி, சித்திரக்கவி, வித்தாரக்கவின்னு நாலு வகை இருக்குங்க. புத்தம் புதுசா, யாருமே இது வரைக்கும் பாடாத ஒரு பொருள்ல, பாடச் சொன்ன உடனே பாடினா அது ஆசுகவி. இசை, இனிமை, உவமை, உவமேயம்னு பலதும் கொண்டு பாடினா அது மதுரகவி. ஒரு சித்திரத்துல எப்படி ஒன்னு ஒன்னையும், பாத்து பாத்து, எது எது, எங்க வருமோ அது மாதிரி ஒரு ஒழுங்குல சொற்களை வெச்சுப் பாடினா அது சித்திர கவி. பலதும் கொண்டு பல வடிவங்கள்ல சொற்களை அமைச்சுப் பாடினா அது வித்தார கவி. இதுல உட்பிரிவுகளும் இருக்கு. சித்திரக் கவி வகைல இருபதுக்கு மேல இருக்கு. அதுல உதடு ஒட்டாமப் பாடினா, அது நீரோட்டகம். அதாவது ஓடைல நீர் ஓடுற மாதிரி ஒரு சீராப் போய்ட்டு இருக்கும். உதடு ஒட்டியும் குவிஞ்சும் பாடினா அது ஒட்டியம்.

இப்ப நீரோட்டகத்துல நான் பெத்த மகளை மையப்படுத்தி ஒரு கவிதை! அதாவது ப, ம, உ, ஊ, ஒ, ஓ, ஒள, வ இந்த எழுத்துக சொல்லுல வராமப் பாடினா மேல் உதடும் கீழ் உதடும் ஒட்டாது, குவியாது பாருங்க:

அழகே, கனியே, கணையே, எந்தன் நிலாளே,
கணணழகே, நெஞ்சே, தயாளினியே, தென்றல்நீ!
நாசிநிறை காற்றே, சீரே, எந்தன்ஆசை அறிநீ!!
நின்நகை காணல் சால்நிறை ஆகின்றேன்;
கலையரசி நீ ஆக, இறை ஆசி நினைச்சேர,
யான் ஈசனின் தயா இறைஞ்சி!!!


பொருளுரை: அழகே, கனியே, கணையாழி போன்றதொரு சிறப்பே, எந்தன் நிலா மகளே, விழியழகே, நெஞ்சில் எப்போதும் நினைவாய் இருப்பவளே, கருணையுள்ளம் கொண்டவளே, என்வாழ்வில் தென்றலாய்ப் பிறந்தவள் நீ. என் சுவாசமே, செல்வச்சீரே, என் ஆசை அறிவானவளே, உன் சிரிப்பைக் கண்டால் எனக்கு நெஞ்சம் நிறையும். நீ கலைகளில் சிறப்பு பெற, இறைவன் ஆசி உமக்குக் கிடைக்க, நான் எல்லாம் வல்ல இறைவன் அந்த சிவபெருமானின் அருள் வேண்டி இறைஞ்சுகிறேன்.


மேலதிகத் தகவல்: பொருள், அடி, பா, அணி முதலிய கொடுத்த பின், மற்றவர் "பாடும்" என்று சொன்னவுடன், பாடுவோன் ஆசுகவியாம். சொல்லினிமை, பொருளினிமை, தொடை, தொடை விகற்பம், செறிய உருவகம் முதலிய அலங்காரத்துடன் இன்னோசையுடைதாய் அமுதமுறப் பாடுபவன் மதுரகவியாம். மாலைமாற்று, சக்கரம், சுழிகுளம், ஏகபாதம், எழுகூற்றிருக்கை, காதைக்கரப்பு, கரந்துரைப்பாட்டு, தூசங்கொளல், வாவனாற்று கூடசதுக்கம், கோமூத்திரி, ஓரெழுத்துப்பா, வல்லினப்பா, மெல்லினப்பா, இடையினப்பா, சித்திரக்கா, விசித்திரக்கா, வித்தாரக்கா, விகற்பநடை, வினா உத்தரம், சருப்பதோ பத்திரம், எழுத்துவருத்தனை, நாகபந்தம், முரசபந்தம், நீரோட்டகம், சித்து, ஒருபொருட்பாட்டு, பல பொருட்பாட்டு, மாத்திரைப் பெருக்கம், மாத்திரைச் சுருக்கம், எழுத்துப் பெருக்கம், எழுத்துச்சுருக்கம் இவை முதலிய தெரிந்து பாடுவோன் சித்திரக்கவியாம். மும்மணிக்கோவை, பன்மணிமாலை, மறம், கலிவெண்பா, தசாங்கம், மடல் ஊர்தல், கிரீடை, இயல், இசை, கூத்து, பாசண்டத்துறை இவை முதலிய விரித்துப்பாடுவோன் வித்தாரக்கவியாம்.

(இனியும் வரும்....)

8/21/2008

கவி காளமேகத்தின் தாக்கம் - 1

...ச்சும்மா, எல்லாப் புலவர்களும் வல்லினம்(க,ச,ட,த,ப,ற), இடையினம்(ய,ர,ல,வ,ழ,ள), மெல்லினம்(ங, ஞ, ந, ண, ம, ன)னு பல விதமா போட்டுத் தாக்கி இருக்காங்களே.... நாமளும் பொழுது போகாத இந்த நேரத்துல அதை மையமா வெச்சி, எதனாச்சும் கிறுக்குவோமே?! ன்னு நினைச்சேன். அப்ப பாருங்க, பெத்த பொண்ணு தூங்கி எழுந்து "அப்பா"ன்ட்டு ஓடி வந்தா. அப்புறம் என்ன, அவளை வெச்சே எதோ எழுதி இருக்கேன்.

மெல்லினத்துல மெதுவா மென்மையா ஆரம்பிச்சு, அப்புறம் இடைப்பட்ட வாக்குல வாழ்த்துற மாதிரி வாழ்த்தி, கடைசியா வல்லினத்துல வலுவா புத்திமதி சொல்லுற மாதிரி எழுதி, இல்ல இல்ல, கிறுக்கி இருக்கேன்.

மௌனமணி யாம்! நன்னி யாம்!!
நின்நன்மனம் யாம்! நின்நும்மே யாம்!!
எம்மனம்நீ! ஞானம்நீ!! நாணம் நீ!!!
மினன்மின்னி மானம்நீ! மாமணி மா!! (மெல்லின வெண்பா)

வாயார ரருளுரை யுரைய வல்லவரும்
வாழுரை யுரைய வேல்விழியா ளைவெல்ல
வருவார் யாரோ? வரவுவழிய விழியொளிர்
வாழ்வு வாழிய, வாழிய வாழியவே! (இடையின வெண்பா)

கடுகடு தடு கிடக்குது பாடு,
பகடற கசடற தோடக் கேடு!
சிறுபாதை தேடா, தப்புச் செப்பா,
தசபதி துதி தீதது சாடாது!!
(வல்லின வெண்பா)


பொருளுரை:
மௌனசாமியின் மைந்தன் மணியாகிய யாம் உம்மைப் பெற்றதில் இறைவனுக்கு நன்றிக் கடன்பட்டோம். உமது அன்பைப் பெற்றவனும், உமது நன்மை ஒன்றையே நோக்குக்கிறவனுமே யாம். எம்மனதில் குடி கொண்டு உள்ளவளும், அறிவும், வெட்கிப் புன்முறுவல் பூக்கும் அழகுடையவளும், குலம் போற்ற வந்தவளும் நீ. நீ மாமணி போல் வாழ்வாய்.

அன்பாய் நீயிருக்க, வாழ்ந்த வல்லமையுடைய பெரியோர் உன்னை வாழ்த்த, அழகிய கண் கொண்ட உன்னைத் துன்புறுத்த யாரும் வரார். வளம் பொங்க, ஒளி மயமான வாழ்வு வாழ வாழ்த்துகிறேன்.

எத்தகைய கடுமையான இடர் வந்தாலும் உண்டாகும் கோபத்தை தணித்துக் கொள்; வீண் பெருமைக்காகவும் தவறானதுக்காகவும் செய்கிற செயல்களை விட்டொழி; எந்தவித துன்பமும் உன்னை அண்டாது ஓடிவிடும். மேலும் குறுக்கு வழியில் பொருள் தேடாமலும் தவறாக எதையும் பேசாமலும் இருந்து, பத்து அவதாரங்கள் கொண்ட திருமாலை வணங்கி வருகிறபட்சத்தில் தீங்கெதுவும் உன்னை அண்டாது.

(.....இல்ல, இவனுக்குக் கொஞ்சம் முத்தித்தான் போச்சோ?!.....)

8/19/2008

தமிழின் பெருமைகள்: அண்ணன் நடிகர் சிவகுமார் அவர்கள்

தொகுப்பு:1




தொகுப்பு:2



தொகுப்பு:3



தொகுப்பு:4



தொகுப்பு:5



தொகுப்பு:6



தொகுப்பு:7



தொகுப்பு:8

8/18/2008

புறநானூறு - தேடல்

புறநானூற்றுத்தாய் பத்தி கேள்விப்பட்டு இருப்பீங்க. அது சம்பந்தமான பாட்டை படிச்சு இருக்கேன். பல விழா மேடைங்கள்ள சொல்லக் கேட்டும் இருக்கேன். ஆனா, அது இப்ப கைவசம் இல்ல பாருங்க. சீக்கிரமே அதை சேகரிச்சு பதவுரையோட பதியனும். உங்கள்ள யாருக்காவது தெரிஞ்சா தெரியப்படுத்துங்க. நூற்று ஐம்பது புலவர்களுக்கு மேல சேந்து எழுதினதுதான் புறநானூறு. இது வந்து, எட்டுத்தொகைல ஒரு தொகையாமுங்க. அதென்ன எட்டுத்தொகை? ஐங்குறுநூறு, அகநானூறு, புறநானூறு, கலித்தொகை, குறுந்தொகை, நற்றிணை, பரிபாடல் அப்புறம் பதிற்றுப்பத்து இதெல்லாம் சேந்ததுதான் எட்டுத்தொகை யாமுங்க. இதுல பதிற்றுப்பத்துல எங்க ஊர் (கொங்கு நாடு) பத்தி எல்லாம் இருக்குதாமுங்க.

ஈன்று புறந்தருதல் தாயிற்க் கடனே,
சான்றோன்ஆக்குதல் தந்தைக்குக் கடனே,
வேல்வடித்தல் கொல்லற்குக் கடனே,
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே,
ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக்
களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே,
நா லும்கலந்து நன்னடைகொண்டு
கா கரைதல் பழமைபேசியின் கடனே!

பதவுரை: தாயின் முதன்மையான கடமை பெற்று வளர்த்து வெளியே அனுப்புதல். தந்தையின் கடமையோ அவனை சான்றோனாக ஆக்குதல். வேல் வடித்துத் தருதல் கொல்லனின் கடமை. நல்ல முறையிலே அவனுக்குப் போர்ப்பயிற்சி முதலியன அளித்தல் வேந்தனுடைய கடமை. இவ்வளவு கடமைகளையும் பிறர் செய்ய, ஒளிர்கின்ற வாளைப் போர்க்களத்திலே சுற்றிக் கொண்டு அஞ்சாது நின்று, வென்று, பகை மன்னர் களிற்றையும் கொன்று மீண்டு வருதல், வளர்ந்து காளையான அவனது கடமையாகும். இப்படியாக நல்ல பல தகவல்களை காக்கை போல் பகிர்ந்து கொள்வன இந்த பழமைபேசியின் கடமையாகும். இதனை அறிவீராக!

நினைவு கூறல்!

சின்னஞ்சிறு வயதில் சிரித்து
மகிழ்ந்த ஊராம் சிநேகச் சலவ
நாய்க்கன் பட்டிப் புதூர்
!

நல்லதொரு துவக்கப் பள்ளியதில்
கல்விகற்க அரவணைத்தார்
அந்தஊர் மக்கள் அக்கறையுடன்!

ஆடிப்பட்டம் விடுவோம் அன்பு
நெசவாளர் பிள்ளை களுடன்
வடிவாய் வடக்குத் தோட்டத்தில்!

தைமாட்டுப் பொங்கல் காண்போம்
ஒப்பற்ற விருந்தோம் பலுடன்
கிடங்கு வீட்டுத் தோட்டத்தில்!

செஞ்சேரிமலைத் தேரா? ஆலகொண்ட

மால கோயிலா? அன்பாய் அழைத்துச்
செல்வர் இராஜூநாய்க்கர் வீட்டில்!

பள்ளயத்திற்கு பண்பாய் பாசமுடன்
அழைப்பர் எம்மை மந்திரியப்ப
கவுண்டர் வீட்டுக் குமாரர்கள்!

நாளொரு பொழுதும் நல்லவிதமாய்
களிப்புகள் கண்டு வளர்ந்தோம்
கஸ்தூரிசாமி நாய்க்கர் தோட்டத்தில்!

பண்பாய் பாசமாய் பரிவுடன்
பழகுவர் குப்புசாமி அண்ணாவும்
அந்த குமாரும் சின்னுவும்!

மாகாளி அம்மன் கோயில்
வளாகமொரு நந்தவனம்; மரங்களும்
கிள்ளைப் பிள்ளை களுமாய்!

அந்தியூர்க் காரர் வீட்டுப்
பிள்ளைகளென அன்பாய் கவனித்துக்
கொள்வர் ஊர்மக்கள னைவருமே!

வெங்கடேசு சுந்தரம் கோவிந்தராசு
ரங்கண்ணன் விஜி ஜெயகுமார்
சிவாசெந்தில் நல்ல நண்பர்கள்!

இனியும்சொல்ல நிறையப்பேர் இனிமை
கொண்ட அந்தஊரில்; நன்றியுடன்
நினைவு கொள்கிறேன் நல்லவிதமாய்!

8/17/2008

வீட்டு வேலைக்காரி கிட்டாள்

அன்னை தெரசா போல், அடுத்த வீட்டுக் குழந்தைகளையும் தன் குழந்தைகள் போல் பாவித்து மனித குலத்தின் மாண்பு காக்கும் 'கிட்டாள்'களும் 'மயிலாள்'களும் வேலைக்காரி, தாதி, ஆசிரியை என்றெல்லாம் வேறு வேறு போர்வையில் பாரெங்கும் வியாபித்து இருக்கிறார்கள். குறிப்பாக, கொங்கு நாட்டில் ஏராளம்! ஏராளம்!! அவர்களுக்கு இந்த எளியவனின் நெஞ்சார்ந்த வணக்கங்கள்!!! மேலும் எனது நினைவுகளை அவர்களுக்கு நன்றிக் கடனாய் காணிக்கை ஆக்குகிறேன்.

ஊட்டுக் கொல்லையில ஆசையா
நான் நட்டு வெச்ச துளுக்குமல்லி
செடிஒன்னை மயிலை மாடு
மேஞ்சுருச்சுன்னு ஒக்காந்து நான்
அழுவ, கெடங்கு வீட்டு தோட்டத்து
நாத்து கொண்டாந்து ஒரு பாத்தி வெச்சு,
அந்த மஞ்ச நெறப்பூவ பாக்க வெச்சு
என்னை அழகு பாத்தியே
நல்ல மனசு கிட்டா!

செட்டுக்காரஊட்டுப் பயலுவ எட்டு
மூலைப் பட்டம் விடுறாக, எனக்கும்ஒரு
பட்டம் வேணுமுன்னு நானழுவ, ஊட்டு
மரத்துல இருந்த பப்பாளி பழம்நாலும்
ஊட்டு சனம் யாருக்குந் தெரியாம
கோயிந்தங்கிட்ட குடுத்து அவனோட
பட்டத்த பறிச்சுவந்து, ஊரோரம் இருக்குற
எங்க கட்டக்காட்டுப் புழுதியில
பறக்க விட்டு வேடிக்கை காமிச்சயே
நல்ல மனசு கிட்டா!

அப்பனாத்தாவுக்கு தெரியாம
பெரியதோட்டத்து கெணத்துல
ஊர்ப்பசங்க கூட சேந்துட்டு கண்ணு
முண்ணு தெரியாம தண்ணியில
நீந்தப் போன என்னை, அம்மணமா
நிக்கவெச்சு எங்கம்மா என்னையடிக்க,
பதறி ஓடியாந்து என்னைத் தூக்குனயே
நல்ல மனசு கிட்டா!

தைப்பூசத்தேருக்கு ஊருசன மெல்லாம்
வண்டிகட்டி செஞ்சேரி மலைக்கு
படை படையாப்போக, திண்ணையில
ஒக்காந்து கண்ணக் கசக்கிகிட்டு
நானழுவ, நான் கூட்டிட்டு போயிட்டு
வாறன்னு சொல்லி கூட்டிக்கிட்டுப்
போயித் தேரு சந்தையில உன்னோட
கொங்கு முடிச்சவுத்து அதுல இருந்த
காசுக்கு சருபத்து வாங்கித் தந்தயே
நல்ல மனசு கிட்டா!

நல்லதண்ணி புடிக்க வரிசையில
நின்னப்ப, என்னை ஒதுக்கிஉட்டு

ஒதுக்கிஉட்டு ஊருசனம்
கொழாயில தண்ணி புடிக்க,
வந்து எல்லார்த்தையும், எந்தாயி
அம்முலு அம்மா பேரன் கால்
கடுக்க நிக்க, நீங்க எந்த சாமி
புள்ளைகன்னு தட்டிக் கேட்டயே
நல்ல மனசு கிட்டா!

மேல்படிப்பு படிக்க வேணுமின்னு எங்கப்ப
னாத்தா என்னை லட்சுமிநாய்க்கன்
பாளையத்துல கொண்டாந்து உட்டதுல
கண்ணு கலங்கி சோந்து போன ஊன்வுசுரு
கொஞ்ச நாளைக்கப்புறம் நெஞ்சு வலியின்னு
போயர் வளவுல போயுருச்சாம்; அப்புறம்

என்னைவுட்டுப்போட்டு பாடையில வடக்க
போயிட்டயே நல்ல மனசு கிட்டா!

என்னைவுட்டுப்போட்டு பாடையில வடக்க
போயிட்டயே நல்ல மனசு கிட்டா!


8/16/2008

தமிழும் வள்ளல்களும்

நாம கனடாவுல இருந்த காலத்துல இராமலிங்கம்னு ஒரு நண்பர். அவருக்கு அப்பவே வயசு ஒரு ஐம்பது இருக்கும். கல்பாக்கம் அணு மின்னிலயத்துல முதன்மை பொறியாளரா இருந்துட்டு, இங்க வந்து நயாகரா நீரேற்று மின்னிலயத்துல இயக்குநரா வேலை பாத்துட்டு இருந்தாரு. அவருக்கு அப்ப பத்து மற்றும் பனிரெண்டு வயசுல ரெண்டு பெண் குழந்தைங்க. அவங்கள்ள மூத்த பிள்ளை 'பேரணி', இளையவ பேரு 'வானொலி'. இதப்பத்தி சார்லட் வந்த புதுசுல (2002'ம் ஆண்டு), கூடி இருந்த நண்பர்கள்கிட்ட சொல்லி கொஞ்சம் வருத்தப்பட்டு பேசினேன். என்னங்க, வானொலின்னு பேரு வச்சிகிட்டு அந்த பொண்ணு என்ன செய்யும்னு. உடனே, அந்த கூட்டத்துல இருந்த ஒரு அன்பர் சொன்னாரு, 'எந்த தமிழ் உணர்வாளனும் அப்படித்தான் பேரு வெப்பான். ஏன் வெள்ளைக்காரன் மட்டும் truck, field, red street, smith, gootnight'னு வெச்சா ஒத்துக்கிடுறோம். நாம, நல்ல தமிழ்ல அப்பிடி பேரு வெச்சா என்ன தப்பு? நாளைக்கு எனக்கு பொறக்கப் போற கொழந்தைகளுக்கு கூட நான் அப்படி நல்ல தமிழ்லதான் பேரு வெப்பேன்' அப்படீனு சொல்லி என்னை ஆசுவாசப்படுத்தினாரு. அதே மாதிரி, 'நிமலன், அவனி'' ன்னு வெகு அழகாப் பேரு வெச்சி தமிழ் மொழி மேல அவரு காட்டின பற்றுக்கும், நிறைவேத்துன அந்த வாக்குக்கும் இந்த பதிப்பை அர்ப்பணிச்சுக்கிறேன்.

'சால, உறு, தவ, நனி, கூர், கழி' அப்படீன்னா என்னன்னு கேட்டு இருந்தோம். யாரும் அத கண்டுகிட்டதாத் தெரியலை. பரவாயில்ல. ஆனா நீங்க படிச்சு இருப்பீங்க, தெரிஞ்சும் இருக்கும். இருந்தாலும் நான் சொல்ல வந்ததை சொல்லிடுறேன். இது எல்லாமே சொல்ல வந்ததை அழுத்தி, மிகைப்படுத்தி சொல்லுறதுக்கு பாவிக்கிற சொல்லுகதாங்க. உதாரணத்துக்கு,

சாலச்சிறந்தது
உறுதுணை
தவப்பயன்
நனிசிறந்தது
கூர்மதி
கழிநுட்பம்

இலக்கணத்துல உரிச்சொல் அப்படீங்றோம். அடுத்து கடையெழு வள்ளல்கள் யார் யாருன்னு பாப்போம் பேருக்கான விளக்கதோட. பாரி, ஓரி, காரி, அதியன், ஆய், நள்ளி, பேகன்.

பாரி: பார் போல பெரிய பரந்த மனது உடையவன். அதனாலதான் 'பாரிய'னு கூட சொல்லுவாங்க. பாரிய கூட்டம், பாரிய விளைவு..... காற்றில் தவழ்ந்த முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி.

ஓரி: ஓர் அப்படீன்னா 'ஏதோ ஆற்றலால் தனித்து(unique)வம் பெற்ற'னு அர்த்தம். ஆக, 'ஓரி'ன்னா தனித்துவம் வாய்ந்தவன்.

காரி: செயலில் சிறந்து விளங்குபவன்னு அர்த்தம். காரியம், காரிகை இதெல்லாம் இதானோட வழி வந்தது தான். ஆடாத கூத்து ஆடினாலும் காரியத்துல கண்ணா இருக்கணும்.

அதியன்: மேலான மாண்பு கொண்டவன், மேலானவன்; அதிகப்படியானவன் அதியன்(அதியமான்).

ஆய்: ஆய்ந்து செயலாற்றுபவன் ஆயன்; 'ஆய்' ன்னா தாயுள்ளம் கொண்டவள்ன்னும் அர்த்தம் கொள்ளலாம். அதுல இருந்து வந்ததுதான் ஆயா. எங்க ஆயா வருவாங்க. சத்துணவு ஆயா.... 'ஆய்' ன்னா நாலும் தெரிஞ்சி செய்யுறவன்.

நள்ளி: சிறப்பும் அழகும் கொண்டவன். நளன் வந்து ஆண்பால், நளினி பெண்பால், நள்ளி பொதுப்பால். நள்ளி வளவன்னு சொன்னா சிறப்பும் வளமையும் கொண்டவன். கிள்ளின்னா பண்பாளன். கிள்ளி வளவன்.நெடுங்கிள்ளி, இளங்கிள்ளி;கிள்ளைன்னா கிளின்னும் அர்த்தம் இருக்கு; செழிப்பானவன் செழியன்.

பேகன்: அளவில்லாத மகிழ்ச்சி உடையவன். குளிரால் வாடிய மயிலுக்குப் போர்வை தந்தவன். 'கோப்பெரும் பேகன்'னா பெரும் புகழோடு மகிழ்ச்சி உடையவன்.

கடைசியா, வள்ளல் அப்படீன்னா பொன்னும் பொருளும் தருகிறவன்ங்றது தப்பு.உயிரினங்க மேல மாண்பும் அக்கறையும் வெச்சி அதுக்காக தன்னை அர்ப்பணிக்கிறவங்கதான் வள்ளல். உதாரணத்துக்கு, வள்ளலார்.

(பொருட்ப்பிழை இருந்தா சுட்டிக்காமிங்க.... ஏதோ, எங்க அப்பா மணிவாசகம்னு பேரு வெச்சாரு. அதுக்கு கொஞ்சம்னாச்சும் வேலை பாக்கணும் இல்லீங்களா?!)

8/12/2008

கடற்கரைப் பயண அனுபவக்கோவை-3

நவசக்தி தமிழ் பண்பாட்டுக் குழுவினரின் கடற்கரைப் பயண, இறுதி நாள் பற்றிய அனுபவக்கோவை இது:


மூன்றாவது நாளில் எழுஞாயிறு நாமும் கண்டிட
வேண்டுமென விழைந்து நித்திரைக்கு சுபம்இட்டு
கிழக்கு நோக்கி நடையைக் கட்டினர் குழுமசக்திமார்
கூட்டம்! நல்லதொரு விடியல், ஆனாலும் நாணியது
ஆதவனின் உதயத்தை வெளிக்காட்ட நீலக்
கருமுகில் கூட்டம்; ஆதலினாலென்ன நாங்கள்
இளங்காலைப் பொழுதை நுகர்ந்து அதில் இன்பம்
காண்போம்என களிப்புகள் கொண்டார் எம்குழுமம்!

பின்புநல்ல பிட்டுகளும் கோதுமை ரொட்டிகளுமாய்
ஒன்றுகூடி விரதத்தை முறித்தார் எம்கூட்டம், அதே
பெரிய மேசையினில் பேச்சுக்களும் நகைகளுமாய்!
அலுவல்கள் நடந்தவண்ணம் அய்யா சண்முகநாதனும்
மணிவாசகமும் கொடுத்தார் ஈடு நடந்த குழுமத்தின்
உல்லாச செயல்பாட்டுக்கு; மீண்டு மொருமுறை நீல
வண்ணக்கடலில் குதூகலக் குளியல் போடவேண்டுமென
குலவை இட்டுச்சென்றார் குழுமச் செல்லப்பிள்ளைகள்!!

அதிகமாகவே ஆர்ப்பரித்தது அகலவனின் அலைகள்இன்று!
ஆதவனின் ஆதிக்கமும் அதிகமாகி தணலாய்ச் சுட்டதுமணல்!!
அன்புக் குழுமத்தின் ஆவேசக் குளியலும் அதிகமேஅதற்கேற்ப!!!
இப்படியாகக் குதூகலம் கண்டுமதியச் சோறும் மனமகிழ்வோடு
கொண்டுவிட்டு, ஆயத்தம் ஆயினர் வீடு திரும்ப; நொடியில்
சுத்தம்செய்தனர் அந்த அழகியகுடிலை சிரத்தையுடன், பின்பு
சீரணியாய் வாகனங்கள் தொடர்ந்தடைய, பலநல்ல நினைவுகளுடன்
பள்ளிகொண்டார் குழுமத்தினர் தத்தம்வீட்டில் மனநிறைவோடு!

8/11/2008

கடற்கரைப் பயண அனுபவக்கோவை-2

நவசக்தி தமிழ் பண்பாட்டுக் குழுவினரின் கடற்கரைப் பயண, இரண்டாவது நாள் பற்றிய அனுபவக்கோவை இது.


ஞாயிறுஅன்று எழுஞாயிறு கண்டிட அய்யா
சண்முகநாதன் முன்னிலை வகிக்க ஆடவர்
அணி அணிவகுத்துச் சென்றது கடலின்தொடு
வானம் நோக்கி கிழக்கு வெளுத்த நேரத்தில்!
என்னே ஒரு காட்சி, சிறிதாய் ஒரு மின்னல்
கீற்று போல் இளஞ்ச் சிவப்பில் தகிக்க
ஏறு முகங்கண்ட கதிரவன் முழு வட்ட
முகங்காண, பரவசம் கண்ட கணத்தில்!!

காலைப் பலகாரம் அன்பு அருமையுடனும்,
ஆடவர் ஆடினர் நல்ல துடுப்பு ஆட்டம்;இளம்படை
கிளம்ப குழுமம் பிரவேசித்தது பிஞ்சுமணல்
நீலக்கடல் கரைக்கு, ஆர்ப்பரித்த அலைகள் அசந்து
கண்டது குழுமத்தின் 'போ போ' விளையாட்டை!
விளையாட்டில் உற்சாக வியர்வை சிந்திய
குழுமப்பெண்டிர் கைகோர்த்து எள்ளி நகை
கொண்டனர் துள்ளி வரும் அலைகளோடு!!

கொண்ட களிப்பின் களைப்புக்கு உக்கிரவேட்கையுடன்
அருமை உணவும் ஆழ்ந்த நித்திரையும்! தென்றல்
தவழ்ந்துவர முகில்கள் ஊர்கோலமிட பரந்த மணல்
பரப்பில் குழுமத்தின் பிரதிநிதிகளாய் மூன்று பட்டங்கள்
மேலே பவனிவர அண்ணாந்து பார்த்து பெருமிதம்
கொண்டார், பிள்ளைகளும் பெற்றவர்களும்!!
மாலைக் கருக்கலில் மணல் வீடு கட்டிய மகிழ்வுடன்
ஒருங்கே அமர்ந்து இனிமையாய் பாட்டுக்கள்!!!

கடல்தாயுடன் உறவாடியது காணுமென, நிலாமகள்
சிணுங்க திரும்பியது குழுமம் அழகிய அந்த
குடிலுக்கே! நல்ல சுவையாய் இராச் சாப்பாடு, பின்
சுகமாய் நல்ல கனிவுடன் பல்சுவை கதைப்பு
பெரிய வலு கொண்ட மேசையில் இருந்து!!
பின்னிரவில் ஆனந்தக் களிப்பின் நினைவுகளோடு
நித்திரை கொள்ளப் போனதுகுழுமம்; ஆக இந்த
இரண்டாவது நாளும் உல்லாசத் துள்ளல்களாய்!!!

8/10/2008

கடற்கரைப் பயண அனுபவக்கோவை-1

நவசக்தி தமிழ் பண்பாட்டுக் குழுவினரின் கடற்கரைப் பயண, முதல் நாள் முடிவில் எழுதிய அனுபவக் கோவை இது.


குழுமம் காலை பத்துக்கு புறப்பாடு என்றோம்,
அய்யா கலையின் வீட்டில் கூடி, கொட்டமடித்து
தொண்ணூறு மணித்துளிகள் கடந்து இனிதே
புறப்பட்டது குதூகல குழுமம்! உற்சாகமிகு
பயணத்தின் இடையே தேவாலயம் ஒன்றின்
புறவாசலில் புன்முகம் கொண்ட சக்தியரின்
உன்னதமாய் உமிழ்நீர் சுரக்க உணவுப் படையல்!

உண்டதும் கண்டது பருத்திச் செடிகளும் காய்களும்,
அருகண்மையில் இருந்த விளை நிலத்தில்; தவப்
பொறுப்பாய், புழங்கிய புறக்கொல்லையின் பெருக்கல்! பின்
கடற்கரை நோக்கிய பயணம் தொடர்ந்தது அதே பாங்காய்,
அடைந்தது குழுமம் அழகிய கடற்கரைக் குடிலை!! செல்லச்
சிறுசுகள், மேல் தளமும் கீழ் தளமுமாய் ஓடிப்பாய
சென்றனர் ஆடவர் பாலும் பழமும் வாங்க அங்காடிக்கு!!!

அந்தப் பால்கொண்டு வடித்த காப்பித்தண்ணீரின் அதே
தெம்புதனை எரிபொருளாய் பாவித்து சீறிப் பாய்ந்தது
குழுமம் கடலை நோக்கி; குழந்தைகளும் பெற்றவர்களுமாய்
மூழ்கி எழுந்ததும் துள்ளிக் குதித்ததும் அப்பப்பா, சொல்லி
மாளாது பெற்ற இன்பம்; வானதியின் வேகம் பேரலையை
வம்புக்கு வரச் சொன்னது; நல்லதொரு துள்ளல் மகா
சமுத்திரத்தில்; கண்களைக் கவர்ந்தது தும்பிப் பட்டம்!

பரிவாய் உசுப்பி விட்டேன் பெரும் குழாயை தாண்டுவதேன,
தாண்டி விட்டார் முயற்சித்த அனைவரும்; ஆகா எனத்
துவங்கியது கபடி ஆட்டம் மங்கிய மாலைப் பொழுதில்,
கண்டு களித்தார் கடற்கரையில் குழுமமும் பரங்கியரும்!
அது போதாது போதாது என வைத்தோம் ஓட்டப் பந்தயம்;
சீறிப்பாய்ந்து, நமன் வரினும் நாமார்க்கும் குறைவு உற்றோ
மென பறைசாற்றினர் கலை அய்யா - மலர் தம்பதியினர்!!

வந்தோம் மனநிறைவோடு அந்த அழகிய குடிலுக்கு; பின்
புசித்தோம் பசித்த வயிறார! குழுமம் ஒருங்கே அமர்ந்தது
பின்புறக்கொல்லையில் தடாக முகமாய்; இன்புற்றோம்
பொதிகைத் தென்றல் இலைச்சருகாய் மயூரத்துகிலாய்
வருடிவர; அங்கே அன்பாய் அனுசரணையாய் அசத்தினார்
அய்யா சண்முகநாதன் போட்டிகள் நடாத்தி! கடற்கரைக்
களியின் களைப்பாய் நித்திரையில் குழுமம் இப்போது!!

8/08/2008

காளமேகம் போல், தகரத்தில் வேள்வி!

வணக்கம்! பெரிய அளவில் ஒரு கட்டுரை எழுத வேண்டுமென எண்ணி, குழுமத்தாருக்கு எமது படைப்புகளில் இருந்து சிறிது காலம் விடுதலை அளிப்பதாய் கூறி இருந்தோம். அதில் எந்த மாற்றமும் இல்லை. என்றாலும் இந்த ஒரு படைப்பு முடியும் தருவாயில் உள்ள படியால் இந்த மடலை சமர்ப்பிக்க நேரிட்டது. குழுமத்தார் ஆமோதிப்பீராக!

15 ஆம் நூற்றாண்டில் வைணவப் புலவராய் ஒருவர். சைவப் புலவராய் ஒருவர். இவர்கள் அவ்வப்போது இலக்கிய வேள்வியில் ஈடுபட்டு ஒருவரோடு ஒருவர் வாதிட்டுக் கொள்வது உண்டு. ஒருவர் வில்லிபுத்தூரார், மற்றவர் அருணகிரிநாதர்.

வில்லிபுத்தூரார் மகாபாரதத்தைத் தமிழில் பாடினார். இவரது பாரதம் வில்லிபாரதம் எனப்படுகின்றது. வில்லிபுத்தூரார், தென்னார்க்காடு மாவட்டத்திலுள்ள சனியூர் என்னும் ஊரில் பிறந்தவர். வைணவர்களான இவரது பெற்றோர், பெரியாழ்வாரின் இன்னொரு பெயரான வில்லிபுத்தூரார் என்பதை இவருக்கு இட்டனர். வக்கபாகை என்னுமிடத்தை ஆண்டுவந்த மன்னனான வரபதி ஆட்கொண்டான் என்பவன் வில்லிபுத்தூராரை ஆதரித்து வந்தான். இவனின் வேண்டுகோளுக்கு இணங்கவே வில்லிபாரதம் பாடப்பட்டதாகத் தெரிகிறது.

அருணகிரிநாதர், கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து முருகக் கடவுள் மீது பாடல்கள் எழுதி புகழ் பெற்ற அருளாளர். இவர் சென்னைக்கு அருகே உள்ள திருவண்ணாமலையில் பிறந்தார். இவர் தமிழ் மொழி, வடமொழி ஆகிய இரு மொழிகளிலும் புலமை பெற்றவர். இவரைப்போல் ஆயிரக்கணக்கான பல்வேறு இசைச் சந்த(ராக)ங்களிலே பாடியவர் வேறு யாரும் இல்லை என்றே சொல்லலாம். கருத்தாழமும், சொல்லழகும், இசைத்தாளச் செறிவும் நிறைந்தது இவர் பாடல்கள். இவர் எழுதிய திருப்புகழில் 1307 இசைப்பாடல்கள் உள்ளன. இவற்றுள் 1088க்கும் மேற்பட்ட சந்த வேறுபாடுகள் உள்ளன என்று கணித்து இருக்கிறார்கள்.

இப்படியாக ஒரு தருணத்தில், கீழ் வரும் அருணகிரிநாதர் பாடலுக்கு, வில்லிபுத்தூரார் பொருள் கூற முடியாமல் தோற்றதாகச் சொல்லப்படுகிறது.

திதத் தத்தத் தித்தத, திதிதாதை தாததுத் தித்தத்திதா
திதத் தத்தத் தித்த திதிதித்த தேதுத்து த்திதத்தா
திதத் தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாததத்து
திதத் தத்தத் தித்தித்தி தீதீ திதி துதி தீ தொத்ததே!


திதத்த ததித்த: திதத்த ததித்த என்னும் தாள வாக்கியங்களை,
திதி: தன்னுடைய நடனத்தின் மூலம் நிலைபடுத்துகின்ற,
தாதை: உன்னுடைய தந்தையாகிய பரமசிவனும்,
தாத: மறை கிழவோனாகிய பிரம்மனும்,
துத்தி: புள்ளிகள் உடைய படம் விளங்கும்,
தத்தி: பாம்பாகிய ஆதிசேசனின்,
தா: முதுகாகிய இடத்தையும்,
தித: இருந்த இடத்திலேயே நிலைபெற்று,
தத்து: அலை வீசுகின்ற,
அத்தி: சமுத்திரமாகிய திருப்பாற்கடலையும் (தன்னுடைய வாசற்தலமாகக் கொண்டு),
ததி: ஆயர்பாடியில் தயிர்,
தித்தித்ததே: மிகவும் இனிப்பாக இருக்கிறதே என்று சொல்லிக்கோண்டு,
து: அதை மிகவும் வாங்கி உண்ட (திருமால்),
துதித்து: போற்றி வணங்குகின்ற,
இதத்து: போரின்ப சொரூபியாகிய,
ஆதி: மூலப்பொருளே,
தத்தத்து: தந்தங்களை உடைய,
அத்தி: யானையாகிய ஐராவதத்தால் வளர்க்கப்பட்ட,
தத்தை: கிளி போன்ற தேவயானையின்,
தாத: தாசனே,
திதே துதை: பல தீமைகள் நிறைந்ததும்,
தாது: ரத்தம் மாமிசம் முதலிய சப்த தாதுக்களால் நிரப்பப்பட்டதும்,
அதத்து உதி: மரணம் பிறப்பு இவைகளோடு கூடியதும்,
தத்து அத்து: பல ஆபத்துக்கள் நிறைந்ததும் (ஆகிய)
அத்தி தித்தி: எலும்பை மூடி இருக்கும் தோல்பை (இந்த உடம்பு),
தீ: அக்னியினால்,
தீ: தகிக்கப்படும்,
திதி: அந்த அந்திம நாளில்,
துதி தீ: உன்னை இவ்வளவு நாட்களாக துதித்து வந்த என்னுடைய புத்தி,
தொத்ததே: உன்னிடம் ஐக்கியமாகி விட வேண்டும்.

நடராச மூர்த்தியாகிய சிவபெருமானும், பிரம்மனும், இடைச்சோலையில் தயிர் உண்டு பாற்கடலையும் ஆதிசேசனையும் பாயலாகக் கொண்டு யோக நித்திரை செய்யும் திருமாலும் வணங்குகின்ற ஆனந்த மூலப் பொருளே, தேவயானையின் தாசனே, ஜனன மரணத்திற்கு இடமாய் சப்த தாதுக்கள் நிறைந்த பொல்லாத இந்த உடம்பை தீயினால் தகிக்கப்படும் பொழுது உன்னை துதித்து வந்த என் சித்தத்தை உன்னுடைய திருவடிக்கு நீ ஆட்படுத்த வேண்டும்.

(சேர, சோழ, பாண்டியன்னு பத்த வெச்சான்! இப்ப வைணவர், சைவர்னு பத்த வெக்க ஆரம்பிச்சுட்டான்?! யார்யா இவன்??)

8/07/2008

கோயம்பத்தூர் பெருமை

கன்னியரின் இதழழகைக் கோவை யென்பார்!
கனிமழலை முழுவடிவைக் கோவை யென்பார்!

தேன்தமிழில் திருக்கோவை நூலொன் றுண்டு
திறமான கவிதொகுத்த கோவை யுண்டு
இந்நகரைக் "கோவை" என ஏனழைத்தார்?
எழில்கோயம் புத்தூர் என்றேன் படைத்தார்!
என்கருத்தை யான்சொல்வேன்! தமிழறிந்தோர்
இதுதவறென் றுரைத்தாலும் தவறே யாக!

வஞ்சியர்கள் விளையாடும் வஞ்சி நாட்டின்
மன்னருக்கு மக்களென இருவர் வந்தார்
செஞ்சரத்து வில்லவனாய் வடபாற் சென்ற
செங்குட்டுவன் ஒருவன்! தமிழெடுத்து
அஞ்சிலம்பை யாத்தணித்த இளங்கோ அண்ணல்
அடுத்தொருவன்! இவ்விருவர் குறிப்பும் பார்த்து
பிஞ்சுமகன் அரசாவான் என்றுரைத்தான்
பேதையொரு வேதாந்தி! அதனைக் கேட்டு
முன்னவனே நாடாள வேண்டு மென்று
முடிமாற்றி உடைமாற்றி இளங்கோ அண்ணல்
தன்னாட்டின் எல்லையிலோர் குடிலமைத்தான்!
தனியாகச் சாத்தனுடன் தங்கிவிட்டான்,
அந்நாளில் இளங்கோவன் அமைத்த புத்தூர்
அங்கோவன் புத்தூராய்ப் பேரெடுத்து
இந்நாளில் கோயம் புத்தூ ராயிற்று!
இயல்பான உருமாற்றம் சரிதச் சான்று!

நீலமலைச் சாரலிலே நிலம் விரித்து
நெளிந்துவரும் தென்றலினை வளையவிட்டுப்
பால்போன்ற இதயத்தைப் பிள்ளை யாக்கிப்
பண்பினையும் அன்பினையும் துணைவர் ஆக்கி
வாழுங்கள் எனவிட்டாள் தமிழ் மூதாட்டி!
வாழ்கின்றார் கோவையிலே நல்ல மக்கள்!
சூழ்கின்ற பண்பெல்லாம் கோவையில்தான்!
சுவையெல்லாம் பண்பெல்லாம் கோவையில்தான்!

ஏனுங்க! என்னவுங்க! ஆமா முங்க!
இருக்குங்க! சரியிங்க! பாக்க வாங்க!
மானுங்க! வேணுங்களா! வாங்கிக் கோங்க!
மலைப் பழமும் இருக்குங்க! எடுத்துக்கோங்க!
தேனுங்க! கையெடுங்க! சாப்பிடுங்க!
திருப்பூரு நெய்யுங்க! சுத்த முங்க!
ஏனுங்க! எழுந்தீங்க! உக்காருங்க!
ஏ, பையா! பாயசம் எடுத்துப் போடு!

அப்பப்பா! கோவையிலே விருந்து வந்தால்
ஆறுநாள் பசிவேண்டும்! வயிறும் வேண்டும்!
தப்பப்பா! கோவைக்கு வரக்கூடாது!
சாப்பாட்டி னாலேயே சாக டிப்பார்!
ஒப்பப்பா இவருக்கு வள்ளல் ஏழ்வர்!
உயர்வப்பா இவர்நெஞ்சம் ஊற்றின் தேக்கம்!

கொடுத்தவரை பாடுவ தெம்குல வழக்கம்
கொடைக்கெனவே படையெடுத்தோர் புலவர் பல்லோர்
இனித்தசுவைப் பழங்கொடுத்த வள்ளல் பற்றி
இயன்றவரை பாடிவிட்டாள் ஔவைத்தேவி
தனித்தனியே கனிவைத்துத் தேனும் வைத்துத்
தந்தானைப் புகழ்ந்தானே கம்பன் அன்றும்
கொடுத்தவனைப் புகழ்வதுதான் புலவன் பாட்டு,
குறையெதற்கு? நானுமதைச் செய்து விட்டேன்.

----கவிஞர் கண்ணதாசன்

8/03/2008

மணிரத்தினம் அவர்களின் கவனத்திற்கு!


கரியுமில வாயுவை உள்வாங்குற ஒரு புதிய தாவரத்தை அறிமுகப்படுத்தி, ஒரு விழிப்புணர்ச்சிய உருவாக்குறதுக்கு நன்றி பாராட்டுறோம். ஆனா, அந்த நெகிழிக்(plastic) கோப்பைல தண்ணீர் ஊற்றி புகைப்படத்துக்கு கோணம் அளிப்பதில், நெகிழிப் பொருளைத் தவிர்த்து இருந்தா இன்னும் நல்லா இருந்து இருக்கும். அதுக்கு பதிலா மண்பாண்டம், சீனக்களிமண், உலோகத்தாலான கோப்பைய புழங்கச் சொன்னீங்கன்னா மேலும் உதவியா இருக்கும். இந்தப் பதிவு உங்க கவனத்துக்கு வந்தா, என்னோட முந்தைய பதிப்பையும் (நீ எதை உண்டு மயங்கினாய் தமிழா? ) தயவு கூர்ந்து படிக்க பணிவோடு வேண்டிக் கொள்கிறேன். இயற்கையைப் பேணுவதில் உங்களைப் போன்ற நல்லவர்கள், பிரபலமானவர்களின் உதவி பெரிதும் தேவை.

8/02/2008

அன்றைய நினைவுகள்

நாம உயர்நிலைப் பள்ளியில படிச்சுட்டு இருந்த காலம். எங்க ஊர்ப் பக்கம், பொள்ளாச்சி கோயம்பத்தூர் பக்கம், எல்லா மலையாளப் படங்களும் மலையாள தேசத்துல வெளியீடு செய்யுறப்பவே இங்கயும் வெளியிடுவாங்க. படங்களும் வெகு தரமா இருக்கும். His Highness Abdullah, வைஷாலி, ந்யூ டெல்லி, வரவேழ்ப்பு, வந்தனம், August-1, சித்ரம், தாழ்வாரம், அய்யர் தி கிரேட், ஒரு CBI டைரி குறிப்பு அப்படின்னு சொல்லிட்டே போகலாம். பிடிச்ச நடிகை லிசி(ஒரு ஈர்ப்பு தான்!), பிடிச்ச நடிகர் நெடுமுடி வேணு. ஆக, தமிழ் படங்களுக்கு கூட்டம் கொறைய ஆரம்பிச்சது. அப்புறம், மலையாளப் படங்களை, எங்க பக்கம் வெளியீடு செய்யுறதை சுத்தமா நிறுத்தி போட்டாங்க. நான் நிறைய மலையாள படங்கள் பாத்து இருக்குறேன். இதோ, அதில் சில பாடல்கள். நேரம் இருக்கும் போது கேட்டு பாருங்க, என் ரசனை எப்படி இருந்ததுனு.


வைஷாலி


வைஷாலி


His Highness Abdullah


பரதம்


நாமெல்லாம் விரும்புற செம்மீன்


சமீபத்திய 'முல்லா'

ஒட்டக்கூத்தரும் கம்பரும்

கம்பருக்கும் ஒட்டக்கூத்தருக்கும் நிரந்தரமாவே புலமைக் காய்ச்சல் இருக்குதுன்னு கர்ண பரம்பரைக் கதைகள் சொல்லுதுங்க. ரெண்டு பேருமே இராமாயணம் எழுதினதாகவும், அதுல ஒட்டக்கூத்தர் தன்னோடது கம்பரோட படைப்புக்கு இணையா நல்லபடியா வரலைங்கிறதால, தன்னோட படைப்பை எரிச்சிட்டதாகவும் சொல்லுறாங்க.

ஒரு நாள் ஆத்தோட படித்துறையில ஒட்டக்கூத்தரும் கம்பரும் தள்ளி தள்ளி நின்னு கால்மொகங் கழுவிட்டு இருந்தாங்களாம். அப்ப, தண்ணி ஒட்டக்கூத்தர் நின்னுட்டு இருந்த இடத்துல இருந்து, கம்பர் நின்னுட்டு இருந்த இடத்துக்கு போய்ட்டு இருந்துச்சாம். அதப் பாத்த ஒட்டக்கூத்தர் குசும்புத்தனமா, 'கம்பரே நான் கழுவின கழுநீர்தான் உமக்கு வருது பாத்தீரா'னு கிண்டலா கேட்டாராம்.

அதக் கேட்ட கம்பர், "அட ' நீரே' வந்து என் காலில் விழுந்தால், நான் என்ன செய்வது?"னு சொன்னாராம் பதிலுக்கு!

இதைத்தான், "நாய்க் கடிக்க, செருப்பு அடிக்க"னு சொல்லுறாங்களோ?